பால்யங்களின் பகலில்

Related image
தம்பிக்கு
ஆவடி டேங்க் ஃபேக்டரியில்
வயர்களோடு
முரண்டு பிடிக்கும்
வாழ்க்கை.

இன்னொரு தம்பி
அம்பத்தூர்
தொழிற் பேட்டையில்
தெறிக்கும்
இரும்பும் பொறிகளோடு
கருகிக் கலங்கும் வாழ்க்கை

தங்கைகளும்
அக்காக்களும்
அப்பா, அம்மாவைப் போல !

கையில் பிரம்புடனும்
கண்ணில் அன்புடனும்
பாடம் சொல்லித் தரும்
டீச்சர் வேலை.

மிச்சமுள்ள‌
ஒரு அக்காவுக்கு
போலீஸ் கணவனோடு
வழக்காடும்
வழக்கமான வாழ்க்கை.

உதறிய கையின்
சிதறிய பருக்கைகளாய்
இடம் மாறினாலும்,
ஆண்டுக்கு ஒரு முறை
கிராம வீட்டில்
சந்தித்துக் கொள்கிறோம்.

எனினும்
நள்ளிரவு தாண்டும்
எங்கள் அரட்டை உரையாடல்கள்
பால்ய கால‌ப்
படிக்கட்டுகளைத்
தாண்டிச் செல்வதேயில்லை

*

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *