காமம் விலகாக் காதல்

Image result for temple saree girl

என்
கவிதை தேசத்தின்
கர்வக் கிரீடமே.

உன்
நினைவுச் சரிவுகளில்
வெள்ளாட்டுக் குட்டியாய்
தள்ளாடித் திரிகிறது
மனது.

தேவதை ஒன்றை
தேவலோகம் அனுப்பியதாய்
தேகங்களில் சுடுகிறது
தனிமை.

ஸ்பரிசங்களின் அகராதியை
புரட்டிப் பார்க்க
தருணங்களின் தயவின்றி
உருகிக் காய்கிறது
இளமை.

ஏகாந்தத்தின் பள்ளத்தாக்குகளில்
காதலின் புதைகுழிக்குள்
ஊமையின் குரலென
மூழ்கிச் சாகிறது
கிழமை.

உன் பிறந்த நாளில்
விரல்களின் விண்ணப்பங்களை
உன்
மேனியின் முகவரிக்கு
அனுப்பி வைக்காத அவஸ்தை
மோகத்தின் முனகல்களாய்
உள்ளுக்குள் வழுக்குகிறது.

இந்தக் காதலின்
குதிரைக் குளம்படிகள்
செவிகளில்
மோகப் போரின் ஒத்திகையாய்
போர்வைக் கனவுகளிலும்
வேர்வை அடிக்கின்றன.

வாழ்த்துக்கள் என
வெறும்
வரிகளில் சொல்வதா ?

உன்
காதுமடல் கடிக்கும்
வெப்பக் காற்றில் சொல்வதா ?

உன்
இதழ்களுக்குள் இறங்கி
ஈரத்தில் ஓரத்தில் சொல்வதா ?

உன்
மேனிக்குள் புதைந்து போய்
யுத்தத்தின் முடிவில் சொல்வதா ?

குழம்புகிறது மனது.

நீ
தெரிவிப்பாயா ?
எனை
தெளிவிப்பாயா ?

அதுவரைக்கும்,

நான்
சொல்லாத கவிதைகளை,
கனவு
நில்லாத மோகத்துடன்,
நிறைவு
இல்லாத தேகத்துடன்,
இதய அந்தப்புரத்தில் அடைகாக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *