இயேசு சொன்ன உவமைகள் : 23 : பத்து கன்னியர்

Image result for ten virgins parable picture

மத்தேயு 25 : 1 முதல் 13 வரை

“அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.

முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.

அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.

அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள்.

அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

=====

இயேசு சொன்ன இந்த பத்து கன்னியர் உவமை மிகவும் பிரபலம். எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும், விசுவாசத்தைக் காத்துக் கொள்ள வேண்டும், எல்லாவற்றுக்கும் இறைவனையே பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த இயேசு இந்த உவமையைச் சொல்கிறார். இயேசு இரண்டாம் வருகை குறித்து ஐந்து முக்கியமான உவமைகளைச் சொன்னார், அவற்றில் இந்த உவமை குறிப்பிடத்தக்கது !

மணமகனை வரவேற்க தோழிகள் செல்கின்றனர். மணமகனின் வருகையோ தாமதமாகிறது. தோழியர் தூங்கி விடுகின்றனர். பின்னர் நள்ளிரவில் விழிக்கின்றனர். ஆயத்தமாய் விளக்குகளும் எண்ணையும் வைத்திருப்பவர்கள் மணமகனை சென்றடைகின்றனர். எண்ணை இல்லாத விளக்குகளோடு இருந்தவர்கள் மணமகனை சென்றடையும் வாய்ப்பை இழக்கின்றனர்.

இந்த உவமை பல சிந்தனைகளை நமக்குள் விதைக்கிறது.

1. அலட்சியம் ! இறைவனின் வருகையை எதிர்நோக்கி இருக்கும் நாம் விலக்க வேண்டிய முதல் விஷயம் அலட்சியம். மணமகனை எதிர்கொள்ளச் சென்ற அறிவிலிகள் அலட்சியமாய் இருந்தனர். செல்வது இரவில் என்பது தெரியும். தாமதமானால் விளக்கு எரியாது என்பது தெரியும். எண்ணை இல்லாவிட்டால் சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்பதும் தெரியும். ஆனாலும் அலட்சியமாய் இருந்தனர். விளக்கு அணையும் முன் மணமகனைச் சந்திப்போம் என நினைத்துக் கொண்டனர். தாமதம் நிகழ்ந்தபோதோ அலட்சியத்தினாலேயே அழிந்தனர்.

2. எண்ணை என்பது நமது உள்ளார்ந்த மாற்றமும், இதயத்தில் இருக்கும் தூய ஆவியானவரின் பிரசன்னமும். வெளியிலிருந்து விளக்கைப் பார்த்து எண்ணை இருக்கிறதா என்பதை அறிய முடியாது. ஆனால் வெளிச்சத்தைப் பார்த்து அறிய முடியும். எண்ணை இல்லாத விளக்கு கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டுக்குள் விழும். எண்ணை இருக்கும் விளக்கோ இருட்டை விரட்டிக் கொண்டே இருக்கும். நமது இதயத்தில் எப்போதும் தூய ஆவியானவர் இருக்க வேண்டும். அப்போது தான் இருட்டு நம்மை விழுங்கிவிடாமல் நாம் ஒளியாய் இருக்க முடியும்.

3. பத்து கன்னியரும் வெளிப்பார்வைக்கு ஒரே மாதிரி இருந்தார்கள். பத்து பேருமே கன்னியர் என்பது அவர்கள் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்பதன் குறியீடு. பத்து பேருமே அழைக்கப்பட்டவர்கள். பத்து பேருமே அழைப்பை ஏற்றுக் கொண்டவர்கள். பத்து பேருமே விளக்கைக் கொண்டு சென்றவர்கள். பத்து பேருமே மணமகனை காண ஆவல் கொண்டவர்கள். சுருக்கமாய் சொன்னால், இறைவனைத் தவிர யார் பார்த்தாலும் பத்து பேருக்குமிடையே எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால் இறைவன் உள்ளத்தைப் பார்ப்பவர். அவர் மனிதனின் மனம் மாற்றமடைந்திருக்கிறதா, தூய ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறாரா என்பதை சட்டெனக் கண்டுகொள்வார். மனிதரை ஏமாற்றலாம், ஆனால் இறைவனை ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து போவது நாம் தான்.

4. மணமகன் வரத் தாமதம் ஆகும்போது பத்து பேருமே தூங்கி விடுகின்றனர். தூக்கம் என்பது எல்லோருக்கும் வரக் கூடிய சோர்வு. ஆன்மீக வாழ்வின் சோர்வுகள், தடுமாற்றங்கள் இயல்பாக நடக்கக் கூடியது. ஆனால் விழித்தெழுந்து சட்டென தங்கள் வாழ்க்கையைச் சீர்செய்யவும், விளக்கை ஒளிர வைக்கவும் வேண்டுமெனில் எப்போதும் தூய ஆவியானவருடன் நடக்க வேண்டியது அவசியம். தற்காலிகச் சோர்வுகளைப் பற்றிய கவலை தேவையில்லை, நிலையில்லா வாழ்வுக்கான விழிப்பு நம்மிடம் இருந்தால் போதும்.

5. பிறர் விளக்கில் இருக்கும் எண்ணையோ, பிறர் விளக்கில் இருக்கும் வெளிச்சமோ நம்மை இறைவனிடம் கொண்டு சென்று சேர்க்காது. நமக்கே நமக்கான ஒளியும், நம்முடைய வாழ்வில் செய்யும் செயல்களும், அந்த செயல்களை வழிநடத்தும் தூய ஆவியானவரும் மிகவும் அவசியம். எவ்வளவு தான் ஆன்மீக வெளிச்சம் அதிகம் உடைய நபராய் இருந்தால் கூட இந்த விஷயத்தில் நமக்கு உதவ முடியாது ! அவர்கள் செய்கின்ற எச்சரிக்கை ஒலிகளை கேட்டு நம் வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ளலாம். அதுவும், கடைசி வரை அலட்சியமாய் இருந்தால் பயனளிப்பதில்லை.

6. நம்முடைய பெற்றோரோ, நண்பர்களோ, சகோதர சகோதரிகளோ தூய வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதற்காக, நமக்கு விண்ணகம் செல்ல ஸ்பெஷல் டிக்கெட் கிடைப்பதில்லை. அவர்கள் நமக்காக செபிக்கலாம், ஆனால் மனமாற்றமும் இறை நம்பிக்கையும் நம்மில் தான் வளர வேண்டும். பிறர் நீரூற்றலாம், ஆனால் விதைகள் நம்மிடம் இருக்க வேண்டும். இல்லையேல் முளைகள் வருவதில்லை.

7. தூக்கம் என்பதை மரணம் என்றும் சொல்லலாம். மரணத்தின் முன் நாம் நமது வாழ்க்கை எனும் விளக்குகளை ஏந்தி வருகிறோம். மரணத்துக்குப் பின் நம்மிடம் இருக்கும் விளக்கின் தன்மைக்கு ஏற்ப, அதன் ஒளியின் தன்மைக்கு ஏற்ப நமக்கு நியாயத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இறுதித் தீர்ப்பில் நாம் வெற்றியடைய வேண்டுமெனில் நமது வாழ்க்கை மரணத்துக்கு முன் மிகவும் ஒளியுடையதாக, எண்ணை நிறைந்ததாக இருக்க வேண்டும். நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் மரணத்துக்குப் பின் பரிகாரம் காண முடியாது.

8. விளக்கில் இருக்கும் வெளிச்சம் இரண்டு பணிகளைச் செய்கிறது. ஒளியை இறை வார்த்தை என விவிலியம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. அந்த இறைவார்த்தை நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது. இறைவார்த்தையை நமக்கு சரியாக விளக்குபவராக தூய ஆவியானவர் இருக்கிறார். அதே போல, இறைவார்த்தையின் வெளிச்சம் நம்மை இயேசுவுக்கும் அடையாளம் காட்டுகிறது. இருட்டில் நிற்கும் நபரை மணமகன் அடையாளம் காண்பதில்லை. ஆனால் விளக்கின் வெளிச்சம் முகத்தில் தெரிந்தால் அவர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அழைத்துக் கொள்வார். நீங்கள் உலகின் ஒளி என்கிறார் இயேசு, அந்த ஒளி ஒளிரவேண்டுமெனில் தூய ஆவியானவர் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம்.

9. ஐந்து அறிவிலிகளும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தான். அவர்களுடைய விளக்கும் முன்பு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் அணையத் துவங்கியிருந்தது. “அணைந்து கொண்டிருந்தது” என்கிறது விவிலியம். எனவே நமது ஆன்மீக வாழ்க்கையில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளிச்சம் குறைவதை உணர்ந்தால் உடனடியாக அதை நீக்கும் வழிகளை பின்பற்ற வேண்டும். இறைவனையும், தூய ஆவியானவரையும் அணுக வேண்டும். நள்ளிரவில் எண்ணை கிடைக்காது, இறுதி காலத்தில் நமது வாழ்க்கையை சரி செய்ய முடியாது என்பதை உணர வேண்டும்.

10. கதவு அடைக்கப்படும். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அது நமது மரணமாகவோ, உலகின் முடிவாகவோ, வருகையாகவோ இருக்கலாம். நோவாவின் பேழையை மூடிய இறைவன் அதை புதிய உலகில் தான் திறக்கிறார். நமது வாழ்க்கை இறைவனின் வீட்டுக் கதவு வரை வருவதல்ல. எட்ட இருந்து எட்டிப் பார்ப்பதல்ல. இறைவனுடைய வீட்டுக்குள் நுழைவது. அதற்கான வாழ்க்கையை நாம் வாழவேண்டும். கதவு மூடிவிட்டால், அதன்பின் ஆண்டவரே ஆண்டவரே என அழைத்தாலும் பயனில்லை.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *