வர்தா புயல்

Image result for chennai vardah
மாநகரத்தின்
மூலைகளெங்கும்
மல்லாந்து கிடக்கின்றன‌
மரங்கள்.

பருவப் பெண்ணின்
நாணம் போல‌
விழி கவிழ்ந்து நிற்கின்றன
விளக்குக் கம்பங்கள்.

கால் நூற்றாண்டு
ஆலமரங்களெல்லாம்
வேர்களை
விளம்பரத்திக் கொண்டு
வீதிகளில் புரண்டு படுத்தன.

சிரச்சேதம் செய்யப்பட்ட‌
வனமாய்,
மொட்டையடிக்கப் பட்ட‌
பொட்டல்காடாய்
நிர்வாணியானது சென்னை.

காட்டைப் பார்க்காத‌
தடுப்பூசி விலங்குகளெல்லாம்
வண்டலூர் கூண்டுகளில்
நடுங்கியே செத்தன.

பர்தா போட்ட‌
பருவப் புயலாய்
வர்தா வந்து
வாரிப் போனது !

சென்னை
வந்தாரை வாழவைக்கிறது
அதனால் தானோ என்னவோ
சுனாமிகளும்
ஏரிகளும்
புயல்களும்
புகலிடம் கேட்டு வருகின்றன.

இருக்கட்டும்,

இயற்கையின்
கால்களில்
இரும்புச் சங்கிலி
போட முடியாது !

பரமபதமாடும்
பூனைக்கு
மணி கட்டுவது
மனிதனால் முடியாது.

ஆனால்
மீண்டு எழுவதும்
மீண்டும் வாழ்வதும்
நம்மால் மட்டுமே சாத்தியம்.
வீழ்ந்தது
மரங்களாய் இருக்கலாம்
சேர்ந்தது
கரங்களென இருக்கட்டும்

வீழ்ந்தது
மரங்களாய் இருக்கலாம்
எழுந்தது
மனங்களென இருக்கட்டும்.

*

2 thoughts on “வர்தா புயல்

  1. ஷோபா says:

    “வர்தா” கவிதை – அருமை 👌

    1. writerxavier writerxavier says:

      Thank you Sister.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *