தினத்தந்தி வாரம் 5 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

Image result for Anti Virus Softwares for smartphone

மொபைல் தயாரிப்பு நிறுவனங்களே இப்போதெல்லாம் பல அடுக்கு பாதுகாப்பை கொடுக்கிறார்களே என சிலர் கேட்பதுண்டு. குறிப்பாக பயோமெட்ரிக் அம்சங்களை ஸ்மார்ட் போனில் புகுத்தி, கைரேகையைக் கொண்டு போனை அன்லாக் செய்வது, முகத்தை ஸ்கேன் செய்து அன்லாக் செய்வது இப்படிப்பட்ட அம்சங்களை அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள். ஆனால் இத்தகைய வெளிப்படையான பாதுகாப்பு அம்சங்கள், மொபைல் தொலைந்து போகாமல் பாதுகாக்கலாமே தவிர அதற்குள் வைரஸ் நுழைவதை தடுப்பதில்லை.

மொபைலுக்கு ஆன்டி வைரஸ் தேவையா என்பதைக் குறித்த சர்ச்சை வல்லுநர்களிடையே தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் தொடர்ந்து சந்தையில் வந்து கொண்டே இருக்கின்றன. புதிதாக வருகின்ற வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள், கூடவே மொபைல் தொலைந்து போகாமல் பாதுகாக்கும் அம்சங்களையும் பலப்படுத்தி வருகின்றன.

உதாரணமாக, உங்கள் மொபைலில் இருக்கும் தகவல்களை தொடர்ந்து பேக்கப் எடுக்கின்றன. உங்களுடைய போனில் இடத்தை பதிவு செய்து கொண்டே இருப்பதன் மூலம் அது தொலைந்து விடாமல் காக்கின்றன. யாராவது போனைத் திருடி பயன்படுத்த நினைத்தால் அவர்களை ஒரு செல்பி எடுத்து உரிமையாளருக்கு அனுப்பும் மென்பொருட்களும் கூட‌ வந்து விட்டன.

ஆன்டி வைர‌ஸ் மென்பொருள்க‌ளை நிறுவும்போது எழுகின்ற‌ மூன்று முக்கிய‌மான‌ குறைக‌ள் உண்டு. ஒன்று மொபைலின் பேட்ட‌ரி வெகுவாக‌ச் சூடாகி கொதிக்க‌ ஆர‌ம்பிக்க‌லாம். இன்னொன்று ஆன்டி வைர‌ஸ் மென்பொருள் மொபைலின் வேக‌த்தை பெரிதும் பாதிக்க‌லாம். மூன்றாவ‌து அள‌வுக்கு அதிக‌மான‌ த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ங்க‌ளைத் தொட‌ர்ந்து செய்து கொண்டே இருக்க‌லாம். ஆன்டி வைரஸ் தேர்வின் போது இந்த மூன்று விஷயங்களையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களில் இலவச மென்பொருட்களும், பணம் செலுத்தி நிறுவ வேண்டிய மென்பொருட்களும் உண்டு. இலவசம் என்றால் மோசம் என்றோ, பணம் கொடுப்பது தான் சிறந்தது என்றோ இல்லை. அதை எப்படி நிறுவுவது, அது எந்தென்ன பணிகளைச் செய்கிறது, அது எதனுடனெல்லாம் தொடர்பு கொள்கிறது, என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன, மால்வேர்களை எப்படி எதிர்கொள்கின்றன, பயன்படுத்துவதற்கு எளிதாய் இருக்கிறதா ? என பல்வேறு அம்சங்களை வைத்து தான் அதை முடிவு செய்ய வேண்டும்.

ஆனால் அடிப்படையில் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நிறுவனங்கள் பொது சேவை மனப்பான்மையில் ஆன்டி வைரஸ் மென்பொருட்களை உருவாக்குவதில்லை. இது சமூக சேவை அல்ல. எல்லாமே லாப நோக்கம் தான். உங்களிடம் பணம் வாங்கவில்லையெனில், அந்த மென்பொருளுக்கான விலையை வேறு ஏதோ ஒரு வகையில் உங்களிடமிருந்து அந்த நிறுவனம் எடுத்துக் கொள்ளும். அது விளம்பரம் மூலமாகவோ, தகவல் திருட்டு மூலமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே, பணம் கொடுத்து வாங்கும் ஒரிஜினல் ஆன்டி வைரஸ் பேக்கேஜ்கள் கொஞ்சம் பெட்டர் என்பதை மனதில் வைத்திருங்கள்.

ஆன்டி வைரஸ்களைத் தேர்வு செய்யும் போது கவனம் தேவை. இல்லையேல் நீங்கள் நிறுவும் ஆன்டி வைரஸ் மென்பொருளே வைரஸாக மாறி விடும் அபாயம் உண்டு. தரமான நம்பகத் தன்மையுடைய ஆன்டி வைரஸ் தயாரிப்புகளை மட்டுமே வாங்குங்கள்.

தற்போதைய தொழில்நுட்ப அலசலின் அடிப்படையில் ஒரு டாப் டென் லிஸ்ட் இதோ. இதன் மதிப்பீடும் வரிசையும் உங்கள் தேவையின் அடிப்படையில் மாறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அவஸ்ட் (Avast ) தற்போது சந்தையில் கிடைக்கும் மென்பொருட்களில் தொழில்நுட்ப விமர்சகர்கள் அதிகம் பரிந்துரை செய்யும் மொபைல் ஆன்டி வைரஸ் இது. பயன்படுத்துவதற்கு எளிது. செய்ய வேண்டிய வேலையை சரியாகச் செய்கிறது. மொபைல் பாதுகாப்பு, தகவல் சேமிப்பு, பயன்படுத்த எளிதானது, உட்பட பல சிறப்புகள் இதில் உண்டு. இலவச பதிப்பு, பணம் செலுத்து வாங்க வேண்டிய முழுமையான பதிப்பு என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

ஏ.ஹெச்.என் லேப் வி3 மொபைல் (Ahn, Lab V3) சமீபத்தில் ஏவிடெஸ்ட் நிறுவனத்தின் பரிசோதனையில் முதலிடம் பிடித்த மென்பொருள். மால்வேர்களை அழிப்பது, பயன்பாடு போன்ற அனைத்திலும் சிறப்பாகச் செயல்படும் ஆன்டி வைரஸ் மென்பொருள் இது.

அலிபாபா மொபைல் செக்யூரிடி ( Alibaba Mobile Security) மொபைல் பாதுகாப்பு அம்சங்களில் சிறப்பாகச் செயல்படும் இன்னொரு மென்பொருள். மொபைலின் வேகத்தைக் குறைக்காமல் செயல்படும் என்பதும், மொபைலும், தகவல்களும் திருடுபோகாமல் காக்கும் பாதுகாப்பு அம்சங்கள் நிறையவே உண்டு என்பதும் இதன் சிறப்பு அம்சங்களாகும்.

ஆன்டி ஏ.வி.எல் ( Antiy AVL) இந்த ஆண்டில் மொபைல் ஆன்டி வைரஸ்களில் சிறப்பிடம் பெற்ற ஒரு மென்பொருள். இதில் மொபைல் திருட்டு ‘ஆன்டி தெஃப்ட்’ அம்சங்கள் இல்லை என்பது மட்டுமே ஒரு சின்ன குறை. மற்றபடி, வைரஸ்களை கண்டறிவது, அழிப்பது, மொபைலின் வேகத்தைக் குறைக்காமல் செயல்படுவது என அத்தனையும் சிறப்பு.

பிட்டிஃபென்டர் (Bitdefender) என்பது அதிகம் பிரபலமாகாத மொபைல் ஆன்டி வைரஸ் மென்பொருள். மால்வேர்களை அழிப்பதிலும், மொபைலை பத்திரமாகப் பாதுகாப்பதிலும் இது தனது பணியை சிறப்புற செய்கிறது. ஒரே ஒரு விஷயம், இதிலுள்ள இலவசப் பதிப்பு மால்வேர்களை கண்டு பிடித்து சொல்வதுடன் நின்று விடும். அழிக்க வேண்டுமெனில் முழு பதிப்பு வாங்க வேண்டும். ஆண்டுக்கு சுமார் ஆயிரம் ரூபாய்கள்.

காஸ்பெர்க்ஸி ( Kaspersky ) இதுவும் பரவலாக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற மென்பொருள். வைரஸ்களை அறிவதிலும், அழிப்பதிலும் இது திறமையாய் செயல்படுகிறது. இதுவும் இலவசமாய் கிடைப்பதில்லை என்பது நமது பாக்கெட்டை பதம் பார்க்கும் விஷயம்.

ஏ.வி.ஜி (AVG ) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரபலமான மென்பொருள். கணினியில் வைரஸ்களை அழித்து போரிட்டுக் கொண்டிருந்த நிறுவனம் இப்போது மொபைலுக்குள் நுழைந்திருக்கிறது. இதுவும் இப்போதைக்கு இலவசமாய்க் கிடைப்பதில்லை. ஒரு மாத சோதனைப் பதிப்பு மட்டும் உண்டு. மற்றபடி இதற்குரிய விலையைக் கொடுத்தே வாங்க முடியும்.

மெக்கஃபே ( McAfee ) கனிணி உலகில் மிகப்பிரபலமான ஆன்டி வைரஸ் மென்பொருள். பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் தங்கள் அலுவலக கணினிகளில் நிறுவியிருப்பது இந்த மென்பொருளைத் தான். அது மொபைல் உலகிலும் பெயர் பெற்றிருக்கிறது. வைரஸுக்கு எதிரான அழுத்தமான பாதுகாப்பு அம்சங்களும் உண்டு. பயன்படுத்துவதற்கு எளிதானது. ஒரே ஒரு சிக்கல், இது கொஞ்சம் காஸ்ட்லி. ஆண்டுக்கு சுமார் இரண்டாயிரம் ரூபாய் கட்டணம்.

லுக் அவுட் (Lookout) மொபைல் போன்க‌ளுக்காக‌ ம‌ட்டுமே பாதுகாப்பு மென்பொருட்க‌ள் த‌யாரிக்கும் நிறுவ‌ன‌ம் தான் லுக் அவுட். அத‌னால் அத‌ன் த‌யாரிப்புக‌ள் மொபைலுக்குள் க‌ன‌ க‌ட்சித‌மாக‌ப் பொருந்தி விடுகின்ற‌ன‌. ஆனாலும் இதில் வ‌சீக‌ரிக்க‌த் த‌க்க‌ சிற‌ப்பு அம்ச‌ங்க‌ள் ஏதும் இல்லை என்ப‌தும், விலை சுமார் இர‌ண்டாயிர‌ம் ரூபாய் என்ப‌தும் கவனிக்க வேண்டிய‌ விஷ‌ய‌ங்க‌ள்.

நார்ட‌ன் (Norton ) ஆன்டி வைர‌ஸ் க‌ணினி உல‌கில் மிக‌ப் பிர‌ப‌ல‌ம். மெக்க‌ஃபே போல‌ பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ள் க‌ணினிக‌ளில் நிறுவும் இன்னொரு முக்கிய‌ த‌யாரிப்பு நார்ட‌ன் ஆன்டி வைர‌ஸ். இத‌ன் வைர‌ஸ் எதிர்க்கும் திற‌மை குறித்து ம‌று பேச்சு இல்லை. ஆனால் இதே போன்ற‌ அல்ல‌து இதை விட‌த் திற‌மையான‌ ஆன்டி வைர‌ஸ் மென்பொருட்க‌ள் உண்டு என்ப‌து தான் உண்மை. விலையும் ச‌ற்று அதிக‌ம் தான்.

( தொட‌ர்ந்து அல‌சுவோம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *