இயேசு சொன்ன உவமைகள் : 23 : நம்பிக்கைக்குரிய பணியாளர்.

இயேசு சொன்ன உவமைகள் : 23 : நம்பிக்கைக்குரிய பணியாளர்.

Image result for faithful servant parable

மத்தேயு 24 : 45 முதல் 51 வரை

த‌ம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரிய வரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன் பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.

விளக்கம்:

இரண்டாம் வருகையைக் குறித்த உவமையாக இயேசு இதைக் குறிப்பிடுகிறார். இறுதியில் இயேசு மீண்டும் பூமிக்கு வருவார் என்பதும், பின்னர் நியாயத் தீர்ப்பு அப்போது நிகழும் என்பது இயேசுவின் வாக்குறுதிகளில் ஒன்று. அதைக்குறித்த உவமையாக இயேசு பல உவமைகளைச் சொல்கிறார் அதில் ஒன்று இந்த உவமை.

இறைவன் எப்போது வருவார் என்பதைப் பற்றி சிந்திக்காமல், எப்போது வந்தாலும் இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே இந்த உவமை சொல்லும் அடிநாதமாகும்.

இந்த உவமை பல்வேறு நுணுக்கமான விஷயங்களை நமக்கு கற்றுத் தருகிறது.

1. ஒரு பணியாளனுக்கு, தலைவன் எப்போது திரும்ப வருவார் என்பதை அறிய வேண்டிய அவசியம் இல்லை. ஏன் அதை அறிகின்ற‌ உரிமை கூட அவனுக்கு இல்லை. அவரது பணி தலைவன் இட்ட செயலை செய்து கொண்டிருப்பது மட்டும் தான். அதைத் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்க வேண்டுமே தவிர, தலைவர் எப்போது வருவார் என்பதைக் குறித்த சிந்தனையே எழக் கூடாது.

2. நமது வாழ்க்கையில் நமது இலக்கு, இறைவன் பார்வையில் “நம்பிக்கைக்குரியவரும், அறிவாளியுமான” பணியாளராய் இருப்பதே. அதற்கு இயேசு இரண்டு நிபந்தனைகளைக் கொடுக்கிறார். ஒன்று, தலைவன் தந்த வேலையைச் செய்ய‌ வேண்டும். இரண்டு, அதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுவே நமக்கான அழைப்பு. இறைவன் தந்த பணியை செய்வது, அதைத் தொடர்ந்து செய்வது !

3. சிறிய இவ்வுலகப் பணியில் உண்மையாய் இருக்கும்போது நமக்கு நிலைவாழ்வு எனும் மிகப்பெரிய செல்வம் கிடைக்கிறது. மிகப்பெரிய பணிகள் நமக்கு தரப்படும். மிகப்பெரிய உயர்வு நமக்குக் கிடைக்கும். தலைவன் இட்ட பணியை கொஞ்ச நாள் செய்து விட்டு பின்னர் பின்வாங்கிவிடுபவர்களுக்கு இறைவனின் நிலைவாழ்வு கிடைப்பதில்லை. பின்வாங்குதல் என்பது விசுவாசக் குறைவே. அது பாவம் என்கிறது பைபிள்.

4. தலைவனின் வருகை தாமதமாகும் என ஊழியன் மனதில் கருதிக் கொள்வது தான், அவனுடைய வீழ்ச்சிக்கு முதல் சுவடாய் அமைகிறது. அது தான் அவனுடைய பொல்லாத குணத்தை வெளியே கொண்டு வருகிறது. இயேசுவின் வருகை தாமதமாகும் என கிறிஸ்தவன் சிந்திக்கத் துவங்கும் போது அவனுடைய வீழ்ச்சியும் துவங்குகிறது. எனவே இறைவனின் வருகை எப்போது நிகழும் எனும் சிந்தனையே இல்லாமல் எப்போதுமே தயாராய் இருக்கவேண்டும்.

5. வருகை தாமதமாகும் என எண்ணும்போது முதலில் ஊழியனுடைய மனித நேயம் காணாமல் போகிறது. அவனுடைய உண்மையான சுயரூபம் வெளியே வருகிறது. வெளிவேடம் கலைகிறது. ஊழியனுக்கு உணவு கொடுக்க வேண்டும் எனும் தனது பணியிலிருந்து தவறுகிறான். ஊழியனை அவமரியாதை செய்கிறான். வன்முறை சிந்தனைகள் தலை தூக்குகின்றன. தலைவனின் ஊழியனை அடிக்கவும் செய்கிறான். எனவே இயேசுவின் வருகை தாமதமாகும் எனும் சிந்தனை நமது உள்ளத்தை ஆக்கிரமிக்காமல் காத்துக் கொள்ள வேண்டும்.

6. வருகை தாமதமாகும் என ஊழியன் நினைக்கும் போது அவனுடைய சுயநல சிற்றின்பத் தேவைகள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன. தனது தலைவர் தனக்கு இட்ட பணி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுகிறது. குடிகாரர்களோடு சேர்ந்து உண்ணவும் குடிக்கவும் ஆரம்பிக்கிறார். இயேசுவின் வருகை தாமதமாகும் என நாம் இறுமாந்திருந்தால் நமது சிந்தனைகளிலும் இறைவனின் பணியை விட சுய விருப்பங்களே நிரம்பி வழியும்.

7. தாமதம் என்பது இறைவன் வைக்கின்ற சோதனை. நாம் இறைவன் மீது எந்த அளவு அன்பு வைத்திருக்கிறோம், எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை இறைவன் அதன் மூலம் அளவிடுகிறார். மோசே மலையில் ஏறி கட்டளைகளை வாங்கச் சென்றபோது மக்கள் கீழே நாற்பது இரவும் நாற்பது பகலும் காத்திருந்தார்கள். மோசே வர “தாமதம்” நிகழ்ந்தபோது தங்கள் பார்வையைக் கடவுளை விட்டு விலக்கினார்கள். அது அவர்களுடைய அழிவுக்குக் காரணமானது ! சாமுவேலுக்காகக் காத்திருந்த சவுல், அவர் காலம் தாழ்த்தியதால் சாமுவேல் செய்யவேண்டிய பலியைச் செலுத்தி அழிவை வரவழைக்கிறார். இறைவன் நமது பொறுமையை விரும்புகிறார். அது அவர்மீதான நமது அன்புக்கும், நம்பிக்கைக்குமான அடையாளம்.

8. தலைவனின் வருகை நிச்சயமானது ! இயேசுவின் வருகையும் அவ்வாறே. இயேசு எல்லா உவமைகளிலும் திரும்பத் திரும்ப இதை வலியுறுத்துகிறார். வருகை என்பது சர்வ நிச்சயம் ! அப்படி இறைவன் வரும்போது ஓடிப் போய் அன்போடு தழுவிக் கொள்பவர்களாக நாம் இருக்க வேண்டும். ஐயையோ.. நான் தயாராய் இல்லையே என தடுமாறக் கூடாது. எவ்வளவு தாமதமாய் வந்தாலும் ஓடிப் போய் தழுவிக் கொள்கிறார் கெட்ட குமாரனின் தந்தை. அது தந்தையின் அன்புக்கு உதாரணம். தடுமாறினாலும் உடனே தந்தையிடம் ஓடோடி வருவதில் இருக்கிறது தந்தை மீதான நமது அன்பு.

9. தலைவன் ஊழியனுக்கு கொடுத்த பணி, தனது பணியாளர்களுக்கு “வேளா வேளைக்கு” உணவு கொடுப்பது. அப்படி உணவு கொடுப்பதை ஊர்ஜிதப்படுத்துவது அந்தப் பணியாளர்களின் உடல் வலிமையும், வளர்ச்சியுமே. தொடர்ச்சியான ஆரோக்கியமான உணவு தான் ஊழியர்களை வலுவாக்கும். ஆளுக்கு ஏற்றபடி அந்த உணவு வழங்கப்படலாம். நற்செய்தியையும் நாம் தொடர்ந்து அறிவிப்பவர்களாகவும், சரியான நேரத்தில் அறிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

10. தலைவன் வரும்போது பொல்லாத ஊழியனின் வெளிவேடம் கலைந்து விடும். அவனை அவர் இறைவார்த்தையால் வெட்டுகிறார். கிருபையின் படியும், வார்த்தையின் படியும் அவனுடைய அழிவு அமையும். எதிலும் அவனுக்கு மீட்பு இல்லை. அவனுடைய இடம் வெளிவேடக்காரருக்கு உரிய இடத்தில் அமைந்து விடும். அங்கே அழுகைக்கும், அங்காலாய்புக்கும் மட்டுமே இடம் உண்டு.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *