இயேசு சொன்ன உவமைகள் 19 : இரண்டு விதமான பிரார்த்தனைகள்

Related image

லூக்கா 18: 9 முதல் 14 வரை

தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:

“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.

பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’

ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.” இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

Related image

பரிசேயரும் ஆயக்காரரும்

இயேசு இந்த உவமை எதற்கானது என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறார். “தாங்கள் நேர்மையானவர்கள் என நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும்” சிலரைப் பார்த்தே இயேசு இதைச் சொல்கிறார்.

இங்கே ஆலயத்துக்குச் செல்பவர்கள் இருவர். ஒருவர் பரிசேயர். பரிசேயர்கள் கடவுளின் சட்டத்தை அறிந்தவர்கள். அதைத் தவறாமல் பின்பற்றுகிறோம் எனும் மமதை உடையவர்கள். தாங்கள் இறைவனின் சொந்த பிள்ளைகள் எனும் கர்வம் உடையவர்கள். மத ரீதியான செயல்களைச் செய்தால் போதும் நிலை வாழ்வு நிச்சயம் என கருதிக் கொண்டவர்கள். தங்களுடைய செயல்களுக்கான பலனைத் தரும் கடமை இறைவனுக்கு உண்டு என இறைவனை வியாபாரியாக்குபவர்கள்.

இரண்டாமவர் வரிதண்டுபவர் அல்லது ஆயக்காரர். அவர் பாவி என மக்களால் இகழப்பட்டவர்கள். அவர்கள் ரோம அரசுக்காக தன் இன மக்களிடமே வரி வசூலிக்கும் சூழலில் தள்ளப்பட்டவர்கள். அவர்கள் நேர்மையற்றவர்களாகவும், சமூகத்தில் இழி நிலையில் உள்ளவர்களாகவும் கருதப்பட்டவர்கள்.

பரிசேயர்கள் சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்கள். அவர் மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவர்கள் ஆன்மீகத்தில் பெரியவர், ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றெல்லாம் மக்கள் கருதிக் கொண்டிருந்தவர்கள்.

வரிதண்டுபவரோ சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர். புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பவர். மக்களால் நிராகரிக்கப்பட்டவர். பாவி என மக்களால் நம்பப்பட்டவர்.

இந்த சின்ன அறிமுகத்தின் பின்னணியில் இந்த உவமையைப் பார்ப்போம். இந்த உவமை என்னென்ன சிந்தனைகளைத் தருகிறது.

Image result for praying hands1. மீட்பு என்பதை எனது செயல்களால் நான் பெற்றுக் கொள்வேன். சட்டங்கள் சொல்கின்ற எல்லாவற்றையும் நான் செய்கிறேன் எனவே கடவுள் என்னை மீட்டாக வேண்டும். இது பரிசேய மனநிலை. இந்த மனநிலை கொண்டவர்களிடம் தாழ்மை இருக்காது. என்னால் எதையும் சாதிக்க முடியும் என நினைக்கும் போது இறைவனே இரண்டாம்பட்சம் ஆகி விடுகிறார். இவர்கள் மீட்பு பெறுவதில்லை !

Image result for praying hands2. பரிசேயர் தனது வாழ்க்கையை பிற மக்களோடு ஒப்பிட்டு அவர்கள் இழிந்தவர்கள் என மட்டம் தட்டுகிறார். கொள்ளையர், நேர்மையற்றவர், விபச்சாரர், வரிதண்டுபவர் போல நான் இல்லை என பெருமை கொள்கிறார். “உன்னைப் போல அயலானையும் நேசி’ என கட்டளை தந்த இயேசு இந்த மனநிலையை கடுமையாக எதிர்க்கிறார். ஒப்பீடு செய்வதே பாவம். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை இறைவன் மட்டுமே அறிவார். இறைவன் மட்டுமே மக்களைத் தீர்ப்பிடும் அதிகாரம் பெற்றவர்.

Image result for praying hands3. பரிசேயர் இறைவனின் முன்னிலையில் வரும்போது தன்னைத் தாழ்த்திக் கொள்ளவில்லை. நிமிர்ந்து நின்று செபிக்கிறார். ஆலயத்துக்குள் நின்று கொண்டு இறைவனிடம் பேசுகிறார். இறைவனிடம் அவர் செய்கின்ற செபம் அவனுடைய தம்பட்டமாகவே இருக்கிறது. இறை புகழ்ச்சி பாடுவதாகவோ, நன்றியறிவித்தலாகவோ, வேண்டுதலாகவோ இருக்கவில்லை. இத்தகைய செபங்கள் உயிரற்ற செபங்கள். தன்னை மையப்படுத்தும் செபங்களை இறைவன் விரும்புவதில்லை.

Image result for praying hands4. வரிதண்டுபவரோ தொலைவிலேயே நின்றார். வானத்தை அண்ணாந்து பார்க்கவும் துணியவில்லை. அவருடைய மனதில் “நான் ஒரு பாவி” எனும் உறுத்தல் இருந்தது. மீட்பை இறைவன் மட்டுமே தர முடியும் எனும் தெளிவு இருந்தது. மார்பில் அடித்துக் கொண்டு தன் பிழைக்காய் வருந்தும் மனம் இருந்தது. “என்மீது இரங்கும்” என்பது மட்டுமே அவருடைய வேண்டுதலாய் இருந்தது. தான் பாவி என உணர்பவர்கள் தான் மீட்பைப் பெற்றுக் கொள்ள முடியும். தன்னைத் தாழ்த்தி இறைவனின் மன்னிப்பைக் கேட்பவர்கள் மட்டுமே இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகின்றனர்.

Image result for praying hands5. இந்த உவமை இயேசுவின் அன்பான மனதை நமக்கு விளக்குகிறது. நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நமது வேண்டுதலை இறைவன் கேட்கிறார். நமது பரம்பரை, நமது வாழ்க்கை, நமது முன்னோர், நமது மத அடையாளம், நமது மத செயல்கள் போன்றவற்றையெல்லாம் இறைவன் பார்ப்பதில்லை. என்ன மனநிலையில் இறைவனிடம் செல்கிறோம் ? ஒரு சடங்காகவா ? இல்லை இறைவன் மீது கொண்ட அன்பினாலா ? நான் நீதிமான் என்பதை பறை சாற்றவா ? பாவி என்பதை புரிந்து கொள்ளவா ?

Image result for praying hands6. பரிசேயரும், வரிதண்டுபவரும் ஆலயத்துக்குச் செல்கின்றனர். இறைவனிடம் செல்ல வேண்டும், செபிக்க வேண்டும் எனும் மனநிலை இருவருக்குமே இருக்கிறது. இது சரியான அணுகுமுறை. நமது வாழ்விலும் நமது தேவைகளுக்காகவும், ஆறுதலுக்காகவும் இறைவனையே நாடவேண்டும் எனும் பாடமும் இதில் இருக்கிறது.

Image result for praying hands7. “பரிசேயர் அல்ல, வரிதண்டுவோரே கடவுளுக்கு ஏற்புடையவர்’ எனும் இயேசுவின் வார்த்தை நமக்கு வியப்பைத் தருகிறது. பரிசேயர் தனது வாழ்நாள் முழுவதும் நல்ல செயல்களையே செய்வதாய் நினைத்துக் கொண்டிருந்தவர். ஆனால் அவை எதுவுமே இறைவனுக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை. வரிதண்டுவோரோ தனது வாழ்க்கையில் பாவச் செயல்களைச் செய்ததாக நினைத்துக் கொண்டிருந்தவர். அவருடைய மனமோ வாழ்வுக்காய் ஏங்கித் தவிக்கிறது. இறைவன் நமது செயல்களை விட, நமது தாகத்தைக் கவனிக்கிறார்.

Image result for praying hands8. “நான் இவ்வளவு செய்தேன், இது எனது உரிமை” எனும் மனநிலையில் நாம் இறைவனிடம் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது. இறைவனின் அன்பினால் மட்டுமே நமக்கு வரங்கள் கிடைக்கின்றன. பரிசேயரின் வேண்டுதல், எனது உரிமையை நீர் தரவேண்டும் எனும் நினைவூட்டலாய் இருந்தது. எனது செயல்களுக்கான பலனை இறைவன் தந்தே ஆகவேண்டும் என நினைத்தனர். வரிதண்டுவோரின் செபமோ, எனக்கு அருகதையில்லாததை நீர் தரவேண்டும் எனும் தாழ்மை விண்ணப்பமாய் இருந்தது.

Image result for praying hands9.அனைவரும் இறைவன் எனும் கொடியின் கிளைகள். அடுத்தவரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ பார்க்கும் மனநிலை இயேசுவுக்கு எதிரானது. அடுத்தவர்களை தன்னை விட மரியாதைக்குரியவராகப் பார்க்க வேண்டும் என்பதே இயேசு சொன்ன போதனை. தனது சீடர்களின் பாதங்களைக் கூட கழுவி அவர்களை தன்னை விட முக்கியமானவர்களாய் கருதினார் இயேசு. அப்படிப்பட்ட மனநிலையே வரவேண்டும்

Image result for praying hands10 நமது வாழ்க்கையில் நாம் ஒப்பீடு செய்ய வேண்டுமென விரும்பினால் இயேசுவுடன் மட்டுமே ஒப்பீடு செய்வோம். அவரது செயல்களோடு நமது செயல்களை ஒப்பீடு செய்வோம். அவரது வார்த்தைகளோடு நமது வார்த்தைகளை ஒப்பீடு செய்வோம். அவரது வாழ்க்கையோடு நமது வாழ்க்கையை ஒப்பீடு செய்வோம். அப்போது செபம் என்ன என்பதும், தாழ்மை என்ன என்பதும் நமக்கு தெளிவாக விளங்கும்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *