Image result for lost coin parable

லூக்கா 15: 8 முதல் 10 வரை

பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.

இயேசு ஒருமுறை தொடர்ச்சியாக மூன்று உவமைகளைப் பேசினார். முதலாவது காணாமல் போன ஆடு, இரண்டாவது காணாமல் போன திராக்மா மூன்றாவது காணாமல் போன மகன். இறைவன் தனது மக்கள் மீது கொண்டிருக்கும் அன்பும், மக்கள் அவருடைய அன்பில் வாழவேண்டும் ஏக்கமுமே அந்த உவமைகளில் வெளிப்பட்டன.

இந்த உவமையில் தொலைந்து போன வெள்ளிக்காசான திராக்மாவைக் கண்டுபிடிக்கும் ஒரு பெண்ணின் உவமையை இயேசு பேசுகிறார். ஒரு திராக்மா என்பது மிகவும் குறைவான ஒரு தொகை. இன்றைய மதிப்பில் ஐம்பது ரூபாய் என வைத்துக் கொள்ளலாம். அந்த நாணயத்தைத் தொலைத்த பெண் உடனடியாக அதைத் தேடிக் கண்டுபிடிக்க பரபரப்பாய் இருக்கிறாள்.

அன்றைய பாலஸ்தீனத்தில் ஒரு வழக்கம் இருந்தது. ஏழை மணப்பெண்கள் தங்களுடைய திருமணத்திற்காக பத்து வெள்ளிக்காசுகளைச் சேமிப்பார்கள். இந்த வெள்ளிக்காசுகளை மாலையாக கழுத்தில் அணிவிப்பார் மணமகன். சில வேளைகளில் மணமகனே அந்த வெள்ளிக்காசுகளை தருவதும் உண்டு. நமது ஊர் வழக்கப்படி தாலி அது எனலாம்.

எனவே விலையில் குறைவாய் இருந்தாலும் அது உணர்வுபூர்வமாக மிக உயர்ந்த விலையுடையது. பாலஸ்தீன மக்களுக்கு மிகவும் பரிச்சயமான அந்த உவமையையே இயேசு சொல்கிறார்.

அ, முதலில் காசு பத்திரமாக இருக்கிறது,
ஆ, பின்னர் தொலைந்து போகிறது,
இ,தொலைந்து போனதை அந்தப் பெண் உணர்கிறார்,
ஈ, தேட வேண்டும் என முடிவு செய்கிறார்,
உ, உடனே அதை செயல்படுத்துகிறார்,
ஊ, கவனமாகத் தேடுகிறார்,
எ, விளக்கைக் கொளுத்தி தேடுகிறார்,
ஏ, வீட்டைக் கூட்டி தேடுகிறார்,
ஐ, கண்டு பிடிக்கும் வரை தேடுகிறார்,
ஒ, கண்டு பிடித்ததும் மகிழ்கிறார்,
ஓ, அண்டை வீட்டாருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்,
ஔ, அதை பத்திரமாக வைக்கிறார்,
ஃ, மீண்டும் தொலைந்து விடாமல் பாதுகாக்க முடிவெடுத்திருக்கலாம்.

என இத்தனை விஷயங்களும் நமக்கு படிப்படையான ஆன்மீக மீட்பை விளக்குகிறது. அல்லது தொலைந்து போன நமது ஆன்மீக வாழ்க்கையை எப்படி மீட்டெடுப்பது என்பதை விளக்குகிறது.

இந்த உவமை சில படிப்பினைகளை நமக்குத் தருகிறது.

1. தனது அன்பில் நிலைத்திருக்கின்ற ஒரு மனிதர் தொலைந்து போய்விட்டால் இறைமகன் அதை எளிதில் விட்டு விடுவதில்லை. உடனடியாக தனது ஆத்மார்த்தமான முயற்சியை வெளிப்படுத்தி அந்த மனிதனை மீட்கும் வழிகளை யோசிக்கிறார். அந்த மனிதர் உலகின் பார்வைக்கு ஒரு திராக்மா எனுமளவுக்கு மிகவும் மலிவானவனாக இருந்தாலும் இறைவன் பார்வையில் மிக உயர்ந்தவன். காரணம் இறைவன் பார்வையில் நாம் அனைவருமே விலைமதிப்பற்ற அவருடைய பிள்ளைகள். இறைவன் நம்மை உணர்வு பூர்வமாக பொதிந்து வைத்திருப்பவர். எனவே தான் நாம் விலகும்போது அவர் பரிதவிக்கிறார். இங்கே இறைவனை ஒரு பெண்ணுடன் ஒப்பிடுவதன் மூலமாக ஆண்பெண் வெறுபாடுகள் விண்ணக வாழ்வில் இல்லை என்பதையும், இறைவனின் பார்வையில் அனைவரும் சமமே என்பதையும் மறைமுகமாக விளக்குகிறார்.

2. இறைவனின் அன்பில் இருக்கின்ற நபர்களில் ஒரு நபர் தொலைந்து போகிறார். தான் தொலைந்து போனதையே அந்த நாணயம் அறியவில்லை. அவரை யாரேனும் கண்டெடுத்தால் மட்டுமே மீட்பு உண்டு. நாணயத்தினால் சொந்தமாய் எதையும் செய்து விட முடியாது. அத்தகைய சூழலில் இறைவன் நம்மைத் தேடி வருகிறார். கண்டடைந்தால் அவர் அடைகின்ற மகிழ்ச்சி அளவிட முடியாததாய் இருக்கிறது. ஒரு திருச்சபையில் இருக்கின்ற நபர்களில் ஒருவர் இதயத்தால் தொலைந்து போகலாம். தான் தொலைந்து போனதையே அறியாமல் இருக்கலாம். அவரை இறைவார்த்தை வெளிச்சத்தில் அவருக்கே காட்டுவதும் நமது கடமையே.

3. நாணயம் “வீட்டில் தான்” தொலைந்து போகிறது. நமது வீட்டில் உள்ள நபர்களில் ஒருவர் இறைவனின் அன்பை விட்டு விலகிச் செல்வதைக் கூட இது குறிக்கலாம். சின்ன வயதில் இறைவனோடு இணைந்து இருந்து விட்டு, வளர வளர அவரது அன்பை விட்டு விலகி, தொலைந்தே போன வாழ்க்கை அது. அந்த நபரை நாம் தேடித் தேடிக் கண்டெடுத்து, மீட்பின் பாதையில் கொண்டு வரவேண்டும் என்பதை இந்த வாசகம் குறிப்பால் உணர்த்துகிறது.

4. நாணயம் தொலைந்ததை அறிந்ததும் அந்தப் பெண் பதட்டமடைகிறார். இரவு நேரத்தில் தான் அதை அறிந்து கொள்கிறார். சரி, விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என அவர் நினைக்கவில்லை. அந்த இரவிலேயே விளக்கை ஏற்றுகிறார். அந்தக் காலத்தில் வீட்டின் தரையில் வெப்பம் தாக்காமல் இருக்க வைக்கோல் போன்றவற்றை போட்டு வைப்பதுண்டு. அவற்றுக்கு இடையில் நாணயம் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்பது அவருக்குப் புரிகிறது. அது எளிதான வேலையல்ல. நீண்ட நேரமாகலாம். தரையில் கிடக்கும் வைக்கோல், புல்லை எல்லாம் வெளியேற்றி இன்ச் இஞ்சாகத் தேடவேண்டும். அந்த கடின வேலைக்கு அந்தப் பெண் தயாராகிறாள். அதுவும் காலைவரை காத்திருக்காமல் உடனடியாகக் களத்தில் குதிக்கிறார்.

5. விளக்கைக் கொளுத்துதல் என்பது இறைவார்த்தை வெளிச்சத்தை பயன்படுத்துவதன் குறியீடு. தொலைந்து போன ஒருவரை இறைவனிடம் கொண்டுவர இறை வார்த்தைகள் தான் நமக்குத் துணை புரியும். இறை வார்த்தையின் வெளிச்சம் படரப் படர இருள் விலகுகிறது. இருள் விலகும் போது இருளுக்குள் தொலைந்து கிடப்பவர்கள் வெளிச்சத்துக்கு வருகிறார்கள். ஒருவர் பாவ வழியில் தொலைந்து போனால் அவரைக் கண்டுபிடிக்க ஒரே வழி இறைவார்த்தை வெளிச்சமே.

6. கவனமாகத் தேடுகிறாள் அந்தப் பெண். “தேடுதல்” ஆன்மீக வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம். நமது வாழ்க்கையில் நாம் ஆன்மீகத்தை விட்டு விலகிச் செல்லும் இடங்கள் அனேகம். அவை எவை என தேடிக் கண்டுபிடிக்க கவனம் மிக அவசியம். நமது வீட்டில் இருப்பவர்கள் தொலைந்து போனால், திருச்சபையில் இருப்பவர்கள் தொலைந்து போனால், என எல்லா சூழல்களிலும் மிக முக்கியத் தேவை கவனமுடன் தேடுதல். இறைவார்த்தை வெளிச்சத்துடன் தேடுதல்.

7. வீட்டைப் பெருக்குதல் என்பது குப்பைகளை விலக்குதல் எனலாம். உலக கவலைகள், உலகைக் குறித்த சிந்தனைகள், உலக இச்சை போன்றவற்றின் அடியில் புதைந்து கிடக்கும் மனிதர்களை வெளிக்கொணர அந்த குப்பைகளை அகற்றுதல் முக்கியமான தேவை. வீட்டைப் பெருக்கும் போது அந்த நாணயம் துடைப்பத்தில் பட்டு ஒலி எழுப்பலாம். தன்னை உணர்கின்ற தருணம் அது. தான் தொலைந்து போனதையே அறியாத மனிதர் ஒரு வெளிச்சத்தில், ஒரு தூய ஆவியானவரின் தொடுதலில் தன்னை உணர முடியும்.

8. அந்தப் பெண் இரவில் விளக்கைக் கொளுத்தி நாணயத்தைத் தேட ஆரம்பிக்கிறாள். வெகு நேரம் தேடியிருக்கக் கூடும். அந்த பெண் நாணயத்தைக் கண்டு பிடித்தபோது நள்ளிரவைத் தாண்டியிருக்கலாம், அதிகாலை 2, 3 மணியாகக் கூட இருக்கலாம். கண்டு பிடித்த “உடனே” அவள் அண்டை வீட்டாரையெல்லாம் எழுப்புகிறாள். ஆனந்தத்தில் ஓடுகிறாள். நள்ளிரவு என்றும் பார்க்காமல், எங்கும் ஓடித் திரிகிறாள். அந்த அளவுக்கு ஆனந்தம் அவளை ஆட்கொள்கிறது. காலையில் எழுந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என அவள் நினைக்கவில்லை. அவளுடைய பரவசத்தின் உச்சம் அவளை அப்படி அலைய வைக்கிறது. இறைவனும் இப்படித்தான். தொலைந்து போன ஒரு நபரைக் கண்டு பிடிக்க முடியும் போது அளவற்ற ஆனந்தம் அடைகிறார்.

9. இறைவன் பார்வையில் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள். ஒருவர் தொலைந்து போனால் இன்னொருவரை வைத்து அந்த இடத்தை நிரப்ப அவர் நினைப்பதில்லை. ஒன்று தானே தொலைந்தது மீதி 9 இருக்கிறதே என சும்மா இருப்பதில்லை. ஒவ்வொருவரும் இறைவனுடைய கொடையாக இந்தப் பூமியில் வருகின்றனர். அவர்கள் அனைவரும் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றவேண்டும், அவரது அன்பின் நிலைக்க வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார்.

10. தனது மாலையிலிருந்து ஒரு நாணயம் தொலைந்து போனதை அந்த பெண் சட்டென கண்டுகொள்கிறார். தனக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவில் ஒரு விரிசல் வந்ததை அவள் கண்டுகொள்கிறாள். அப்படி ஒரு சூழல் எழும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த உவமை சொல்கிறது எனலாம். அப்படிப்பட்ட சூழலில் உடனடியாக இறைவார்த்தை எனும் விளக்கைக் கொளுத்தி, தூய ஆவியின் துணையைக் கொண்டு, மனதில் இருக்கும் குப்பைகளைக் கூட்டி வெளியேற்றி மீண்டும் இறைவனின் அன்பில் இணையவேண்டும். இறைவனுக்கும் நமக்கும் இடையேயான உறவு ஒரு சின்ன பிரிவு வந்தால் கூட உடனடியாக அதை நிவர்த்தி செய்ய வேண்டும். அப்போது மீட்பினைத் தவற விட மாட்டோம்.