தினத்தந்தி வாரம் 6 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

Image result for Smart Phone Virus

மொபைல் வைரஸ்கள் மிரட்டலாய் வடிவெடுத்திருக்க இன்னொரு காரணம் அது பரவக்கூடிய வேகம். அல்லது அது பரவலாம் என எதிர்பார்க்கப்படும் வேகம். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 17.6 மில்லியன் அமெரிக்கர்கள் சுமார் 8.6 பில்லியன் டாலர்களை மொபைல் வைரஸ், மொபைல் ஏமாற்று அழைப்புகள் போன்றவற்றால் இழந்திருக்கிறார்கள் என்கிறது ட்ரூகாலர் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று.

பத்து ஆப்ஸ் களில் ஒன்றில் ஏதோ ஒரு மால்வேர் இருக்கிறது என கடந்த ஆண்டு நடந்த ‘சீட்டா மொபைல்’ ஆய்வு ஒன்று தெரிவித்தது. அதில் அறுபது சதவீதத்துக்கும் மேலானவை ‘பணத்தை’ சுரண்டுபவை என்பது அதிர்ச்சியூட்டுகிறது. அமெரிக்க, ஐரோப்ப நாடுகளை விட ஆசிய நாடுகளில் தான் மால்வேர் பாதிப்பு அதிகமாய் இருப்பதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது.

இதற்குக் காரணம் நமது அலட்சியம் தான். நாம் யாருமே “சட்ட திட்டங்களை” முழுமையாய் வாசித்துப் பார்ப்பதில்லை என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆகவேண்டும். ” X மார்க் போட்டிருக்கிற இடத்துல எல்லாம் சைன் போடுங்க சார்…” என்று தான் நம்மைப் பழக்கியிருக்கிறார்கள். இரண்டாவது, நமது நெருங்கிய நண்பர் ஒரு ஆப் வைத்திருந்தால் அது முழு பாதுகாப்பானது என நாம் நம்பிக் கொள்கிறோம். இந்த இரண்டுமே தவறானவை என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

இதையெல்லாம் தாண்டியும் நாம் ஏமாந்தால், வழக்கு பதிவு செய்ய செல்லும் போது, “படிச்சவன் தானேய்யா நீ.. அவன் தான் தெளிவா டேர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ஸ் போட்டிருக்கானே…” என நமது தலைக்கே துப்பாக்கியை நீட்டுவார்கள். எனவே எந்த ஒரு ஆப்ஸ் இன்ஸ்டால் பண்ணும் முன்பும் ஒன்றுக்கு நாலு தடவை யோசித்துக் கொள்ளுங்கள்.

நாம் தான் இலவசமாய்க் கிடைக்கும் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வோமே ! ஆனால் அவையெல்லாம் உண்மையில் இலவசமல்ல. ஆதாயமில்லாமல் எவனும் ஆப்ஸ் தருவதில்லை. இலவசம் எனும் பெயரில் நம்மை இம்சைக்கு ஆளாக்குபவை இவை என்பது தான் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

இன்றைய ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலானவை ‘கிளவுட் ஸ்பேஸ்’ எனும் நினைவிடத்தைக் கொண்டிருக்கின்றன. இதை மேகக் கணிமை தொழில்நுட்பம் என தமிழில் அழைக்கலாம். இது ஒரு பொதுவான நினைவிடம் என்பதால் இந்த இடத்தில் அமரக் கூடிய ஒரு சின்ன வைரஸ், அந்த கிளவுடில் இணையும் ஆயிரக்கணக்கான மொபைல்களை சட்டென பற்றிக் கொள்ள முடியும் என்பது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல்.

காஸ்பர்ஸ்கை ஆய்வுக்கூடம் சமீபத்தில் இத்தகைய மால்வேர் ஒன்று கூகிள் கிளவுட் மெசேஜிங் பகுதியில் கமுக்கமாக அமர்ந்திருப்பதைக் கண்டு பிடித்தது. நிறைய மொபைல்களை ஒரே நேரத்தில் தாக்கும் மிக எளிய முறை இது ! சென்னை சிட்டிக்கு தண்ணீர் கொண்டு வரும் ஏரியில் விஷத்தைக் கலந்தால் சிட்டி முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாவது போன்ற சமாச்சாரம் இது.

வைரஸ் தாக்கப்பட்ட மொபைலில் இருந்து புளூடூத் மூலம் வைரஸ் பிற மொபைல்களுக்கும் தாவும் என்பது இன்னொரு பெரிய அச்சுறுத்தல். என‌வே தேவைய‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் புளூடூத் ஐ ஆஃப் செய்து வைத்திருப்ப‌து பாதுகாப்பான‌து.

சைரன் பாதுகாப்பு அறிக்கையின் படி சுமார் 99 சதவீதம் மால்வேர்களும் ஆன்ட்ராய்ட் பயனர்களைத் தான் குறிவைக்கிறது. அதேநேரம் நூறு சதவீதம் பாதுகாப்பானது என்று எதுவும் இல்லை என்பதும் கவனிக்கத் தக்கது.

மொபைல் போனைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்னென்ன செய்யலாம் ?

1. உங்க‌ள் மொபைலை க‌ட‌வுச் சொல் போட்டு பாதுகாப்பாய் வையுங்க‌ள். உங்க‌ள் சிம் கார்டுக்கும் பாஸ்வேர்ட் போடும் வ‌ச‌தி இருந்தால் அதையும் பயன்படுத்துங்கள். ப‌த்து த‌ட‌வைக்கு மேல் த‌வ‌றான‌ பாஸ்வேர்ட் கொடுத்தால் போனில் இருக்கும் த‌க‌வ‌ல்க‌ள் எல்லாம் அழிந்து போகுமாறு செட் செய்யுங்க‌ள். இப்படிச் செய்வதால் ஒருவேளை உங்க‌ள் போன் தொலைந்து போனாலும் முக்கியமான த‌க‌வ‌ல்க‌ள் திருட‌ப்ப‌டாது.

2. மொபைல் போனில் ஒரு ந‌ல்ல‌ ஆன்டி வைர‌ஸ் மென்பொருளை நிறுவுங்க‌ள். அதில் ஆன்டி தெஃப்ட் அதாவது ‘திருட்டு த‌டுப்பு’ அம்ச‌ங்க‌ளும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்க‌ள். ஆன்டி வைரஸை நிறுவும் முன் நன்றாக அலசி ஆராய்ந்து ஒரு சிறந்த ஆன்டி வைரஸைத் தேர்ந்தெடுங்கள்.

3. உங்க‌ள் போனுக்கு வ‌ருகின்ற‌ செய‌லி அப்டேட்க‌ளை த‌வ‌றாம‌ல் நிறுவுங்க‌ள். இன்றைக்கு இருக்கக் கூடிய மால்வேர் பாதிப்பிலிருந்து 77% தப்பிக்க எளிய வழி லேட்டஸ்ட் செயலியை நிறுவுவது தான். அதை நிறுவுங்கள். நேரடியாகவே அதை நிறுவுங்கள், குறுக்கு வழியில் செல்லவே செல்லாதீர்கள்.

4. ஆப்ளிகேஷ‌ன்க‌ளை நிறுவும் போது அவ‌ற்றை பிளேஸ்டோர், பிளாக்ப‌ரி வேர்ல்ட், ஐட்யூன்ஸ் போன்ற‌ அங்கீகார‌ம் பெற்ற‌ இட‌ங்க‌ளிலிருந்து ம‌ட்டுமே நிறுவுங்க‌ள். ம‌ற்ற‌ இட‌ங்க‌ளிலிருந்து நிறுவ‌ நேர்ந்தால் அதீத‌ எச்ச‌ரிக்கை தேவை.

5. பொது வைஃபை த‌ள‌ங்க‌ளில் உங்க‌ளுடைய‌ மொபைலை முடிந்த‌ம‌ட்டும் இணைத்துக் கொள்ளாதீர்க‌ள். அதுவும் தானாகவே வைஃபையில் இணைந்து கொள்ளும் ஆப்ஷனை வைத்திருக்காதீர்கள். அதே போல உங்களுடைய ஜி.பி.எஸ் தேவையற்ற நேரங்களில் அணைத்தே வையுங்கள். அது உங்களுடைய ரகசியத்தைப் பாதுகாக்க உதவும்.

6. ஆப்ஸ் க‌ளை ஆட்டோமெடிக்காக‌ நிறுவும் அனைத்து முறைக‌ளையும் த‌டை செய்து விடுங்க‌ள். அடுத்த‌வ‌ர்க‌ள் அனுப்பும் மின்ன‌ஞ்ச‌ல் கோப்புக‌ள், ப‌ட‌ங்க‌ள் போன்ற‌வை தானாக‌வே உங்க‌ள் மொபைலில் சேமித்துக் கொள்ளும் ஆப்ஷ‌னை அணைத்து விடுங்க‌ள்.

7. உங்க‌ள் போனில் இருக்கும் த‌க‌வ‌ல்க‌ளை அடிக்க‌டி பேக்க‌ப் எடுத்துக் கொள்ளுங்க‌ள். தகவல்கள் தொலைந்து போகாமல் இருக்கும். உங்கள் மொபைலின் ஐ.எம்.ஈ.ஐ எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மொபைல் தொலைந்து போனால் கண்டுபிடிக்கப் பயன்படும்.

8. முடிந்தவரை உங்கள் மொபைலில் ரகசியத் தகவல்களை குவித்து வைப்பதைத் தவிருங்கள். அப்படியே ர‌க‌சிய‌த் த‌க‌வ‌ல்க‌ள் உங்க‌ள் போனில் இருந்தால் அதை ‘என்கிரிப்ட்’ செய்து வைத்துக் கொள்ளுங்க‌ள். இத‌ன் மூல‌ம் யாரேனும் அதைத் திருடினால் கூட‌ அதைப் ப‌டிக்க‌ முடியாம‌ல் போய்விடும்.

9. விள‌ம்ப‌ர‌ங்க‌ள் எதையும் ‘கிளிக்’காம‌ல் இருப்ப‌து மிக‌ மிக‌ பாதுகாப்பான‌து. எஸ்.எம்.எஸ், மின்ன‌ஞ்ச‌ல், எம்.எம்.எஸ், லிங்க், பாப் அப் ‍ எதுவானாலும் துளிய‌ள‌வு ச‌ந்தேக‌ம் இருந்தாலும் அதைப் ப‌டிக்க‌ வேண்டாம். அழித்து விடுங்க‌ள்.

10. மொபைல் மூல‌ம் ஷாப்பிங் செய்ய‌ விரும்பினால் அந்த‌ந்த‌ க‌டைக‌ளுக்குரிய‌ அதிகார‌பூர்வ‌ ஆப்ஸ் மூல‌மாக‌ச் செய்யுங்க‌ள். பிர‌வுச‌ர் மூல‌மாக‌ச் செய்வ‌தைத் த‌விருங்க‌ள். அப்ப‌டி ஷாப்பிங் முடிந்த‌தும் முறையாக‌ ‘லாக் அவுட்’ செய்து வெளியே வாருங்க‌ள்.

எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ உங்க‌ள் மொபைலில் த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்க‌ள், ப‌ட‌ங்க‌ள், ர‌க‌சிய‌ உரையாட‌ல்க‌ள் போன்ற‌ எதுவும் இல்லாம‌ல் பார்த்துக் கொள்ளுங்க‌ள். அத‌ற்கு முத‌ல் ப‌டியாக‌ ம‌ன‌தில் அத்த‌கைய‌ விஷ‌ய‌ங்க‌ள் அணுகாம‌ல் பார்த்துக் கொள்ளுங்க‌ள். ‘ம‌டியில‌ க‌ன‌மில்லையேல் வ‌ழியில‌ ப‌ய‌மில்லை’ என்ப‌து போல‌ மொபைலில் அத்த‌கைய‌ த‌க‌வ‌ல்க‌ள் ஏதும் இல்லாம‌ல் இருப்ப‌து உங்க‌ள் க‌வ‌லையை எண்ப‌து ச‌த‌வீத‌ம் அழித்து விடும்.

மொபைல் என்ப‌து வாழ்வின் முக்கிய‌மான‌ அம்ச‌மாக‌ நிலைபெற்று விட்ட‌து. அதை க‌வ‌ன‌மாக‌ப் பாதுகாப்ப‌தும், நியாய‌மான‌ வ‌ழியில் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தும் நாம் செய்ய‌ வேண்டிய‌ இர‌ண்டு செய‌ல்க‌ளாகும்.

ஸ்மார்ட்போன் விஷ‌ய‌த்தில், ஸ்மார்ட்டா இருங்க‌ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *