இயேசு சொன்ன உவமைகள் 25 : தாலந்து உவமை

இயேசு சொன்ன உவமைகள் 25 : தாலந்து உவமை

மத்தேயு 25 : 14 முதல் 30 வரை

Image result for talents parable

“விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும்⁕ கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்’ என்றார்.

ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார்.

அதற்கு அவருடைய தலைவர், ‘சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்’ என்று கூறினார்.

‘எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று அவர் கூறினார்.

=

தனது இரண்டாம் வருகையைக் குறித்தும், அதற்கு நாம் தயாராக வேண்டிய விதம் குறித்தும் இயேசு பல்வேறு உவமைகளை சீடர்களுக்குப் போதித்தார். நினையாத நேரத்தில் இறைவனின் இரண்டாம் வருகை இருக்கும். அதற்குத் தயாராக இருக்க வேண்டும், விழிப்பாக இருக்க வேண்டும் போன்றவற்றைத் தனது போதனைகளின் மையமாகக் கொண்டிருந்தார்.

தான் இந்த உலகை விட்டுப் பிரிய வேண்டிய நேரம் நெருங்கி வந்ததை இயேசு உணர்ந்திருந்தார். தனது பிரிவு சீடர்களை வலுவிழக்கச் செய்யக் கூடாது என்பதில் அவருடைய கவலை இருந்தது. ஆன்மீக வழியை விட்டு விலகி விடக் கூடாது எனும் பதட்டமும் இருந்தது. எனவே தான் சீடர்களுக்கு மீண்டும் மீண்டும் இரண்டாம் வருகையைக் குறித்து அவர் பேசினார். இரண்டாம் வருகை நிச்சயம் நடக்கும் என்பதை இவை வலியுறுத்துகின்றன.

இந்த தாலந்து உவமையும் இரண்டாம் வருகையையும், அதை எப்படி எதிர்நோக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறது.

இந்த உவமை சொல்லித் தரும் சில சிந்தனைகளைப் பார்ப்போம்.

Image result for talents parable1. நமது திறமைக்கு ஏற்ப இறைவன் தாலந்துகளைத் தருகிறார். தாலந்து என்பது திறமையல்ல, நமது திறமைக்கு ஏற்ப நமக்குத் தரப்படுகின்ற பணிகள் அல்லது பொறுப்புகள். நமது திறமைக்கு அதிகமான விஷயங்களை இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. எப்படி நம்மால் தாங்க முடியாத சோதனைகளை இறைவன் தருவதில்லையோ, அதே போல நம்மால் செய்ய முடியாத செயல்களைச் செய்ய நம்மை அவர் கட்டாயப்படுத்துவதில்லை.

Image result for talents parable2. நம்மிடம் தரப்படுபவை இறைவனின் உடமைகளே. நமக்குத் தரப்படும் எதையும் நாம் இறைவனின் பொருட்கள் எனும் சிந்தனையில் மட்டுமே அணுக வேண்டும். அப்போது தான் அதை நல்ல முறையில் பராமரிக்கவும், வளர்த்தெடுக்கவும் நமக்கு உத்வேகம் கிடைக்கும். நமது நேரம், திறமைகள், வாய்ப்புகள், பணிகள், செல்வங்கள், குடும்பம் எல்லாமே இறைவன் தந்தவை எனும் சிந்தனையில் அவற்றைப் பராமரிக்க வேண்டும்.

Image result for talents parable3. எல்லாவற்றுக்கும் இறைவன் கணக்கு கேட்பார் எனும் சிந்தனை நமக்கு இருக்க வேண்டும். அப்போது தான் இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் நமது வாழ்க்கை அமையும். எந்த ஒரு செயலைச் செய்தாலும் இதன் பயனை நான் இறைவனுக்குக் கொடுக்க முடியுமா ? என யோசிக்க வேண்டும். விண்ணகப் பயன்களா, மண்ணகப் பயன்களா எனும் கேள்வி ஒவ்வொரு செயலின் போதும் நம்மிடம் எழ வேண்டும். “விண்ணகத்தில் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்” எனும் இறைவனின் கட்டளை நம்மை இறைவனுக்கு ஏற்புடைய செயல்களைச் செய்ய உற்சாகமூட்டட்டும்.

Image result for talents parable4. நம்பிக்கைக்கு உரிய பணியாளர்களாய் நாம் இருக்க வேண்டும். அப்போது தான் இறைவன் தருகின்ற பணியை நாம் புரிந்து அதன்படி செய்ய முடியும். தலைவன் பணியாளர்களுக்கு பணம் கொடுத்த போது என்ன செய்ய வேண்டும் என சொல்லவில்லை. அவர்கள் சரியானவற்றைச் செய்வார்கள் எனும் நம்பிக்கை அவரிடம் இருந்தது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். அப்போது தான் நல்ல பணியாளர் எனும் இறைவனின் பாராட்டு கிடைக்கும். “என்னைக் காணாமலேயே விசுவசிப்பவன் பாக்கியவான்” என இயேசு சொன்னார். அதே போல, “நான் சொல்லாமலேயே என் விருப்பத்தை அறிந்து கொள்பவன் பாக்கியவான்” என்பதே அவரது சிந்தனை. இறைவன் சொல்லாமலேயே அவர் விரும்புவதை அறிந்து கொள்ள எப்போதும் இறைவனுடன் இணைந்திருப்பதும், இறைவார்த்தையோடு இணைந்திருப்பதும் அவசியமாகிறது.

Image result for talents parable5. ஐந்து தாலந்தும், இரண்டு தாலந்தும் கொண்டவர்கள் அப்படியே நூறு மடங்கு பலனைக் கொடுத்தார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப் போல !!. தலைவர் மகிழ்ச்சியடைகிறார். இறைவனுடைய மகிழ்ச்சி நம்முடைய செயல்களால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. நாம் இறைவன் விரும்பும் செயல்களைச் செய்யும் போது இறைவன் மகிழ்கிறார். அவரது மகிழ்ச்சியில் நம்மையும் இணைத்துக் கொள்கிறார். இறைவனை மகிழ்ச்சிப்படுத்தும் வாழ்க்கையே வாழ்க்கையிலேயே மிக மிக உயர்ந்த வாழ்க்கை

Image result for talents parable6. ஒரு தாலந்து பெற்றவர் அந்த பணத்தை பயன்படுத்தவே நினைக்கவில்லை. அதை மண்ணில் புதைத்து வைத்தார். அதாவது இருளுக்குள் அதை தள்ளி விட்டார். அதை விட்டு விட்டு தன்னுடைய உலக வாழ்க்கையில் அவர் கவனம் செலுத்துகிறார். தலைவர் வந்தபோது தடுமாறுகிறார். தனது தவறை ஒத்துக் கொள்ளாமல் அதை நியாயப்படுத்த முயல்கிறார். தனது தவறுக்கு தலைவருடைய குணாதிசயத்தையே கேள்வி எழுப்புகிறார். நமது வாழ்க்கையிலும் இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழும்போது இறைவன் வந்ததும் ஓடிப் போய் கணக்கு ஒப்புவிக்கிறோம். இல்லையேல், நமது தவறை நியாயப்படுத்த ஆதாமைப் போல இறைவனையே குற்றவாளியாக்குகிறோம். அது மிகப்பெரிய பாவம்.

Image result for talents parable7. ஒரு தாலந்து பெற்றவர் அதைப் பயன்படுத்தி ஒரு வேளை படுதோல்வி அடைந்திருந்தால் கூட இறைவனின் பாராட்டைப் பெற்றிருக்கலாம். பயன்படுத்தித் தோற்றுப் போய் இறைவனிடம் சரணடைதலே பயன்படுத்தாமல் வீண் வாழ்க்கை வாழ்வதை விட மிகவும் சிறப்பானது. தலைவன் தந்த தாலந்து நீண்ட காலத்துக்குப் பின் அதன் மதிப்பையும் இழந்து விடும். இறைவன் தரும் எதையும் அவருக்குப் பிரியமான வகையில் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

Image result for talents parable8. சோம்பேறியே ! என தலைவன் பயனற்ற பணியாளனை அழைக்கிறார். சோம்பல் நமது வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடுகிறது. வளர்சிகளையெல்லாம் அது பாதிக்கிறது. உற்சாகமான, சுறுசுறுப்பான பணியாளரையே இறைவன் விரும்புகிறார். சோம்பல் தான் இறைவனுக்கு பிரியமான பணிகளைச் செய்ய விடாமல் நம்மை தடுக்கிறது. உற்சாகமாய் இருக்கும்போது நமது உடலும், உள்ளமும் பணிசெய்யும் தீவிரத்தைப் பெற்று விடுகிறது. இறைவனின் பணியைச் செய்ய வேண்டுமெனில் சோம்பேறியாய் இருக்கக் கூடாது என்பதை இறைவன் வலியுறுத்துகிறார்.

Image result for talents parable9. பொல்லாத பணியாளனே எனவும் பயனற்ற பணியாளரை அழைக்கிறார் தலைவர். குணாதிசயம் பொல்லாததாய் இருந்தால், தலைவன் இல்லாத நேரத்தில் அவர் தவறான வழிகளில் தான் செல்வார். யாரும் இல்லாத நேரத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதே நமது உண்மையான குணாதிசயம். நாம் பொல்லாதவர்களாய் இருக்கும்போது “விதைக்காத இடத்தில் அறுப்பவர்” என இறைவனை குற்றம் சாட்டுகிறோம். “அதாவது வேலை தருகிறீர்கள் அதற்கு எந்த உதவியும் செய்வதில்லை” என்றும் பொருள் கொள்ளலாம்.

Image result for talents parable10. தலைவரிடம் பணியாளர்கள் எந்த அளவுக்கு நெருக்கமாக அன்பாக நம்பிக்கையாக இருக்கிறார்கள் என்பதை வைத்தே அவர்கள் தலைவரிடமிருந்து தாலந்துகளைப் பெறுகிறார்கள். இறைவனிடம் எப்படி இருக்கிறோம் என்பது மிக முக்கியம். இறைவனும் அன்பான நம்பிக்கையான பணியாளர்களையே விரும்புகிறார். அச்சத்தினாலோ, கட்டாயத்தினாலோ பணி செய்பவர்களை அவர் விரும்புவதில்லை. அத்தகைய பயனற்ற பணியாளர்கள் அழிவை சந்திக்கின்றனர்.

இந்த சிந்தனைகளை நாம் பெற்றுக் கொள்வோம். இறைவனை எதிர்கொள்ள அவருக்குப் பிரியமான செயல்களை மட்டுமே தினமும் செய்வோம் என முடிவெடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *