இயேசு சொன்ன உவமைகள் : 26 செம்மரியா, வெள்ளாடா !

Image result for jesus final judgement sheep and goat

“வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.

ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,

‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?’ என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை’ என்பார்.

அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.

Image result for jesus final judgement sheep and goat

இயேசு கடைசியாகச் சொன்ன உவமை இது ! இதை உவமை என்று சொல்வதை விட உண்மையாய் நடக்கப் போகும் நிகழ்ச்சியின் ஒரு காட்சி என சொல்லலாம். செம்மறியாடு, வெள்ளாடு எனும் உவமைகள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இதை உவமை என எடுத்துக் கொள்ளலாம்.

சுவர்க்கம் என்பதும், நரகம் என்பதும் முடிவில்லாதவை. சுவர்க்கத்தில் நுழைபவர்கள் அதன்பின் எந்தக் கவலையும் இன்றி நிலைவாழ்வை இறைமகனோடும், இறைமக்களோடும் கொண்டாடுவார்கள். முடிவில்லா நரகத்துக்குச் செல்பவர்களோ வேதனையில் முடிவில்லா அழுகையில் அமிழ்வார்கள். சுவர்க்கம் எவ்வளவு சத்தியமோ, அந்த அளவுக்கு நரகமும் உண்டு என்பதே புரிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம்.

இந்த உவமையும் இறைமகனின் இரண்டாம் வருகையைக் குறித்த ஒரு உவமையே. இரண்டாம் வருகையில் எப்படி நியாயத் தீர்ப்பு இருக்கும் என்பதை இந்த உவமை விளக்குகிறது.

முதல் முறை இறைமகன் வந்ததற்கும், இரண்டாம் முறை அவர் வரப்போவதற்கும் சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.

முதல் முறை அவர் மனிதனாக வந்தார், அடுத்த முறை அவர் நீதிபதியாக, நியாயம் தீர்க்கும் நடுவராக வருவார்.

முதலாவது அவர் மண்ணில் இறங்கி வந்தார், அடுத்த முறை விண்ணில் தான் அவரது வருகை இருக்கும்.

முதல் முறை அவர் தாழ்மையின் வடிவெடுத்து, தொழுவத்தில் வைக்கோல் கூட்டில் வந்து பிறந்தார். அடுத்த முறையோ மாட்சிமை மிகு அரியணையில் தான் அவர் அமர்ந்திருப்பார்.

முதல் முறை வந்தபோது இயேசு மக்களைத் தேடிச் சென்றார். அவர்களுடைய தேவைகளைச் சந்தித்தார். அவர்களோடு உரையாடினார். அவர்களுக்கு வாழ்க்கை நெறியைக் காட்டினார். இரண்டாம் வருகையில், அவர் அமர்ந்திருக்க மக்களினங்கள் எல்லோரும் அவரிடம் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்.

முதல் முறை வந்தபோது மக்களை ஒன்று சேர்க்கச் சொன்னார் இயேசு. உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள். எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் என்றார். இப்போதோ, சேர்ந்தவர்களிடம் பிரிவினையை நிகழ்த்துகிறார்.

முதல் வருகையின் போது இயேசு தனது பணியை நிறைவேற்ற ஓய்வின்றி உழைத்தார். இரண்டாம் வருகையில் நிதானமாய் இருக்கையில் அமர்ந்திருப்பார்.

இந்த பகுதி விவிலியத்தின் மிக முக்கியமான பகுதி எனலாம். நமது விண்ணக வாழ்க்கைக்கான பாடம் இதில் இருக்கிறது. இந்த பகுதி சொல்லும் சில முக்கியமான செய்திகளைப் பார்ப்போம்.

Related image1. நியாயத் தீர்ப்பின் ஆடுகளைப் பற்றி மட்டுமே இந்த உவமை பேசுகிறது. அதாவது வெள்ளாடுகளையும் செம்மரியாடுகளையும் பிரிக்கின்ற நிகழ்வு. இயேசுவை ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்களுக்கான தீர்ப்பாக இதைக் கொள்ளலாம். ஆடுகளுக்கும், ஓநாய்களுக்கும் இடையேயான பிரிவோ அல்லது ஆடுகளுக்கு வேறெந்த விலங்குகளுக்கும் இடையேயான பிரிவு அல்ல இது. எனவே இதை உண்மையாகவே இறைவனின் சித்தப்படி வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்கும், போலியான வாழ்க்கை வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரிவினை எனலாம்.

Related image2. இறையாட்சி உலகம் தோன்றிய போதே உருவாக்கப்பட்டது எனும் மாபெரும் உண்மை. இது இறைவனின் அன்பை வெளிப்படுத்துகிறது. இது மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது. அதில் நாம் அனைவரும் செல்லவேண்டும் என்பதே இறைவனின் சித்தமாக இருக்கிறது. அதற்காகத் தான் அவர் தனது மகனையே உலகிற்கு அனுப்பி வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என வாழ்ந்து காட்டினார். நமது பாவங்களுக்காக சிலுவையில் உயிர்விட்டு மீட்பையும் நீட்டினார். தந்தை உருவாக்கி வைத்த வீட்டுக்குச் செல்லும் மகனின் ஆனந்த மனநிலையோடு நாம் அதை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்குரிய வாழ்க்கையை வாழவேண்டும்.

Related image3. இல்லை என நம்மிடம் கையேந்தும் மனிதர்களுக்கு சாக்குப் போக்கு சொல்லாமல் உதவும் மனநிலையை இறைமகன் இயேசு எதிர்பார்க்கிறார். நாம் உதவுகின்ற நபர்களில் இறைவனைக் காண வேண்டும். ஏழைகளின் மீது கரிசனையும், இரக்கமும் இல்லாதவர்களுக்கு விண்ணக வாழ்வு கிடைப்பதில்லை என்பதை இந்த உவமை விளக்குகிறது.”சிறியவர்” என இயேசு சொல்வது நம்மிடம் உதவி கேட்கும் அத்தனை பேரையும் குறிக்கும். இயேசு வாழ்ந்த காலத்தில் பாகுபாடு காட்டாமல் உதவினார். அயலான் யார் எனும் உவமையில் அத்தகைய பேதங்கள் உடைக்கப்பட வேண்டும் என்றே போதித்தார். எனவே உதவும்போது பாகுபாடு, பாரபட்சம் பாராமல் உதவுவோம்.

Related image4. செயல்கள் நம்மை மீட்புக்குத் தகுதி உடையவர்கள் ஆக்காது. ஆனால் மீட்பு நம்மை செயல்களைப் செய்பவர்களாக மாற்ற வேண்டும். செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம். மனம் திரும்பியதைக் கனிகளில் காட்டவேண்டும் என்பதே இறைவனின் அழைப்பு. வெறுமனே ஆண்டவரே, ஆண்டவரே என அழைக்காமல் தந்தையின் விருப்பப்படி செய்யவேண்டும் என்ற இயேசுவின் போதனை இங்கே மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

Related image5. பிறருக்கு உதவும் குணம் இயல்பாகவே நம்மிடமிருந்து வரவேண்டும். யாருக்கெல்லாம் உதவி செய்கிறேன் என கணக்கு பார்க்கக் கூடாது. உதவி செய்தால் இறைவனிடமிருந்து பாராட்டு கிடைக்குமா என்பதைக் கூட நினைக்கக் கூடாது. தேவை என வருபவர்களுக்கு உதவிகளைத் தயங்காமல் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் இறைவன் வந்து கேட்கும் போது, “ஐயோ அப்படியெல்லாம் செய்தேனா ? ஞாபகம் இல்லையே” என வியப்பாய் கேட்கும் நிலை உருவாகும்.

Related image6. இடப்பக்கம் நிற்பவர்களோ “எப்போது உம்மைக் கண்டோம், எப்போது உதவவில்லை” என்று கேட்கிறார்கள். அவர்கள் இறைவன் நேரடியாக வந்தால் உதவலாம் என நினைப்பவர்கள். அல்லது கிறிஸ்தவ முலாம் பூசப்பட்டவற்றுக்கு உதவி செய்பவர்கள். அல்லது மத ரீதியான செயல்களை முன்னிலைப்படுத்தவர்கள். அவர்களுடைய மனதில் தாங்கள் இதுவரை செய்த உதவிகளின் பட்டியல் தயாராக இருக்கும். அதனால் தான் அவர்கள் கடவுளின் கேள்வியால் ஆச்சரியப்படுகிறார்கள். “உம்மைக் காணவே இல்லையே” என அங்கலாய்க்கின்றனர். “கண்ணில் காணும் சகோதரனுக்கு அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது எனும் இயேசுவின் போதனையை அவர்கள் மறந்துவிட்டனர்.

Related image7. இயேசு தனது பட்டியலில் பசி, தாகம், அன்னியன், உடை, நோய், சிறை என வரிசைப்படுத்துகிறார். இதில் இவற்றில் நோயுற்றிருப்பவரையும், சிறையில் இருப்பவரையும் நாம் தான் தேடிச்சென்று பார்க்க வேண்டும். நம்மைத் தேடி வராதவர்கள் கூட தேவையில் இருக்கிறார்கள் என அறிந்தால் சென்று உதவ வேண்டும். அதுவும் நிராகரிப்பின் வாசலில் இருப்பவர்களும், அவமானத்தின் நிலையில் இருப்பவர்களும் நிச்சயம் நம்மால் அரவணைக்கப்பட வேண்டும் என இயேசு வலியுறுத்துகிறார். மற்ற உவமைகளிலெல்லாம் தலைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றாத ஊழியர்களை நாம் பார்க்கிறோம். இந்த உவமையில் கட்டளையே போடாத தலைவரைப் பார்க்கிறோம். அதாவது, இவையெல்லாம் நாம் இயல்பாகவே செய்ய வேண்டும் என்பதையே இயேசு வலியுறுத்துகிறார்.

Related image
8. “அகன்று போங்கள்” என இயேசு இடப்பக்கம் நிற்பவர்களிடம் சொல்கிறார். மிகப்பெரிய துயரத்தின் நிலை இது தான். இவ்வுலகில் வாழ்கின்ற காலத்தில் நாம் இயேசுவை விட்டு அகன்று போனால், இரண்டாம் வருகையில் இயேசு நம்மிடம் “அகன்று போங்கள்” என சொல்வார். எனவே இந்த வாழ்வில் நாம் இறைவனை நாம் நெருங்கி வாழும் வாழ்க்கை வாழ வேண்டும். அதுவே நம்மை இரண்டாம் வருகையில் இறைவனை நெருங்க வைக்கும்.

Related image9. “அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்” என இடப்பக்கம் நிற்பவர்களிடம் இறைவன் சொல்கிறார். அழியா நெருப்பை இறைவன் மனிதருக்காய் உருவாக்கவில்லை. அலகைக்காய் உருவாக்கினார். ஆனால் மனிதர்கள் இறையை விட்டு சாத்தானின் வழியில் செல்லும் போது அவர்கள் அலகையின் இடத்துக்கே சென்று சேர்கிறார்கள். நமது வாழ்க்கை இறைவனின் போதனைப்படி நடந்தால் நிலை வாழ்வை அடைகிறோம், அலகையின் வழியில் இருந்தால் அழியா நெருப்பில் சேர்கிறோம்.

Related image10. செம்மரியாடு ஆயனை எப்போதுமே பின் தொடரும் இனம். வெள்ளாடு அப்படியல்ல, பின்னால் இருந்து ஒருவர் தள்ளிக் கொண்டே செல்ல வேண்டும். செம்மரியாடு, வாழும் போதே பிறருக்கு தனது ரோமத்தின் மூலமும் பயன்கொடுக்கும் ஆடு. வெள்ளாடு அப்படியல்ல. செம்மரியாடு கூட்டமாக இணைந்து வாழும், ஆயனின் அனுமதியின்றி எங்கும் செல்லாது. வெள்ளாடு அப்படியல்ல, வளங்களைக் கண்டால் வரிசை தாண்டி ஓடும். இப்படி ஏராளமான வேறுபாடுகள் இரண்டு இனத்துக்கும் உண்டு. எனவே தான் இறைவன் செம்மரியாடை தனது மந்தைக்கும், வெள்ளாட்டை உலகத்தின் கவர்ச்சியால் இழுக்கப்பட்டு ஓடும் மனிதருக்கும் ஒப்பிடுகிறார்.

2 thoughts on “இயேசு சொன்ன உவமைகள் : 26 செம்மரியா, வெள்ளாடா !

  1. d says:

    Arumai Sago! Migavum arumai!! 🙂

    1. writerxavier writerxavier says:

      Thank You Bro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *