தினத்தந்தி வாரம் 4 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

Image result for big data

உங்கள் மொபைலில் வைரஸ் இருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது ? ஒரு எளிய வழி சொல்கிறேன். நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ்களின் பட்டியலுக்கு செட்டிங்ஸ் வழியாகச் செல்லுங்கள். ஒருவேளை நீங்கள் தரவிறக்கம் செய்யாத ஏதேனும் ஒரு ஆப்ஸ் அதில் இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அது வைரஸின் வேலையாய் இருக்கலாம்.

நீங்கள் ஒரு ஸ்மார்ட் போன் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் நீங்கள் எதையும் புதிதாக நிறுவவில்லை என்றே வைத்துக் கொள்வோம், அப்படிப்பட்ட சூழலில் கூட உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உண்டு. அது எப்படி ?

ஸ்மார்ட் போன் நேரடியாகக் கடைகளுக்கு வரும்போதே அதில் சில நிறுவனங்கள் தங்களுடைய “ஸ்பை வேர்” களை நிறுவுகின்றன. பெரும்பாலும் இது ஆபத்தற்றவை என்றாலும், நமது தகவல்கள், செயல்பாடுகள் கவனிக்கப்படுகின்றன என்பதே இதன் பொருள்.

சமீபத்தில் சீனாவிலிருந்து இயங்கக்கூடிய ஒரு செல்போன் நிறுவனம் பயனாளர்களின் தகவல்களைத் திருடுவதாக நிரூபிக்கப்பட்டது. வெகு சமீபத்தில் ஒரு மிகப்பெரிய மொபைல் நிறுவனம் தனது நிறுவனத்தின் செல்போன்களில் “பைடு” எனும் ஒரு உளவாளி மென்பொருளை நிறுவியது கண்டுபிடிக்கப்பட்டது.

இவை பெரும்பாலும் வியாபார‌ நோக்க‌ம் சார்ந்த‌வை. நீங்க‌ள் உங்க‌ளுடைய‌ செல்போனில் என்னென்ன‌ செய்கிறீர்க‌ள் எனும் த‌க‌வ‌லை இது சேமிக்கும். உதார‌ண‌மாக‌ நீங்க‌ள் கூகிளில் சென்று அடிக்க‌டி சில பொருட்களை தேடுகிறீர்க‌ள் என‌ வைத்துக் கொள்ளுங்க‌ள். அந்த‌த் த‌க‌வ‌ல் ஒரு இட‌த்தில் சேமிக்க‌ப்ப‌டும். இப்படி நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தகவல்களைச் சேமித்து, அந்த‌த் த‌க‌வ‌ல்களின் அடிப்படையில் வியாபாரத்துக்கான திட்டங்களை அவர்கள் வரையறுப்பார்கள். ‘இவற்றை பிக் டேட்டா அனாலிசிஸ்’ எனும் பெரிய ஒரு வட்டத்துக்குள் அடக்கி விடலாம்.

‘சென்னையில் 80 ச‌த‌வீத‌ம் பேர் இந்த‌ பொருளைத் தேடுகின்ற‌ன‌ர். ஆனால் மும்பையில் ம‌க்க‌ள் தேடுவ‌து இன்னொரு விஷ‌ய‌த்தை”. கேரளாவிலோ மக்கள் இந்த இரண்டு விஷயத்தையும் தேடவில்லை மூன்றாவதாய் ஒரு விஷயமே அவர்களின் தேடல் என, தகவல்களின் அடிப்படையில் வியாபாரத் தந்திரங்களை வகுக்கின்றனர். அதன் அடிப்படையில் அந்தந்த ஏரியாவில் தங்கள் அறுவடையை அமோகமாக்கிக் கொள்கின்றனர்.

ஒரு நாள் நீங்கள் ஒரு குறிப்பிட்ட சட்டையைத் தேடினால், அடுத்த‌ நாள் நீங்க‌ள் மொபைலில் நீங்கள் தேட‌ ஆர‌ம்பிக்கும் முன்பே ‘இந்த‌ பிராண்ட் ச‌ட்டை 50 ச‌த‌வீத‌ம் த‌ள்ளுப‌டியில் கிடைக்கிற‌து’ என‌ உங்க‌ள் விருப்ப‌மான‌ பிராண்ட் பெய‌ரைச் சொல்லி உங்க‌ளை வ‌சீகரிப்பது இந்த நுட்பத்தின் அடிப்படையில் தான்.

அதே போல, நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகைப் பாடலை தொடர்ந்து கேட்கிறீர்களெனில் அதற்குத் தக்கபடியான பாடல்களை, ஆல்பங்களை உங்களுக்கு பரிந்துரை செய்யும். அதாவது உங்களுடைய ரசனைக்கு நீரூற்றி வளர்த்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது தான் அடிப்படை நோக்கம். உங்கள் ரசனை மோசமானதாய் இருந்தால் கூட அதை நீரூற்றி வளர்க்கும் என்பது தான் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய விஷயம். ‘ஹேய்.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை’ என இளம் பெண்கள் கணினியின் ஓரமாய் கண்ணடிக்கும் விளம்பரங்கள் இத்தகைய தீய வழியின் தூண்டில்கள்.

இத்த‌கைய‌ ஸ்பை மென்பொருட்க‌ளை ப‌ய‌ன‌ர்க‌ளின் விருப்ப‌மின்றி மொபைல்களில் நிறுவுவ‌து ச‌ட்ட‌ விரோத‌மான‌து என்ப‌தை செல்போன் நிறுவ‌ன‌ங்க‌ளும் புரிந்துள்ள‌ன‌. என‌வே தான் அவை த‌ங்க‌ளுடைய‌ க‌ண்ணுக்குத் தெரியாத ‘டேர்ம்ஸ் அன்ட் க‌ன்டிஷ‌ன்க‌ளில்’ இதை ப‌ட்டும் ப‌டாம‌லும் ப‌திவு செய்கின்ற‌ன‌. இவை நிறுவனங்களின் விளம்பரங்களுக்கான யுத்தி. இதனால் உங்களுக்குப் பெரிய இழப்பு ஏதும் இல்லை. அடிக்கடி “நல்லா பாருங்க சார்.. இது ரொம்ப நல்ல பொருள் சார்” என உங்களை விளம்பரங்கள் மூலம் தொந்தரவு செய்யும் அவ்வளவு தான்.

நாம் நினைவில் கொள்ள‌ வேண்டிய‌து இது தான். ந‌ம‌து கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் எந்த‌ நேர‌த்திலும் மூன்று இட‌ங்களுக்குத் தொடர்பு கொண்டு ந‌ம‌க்குத் தெரிந்தோ தெரியாம‌லோ தகவல்களை அனுப்பிக் கொண்டும், பெற்றுக் கொண்டும் இருக்கின்றன என்பது தான் உண்மை. எந்த மூன்று இடங்கள் ?

ஒன்று, செல்போன் த‌யாரிப்பு நிறுவ‌ன‌ங்க‌ள். நமது மொபைல், செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ந‌ம‌து செல்போனின் பிர‌ச்சினைக‌ள், பிழை குறியீடு போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளைத் தொட‌ர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கின்ற‌ன. எனவே உங்கள் கையிலிருக்கும் மொபைல் நிறுவனம் நினைத்தால் உங்களுடைய தகவலை அவர்கள் எடுத்துக் கொள்ள முடியும்.

இர‌ண்டாவ‌து, ந‌ம‌து செல்போனின் சேவை வ‌ழ‌ங்கு நிறுவ‌ன‌ங்கள் (ஏர்டெல், ஏர்செல் போன்றவை சேவை வழங்கு நிறுவன உதாரணங்கள் ). அவ‌ர்க‌ளுக்கும் ந‌ம‌து செல்போனிலிருந்து த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ம் ந‌ட‌ந்து கொண்டே இருக்கும். நாம் அனுப்புகின்ற எந்த செய்தியும் சேவை வழங்கு நிறுவனங்கள் இல்லாமல் பயணம் செய்ய முடியாது. அவர்களுடைய சர்வர்கள் வழியாகச் செல்லும் நமது தகவல்கள் அங்கே எங்கு வேண்டுமானாலும் திருடப்படலாம்.

மூன்றாவது ஆப்ஸ். யாரோ த‌யாரித்து ந‌ம‌து மொபைலுக்குள் இய‌ங்கிக் கொண்டிருக்கும் மென்பொருட்க‌ள் த‌க‌வ‌ல்க‌ளைக் க‌ட‌த்திக் கொண்டிருக்கின்ற‌ன. இந்த மூன்றாவது இடம் எங்கே என்பது பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் நாம் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யும் போது புரியாத பாஷையில் சட்ட திட்டங்களை எழுதி வைத்து நம்மை “ஓகே” சொல்ல வைத்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு சட்டச் சிக்கல்கள் எதுவும் வருவதும் இல்லை.

இந்த மூன்று வகைகளும் தவிர, நான்காவதாக வருகிறார்கள் இணைய திருடர்கள். ஹேக்கர்ஸ் என அழைக்கப்படும் இவர்கள் எந்த இடத்தை வெட்டி எப்போ திருடுவார்கள் என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் சைலன்டாக திருடிக் கொண்டு போய்விடுவார்கள். இந்தத் தகவல் திருட்டு டிஜிடல் உலகில் மிகப்பெரிய சவால்.

பிரான்சிலிருந்து இய‌ங்கும் க்வாஸ்மோஸ் எனும் இணைய‌ பாதுகாப்பு நிறுவ‌ன‌ம் த‌ன‌து ஆராய்ச்சியில், ‘ஒரு ப‌ய‌னாள‌ர் ஒரு நாள் எத்த‌னை ஃபேஸ் புக் மெசேஜ் அனுப்புகிறார் என்ப‌தைக் கூட‌ சேக‌ரித்து, அதன் அடிப்ப‌டையில் ப‌ய‌ன‌ருக்கு விள‌ம்ப‌ர‌ங்க‌ள் அனுப்புகின்ற‌ன‌ர்” என்ற‌து. மூன்று ஆண்டுக‌ளுக்கு முன்னால் அமெரிக்க மொபைல் சேவை நிறுவனங்கள் “கேரிய‌ர் ஐ.க்யூ” எனும் ஆப்ளிகேஷ‌னைப் ப‌ய‌ன்ப‌டுத்தி ப‌ய‌ன‌ர்க‌ளின் அந்த‌ர‌ங்க‌ த‌க‌வ‌ல்க‌ளைத் திருடிய‌து அமெரிக்காவில் பெரிய‌ வ‌ழ‌க்காகவே ந‌டைபெற்ற‌து.

பெரும்பாலான‌ இத்த‌கைய‌ ஸ்பைவேர்க‌ள் ந‌ம்முடைய‌ ‘இட‌ம்’ எது என்ப‌தைத் தான் முதலில் அறிய‌ விரும்புகின்ற‌ன‌. உதார‌ண‌மாக‌, சென்னை வேள‌ச்சேரியில் நீங்க‌ள் இருக்கிறீர்க‌ள் என‌ ஸ்பைவேர்க‌ள் க‌ண்டுபிடிக்கிற‌து என‌ வைத்துக் கொள்ளுங்க‌ள். உங்க‌ளுக்குப் பிடித்த‌மான‌ உண‌வ‌க‌ங்க‌ள், க‌டைக‌ள், உட‌ற்ப‌யிற்சி நிலைய‌ங்க‌ள், இத்யாதிக‌ள் எல்லாம் வேள‌ச்சேரி ப‌குதியில் எங்கெக்கே கிடைக்கும் என‌ உங்க‌ளுக்கு அடுத்த‌ முறை ப‌ட்டிய‌லிடுகின்ற‌ன‌. அந்த‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளை எத்த‌னை முறை நீங்க‌ள் பார்க்கிறீர்க‌ள், ப‌ய‌ன்ப‌டுத்துகிறீர்க‌ள் என்ப‌தை வைத்து அந்த‌ ‘ஆப்ஸ்’ த‌யாரிப்ப‌வ‌ர்க‌ள் ப‌ய‌ன‌டைகிறார்க‌ள்.

முழுக்க‌ முழுக்க‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டும் சேக‌ரித்து அத‌ன் மூல‌ம் த‌ங்க‌ள் வியாபார‌ நுணுக்க‌ங்க‌ளை வ‌குக்கும் மென்பொருட்க‌ள் பெரிய‌ அள‌வில் ந‌ம‌க்கு சேத‌ம் விளைவிப்ப‌தில்லை. ஆனாலும் அவை ந‌ம‌து மொபைல் போனில் இட‌த்தை ஆக்கிர‌மித்து, ந‌ம‌து மொபைலின் வேக‌த்தையும் தின்று விடும். எவ்வ‌ள‌வு தான் ஆப‌த்தில்லையென்றாலும்,ந‌ம‌து அனும‌தியில்லாம‌ல் ந‌ம‌து வீட்டுக்குள் யாரோ ஒருவ‌ர் வ‌ந்து த‌ங்க‌ நாம் அனும‌திப்போமா என்ன‌ ?

( தொட‌ர்ந்து அல‌சுவோம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *