கிறிஸ்தவம் : குழந்தைகளும், கிறிஸ்தவமும்

இறைவனின் குழந்தைகள்.

Image result for jesus and kids

“உனக்கு என்ன கொழுந்த பொறந்திருக்கு ?”

“ஆம்பள !”

“நல்லாயிருக்கட்டு பிள்ள.. நல்லாயிருக்கட்டு”

“உனக்கு ஆணா பெண்ணா ?”

“பெண்ணு..”

“ஆணாயிருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன ? ஆயுசோட இருக்கணும். அத்தற தேன்”

ஒரு சில பத்து ஆண்டுகளுக்கு முன் நம்ம ஊர் கிராமங்களில் இத்தகைய உரையாடல்கள் சர்வ சாதாரணம். ஆண் குழந்தையென்றால் உடனடி மகிழ்ச்சி ! மனப்பூர்வமான வாழ்த்துகள். பெண் பிள்ளையெனில், “சரி, கடவுள் கொடுத்தது நல்லா இருக்கட்டும்” எனுமளவில் ஒரு வார்த்தை ! ஒரு ஆறுதல் வார்த்தை போல.

ஒருவேளை தொடர்ந்து இரண்டு மூன்று பெண்பிள்ளைகளெனில், “அச்சச்சோ… மறுபடியும் பொண்ணா, பாவம்.. ” என உச்சுக் கொட்டும் பாட்டிமார் நிறைய இருந்தார்கள். இன்றைக்கு சமூகம் கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆணோ பெண்ணோ இரண்டுக்குமேல் யாரும் பெற்றுக் கொள்வதில்லை. ஆண் பெண் பாகுபாடு குமரி போன்ற மாவட்டங்களில் குறைவாகவே இருக்கிறது.

குறைவாய் இருக்கிறது என்பதை விட‌ மறைவாய் இருக்கிறது என்று சொல்வதே மிகவும் பொருத்தம். ஏனென்றால், இத்தகைய சிந்தனைகள் முழுமையாக விலகவில்லை. கொஞ்சம் மறைந்து இருந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது அவ்வளவு தான்.

வட இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கின்ற வன்முறைகள் அதிகம். சமூக அங்கீகாரம், சமூக சமநிலை போன்றவை அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

ஆயிரம் ஆண்களுக்கு 1029 பெண்கள் என்பது அமெரிக்க விகிதம். 1000 ஆண்களுக்கு 1076 பெண்கள் என்பது இங்கிலாந்து விகிதம். இந்தியாவில் ? ஆயிரம் ஆண்களுக்கு 927 பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். நமது நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான நிலைப்பாடு மாறவில்லை என்பதன் வெளிப்பாடு தான் இது. கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்பதைக் கண்டறிவது சட்ட விரோதம் என மாறியதே பெண்குழந்தைகளைக் காப்பாற்றத் தான் !

நமது வீடுகளில் இன்றும் பெண்களுக்கு எதிரான ஒரு மெல்லிய மனப்பாங்கு நம்மையறியாமல் உலவிக் கொண்டு தான் இருக்கிறது. ‘என்ன இருந்தாலும் நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போகப் போறவ தானே” எனும் சிந்தனையுடன் தான் பெண்பிள்ளைகள் கவனிக்கப்படுகின்றனர். பல வேளைகளில் அவர்களுக்கான கல்வியறிவு, மருத்துவ சுகாதாரம் போன்றவை நாசூக்காக நறுக்கப்படுகின்றன.

ஒரே ஒரு பிள்ளையை மட்டுமே படிக்க வைக்கும் வசதியுடைய குடும்பங்களைச் சந்திக்கும் போது இந்த உண்மை உறைக்கும். “தம்பி படிக்கட்டும்ன்னு நான் அண்டி ஆபீஸ் போறேன்” என சொல்கின்ற குடும்பங்கள் இன்றும் எக்கச் சக்கம். எங்கே பெண்களுக்கான கல்வி அதிகரிக்கிறதோ அந்த இடங்களில் வாழ்க்கை செழிப்படைகிறது.

கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா போன்ற இடங்களில் பெண்களின் கல்வி விழுக்காடு அதிகம். எனவே தான் இந்த  மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறைவாக இருக்கின்றன. நடக்கின்ற கொடுமைகளும் தைரியமாக சமூகத்தில் விவாதப் பொருளாகவும், எதிர்ப்பு அலையாகவும் உருவெடுக்கின்றன. பெண்களுக்கான கல்வி மறுக்கப்படும் வட மாநிலங்களில் பெண்களின் வாழ்க்கைத் தரம் பெருமளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது.

யூனிசெஃப் அக்டோபர் 2016ல் வெளியிட்ட அறிக்கை ,”சிறுவர்களை விட 40 % அதிக நேரம் சிறுமிகள் உழைக்கிறார்கள்” என்று பேசியது. சமூக ஏற்றத்தாழ்வுகள் இந்த நாட்களிலும் கூட குறையவில்லை என்பதையே இத்தகைய ஆய்வுகள் விளக்குகின்றன. மேலை நாடுகளில் ஆண்களை விட சில ஆண்டுகள் அதிகம் உயிர் வாழும் பெண்கள், இந்தியாவில் நீண்ட நாட்கள் வாழ்வதில்லை. காரணம் அவர்களுக்குத் தேவையான உணவும், ஊட்டச் சத்தும் சிறு வயதிலிருந்தே  கிடைக்காதது தான்.

“உலகத்திலேயே பெண்பிள்ளைகளுக்கு ஆபத்தான நாடு இந்தியா” என்று சில ஆண்டுகளுக்கு முன் ஐக்கிய நாடுகள் அறிக்கை சமர்ப்பித்திருந்தது கவனிக்கத்தக்கது. சின்ன வயதில் உயிரிழப்பதில் பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம் என அது குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவிலும், ஏன் சர்வதேச அளவிலும் ஆண் பெண் வேறுபாடுகள் இருக்கின்றன. சில நாடுகளில் இலை மறை காயாகவும், சில நாடுகளில் வெளிப்படையாகவும் இருக்கின்றன. பெரிய பெரிய கம்பெனி நிறுவனர்கள், சி.இ.ஓக்கள் போன்றவர்களில் 95% பேர் ஆண்கள் எனும் ஒரு சின்ன புள்ளி விவரமே போதுமானது இதை விளக்க.

சரி, விவிலியம் குழந்தைகளைப் பற்றி என்ன பேசுகிறது ?

  1. விண்ணகத்தில் பெரியவர்கள்

“குழந்தைக்குக் கற்றுக் கொடு” என்பது உலக வாக்கு. குழந்தையிடமிருந்து கற்றுக் கொள் என்பது விவிலிய வாக்கு. காரணம் குழந்தைகள் தான் விண்ணகத்தில் பெரியவர்களாக இருக்கிறார்கள். “சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர் ( மத்தேயு 18 : 4 ) என்கிறது பைபிள்.

குழந்தைகள் தான் தாழ்மையை இயல்பாகவே கொண்டிருப்பவர்கள். அவர்களிடம் ஈகோ இல்லை. அடிக்கும் அன்னையின் கால்களை திரும்பத் திரும்ப அழுது கொண்டே கட்டிக் கொள்ளும். அப்படியே இயேசுவை முழுமையாய் பற்றிக் கொள்வதே தாழ்மை.

தன்னால் எதுவும் முடியாது, இறைவனே வேண்டும் என கட்டிக் கொள்வதே தாழ்மை. குழந்தைகள் விண்ணகத்தில் பெரியவர்கள். நாம் விண்ணகத்தில் பெரியவர்கள் ஆக வேண்டுமெனில், குழந்தையைப் போல நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்.

  1. இறையாட்சிக்கு உரியவர்கள்

குழந்தைகளை அதட்டிய சீடர்களை இயேசு “கோபத்துடன்” பார்க்கிறார் என்கிறது விவிலியம் ( மார்க் 10 :14). இயேசு கோபம் கொள்ளும் மிகச் சில நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. இறையாட்சி இத்தகையோருக்கே உரியது ( மார்க் 10: 15) என்கிறார் இயேசு.

இறையாட்சியை சிறு பிள்ளையைப் போல ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் இயேசு. சிறு பிள்ளைகள் பெற்றோர் சொல்வதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளும். நிலவைப் பிடிச்சுத் தரேன் என்று சொன்னாலும், “ஹை..ஜாலி” என குதூகலிக்கும். எந்த சந்தேகமும், விஞ்ஞான விளக்கமும் அதற்குத் தேவையில்லை. அது போல நாமும் இறையாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் இயேசு.

  1. ஆண்டவர் அருளும் செல்வம்

மண்ணில் பிறக்கின்ற எல்லா குழந்தைகளுமே இறைவனிடமிருந்தே வருகின்றன. இறைவனின் அருளால் தான் குழந்தைகள் பூமிக்கு வருகிறார்கள். “பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில். ( சங்கீதம் 127 : 3 ) என்கிறது பைபிள்.

ஆண் குழந்தைகள் மட்டுமே இறைவன் அருளும் செல்வம் என பைபிள் சொல்லவில்லை. எல்லா குழந்தைகளும் இறைவனின் செல்வம் என பொதுப்படையில் சொல்கிறது. ஆண், பெண் பாகுபாடு எதையும் பைபிள் காண்பிக்கவில்லை என்பது தெளிவு. அத்தகைய சூழலில் நாம் பாகுபாடு காட்டினால், அது இறைவனுக்கு எதிரான செயல் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.

  1. ஸ்பெஷல் வானதூதர்கள் உண்டு

“இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” ( மத்தேயு 18:10 )என்கிறார் இயேசு. இங்கே சிறியோர்கள் என்பதை வலிமையில் சிறியோர்கள் என்றும், சமூகத்தில் சிறியோர்கள் என்றும் அர்த்தப்படுத்தி சொல்கிறார். அது சிறுவர்களுக்கும் பொருந்தும்.

சின்னப் பய தானே, என நினைத்து எத்தனையோ விஷயங்களில் சிறுவர்களை நாம் உதாசீனம் செய்வதுண்டு. அவர்களுக்கான வானதூதர்கள் பிதாவின் அருகில் இருக்கிறார்கள் எனும் சிந்தனை இனிமேல் நம் மனதில் இருக்கட்டும்.

  1. ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள்

“இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்” மத்தேயு 18: 5 இப்படி சொல்கிறது. சிறு பிள்ளைகளை அப்படியே இயேசுவின் பெயரால் ஏற்றுக் கொள்பவர்கள் இயேசுவையே ஏற்றுக் கொள்வது போல பெரும் பாக்கியம் அடைகின்றனர்.

சிறு பிள்ளைகள் இறைவனின் பிம்பங்கள். அதனால் தான் இயேசுவே குழந்தையாய் மண்ணில் வந்தார். அவர் பிற மத அவதாரங்களைப் போல பெரிய மனிதனாக உருவாகவில்லை. குழந்தையாய் வந்து, குழந்தையாய் வாழ்ந்து அதன் தன்மைகளை அனுபவித்து பெரியவரானார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  1. ஊழியத்தில் பங்காளர்கள்

இயேசு சிறுவர்களின் பங்களிப்புகளை எப்போதுமே உதாசீனம் செய்ததில்லை. குழந்தைகளின் நோய்களைத் தீர்த்தார், இறந்த குழந்தையை உயிருடன் எழுப்பினார். கூடவே அவர்களை ஊழியத்திலும் பயன்படுத்தினார்.

ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேர் உண்டார்கள். அந்த மாபெரும் நிகழ்வுக்குக் காரணமாய் இருந்தது ஒரு சிறுவன் தான் ! அவன் கையிலிருந்த அந்த சின்ன உணவு தான் மாபெரும் புதுமைக்கு முதல் படியாய் மாறிப் போனது. எனவே சிறுவர்களை ஊழியங்களில் பயன்படுத்துவதை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

  1. இறைவனைப் புகழ்பவர்கள்.

இயேசு எருசலேமிற்குள் நுழைந்த போது பாலகர்கள் அவரைப் புகழ்ந்தார்கள். ஓசானா ஒலி எங்கும் கேட்டது. மறை நூல் அறிஞர்கள் இயேசுவின் மீது எரிச்சல் பட்டார்கள். இயேசுவோ,  “ஆம்! ‘பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடு செய்தீர்’ என்று ஒருபோதும் மறைநூலில் படித்ததில்லையா?” என்று கேட்டார் ( மத்தேயு 21 : 16 ). அவர்கள் வாயடைத்து நின்றனர்.

குழந்தைகள் இறைவனைப் புகழ்பவர்கள். அவர்கள் புகழ்வதைக் குறித்த தீர்க்கத் தரிசனங்களும், வரலாற்றுப் பதிவுகளும் எங்கும் இருக்கின்றன. பாலகர்களின் முக்கியத்துவத்தையும், இறை புகழ்ச்சியில் அவர்களுடைய பங்களிப்பையும் இது விளக்குகிறது.

சுருக்கமாக, குழந்தைகள் இறைவனின் சாயல். இறைவனால் அன்பு செய்யப்பட்டவர்கள். இறைவனின் ஊழியத்தில் பங்கு கொண்டவர்கள். பெரியவர்களுக்கு மாதிரியாய் இருப்பவர்கள். இறை புகழுக்கும், விண்ணக வாழ்வுக்கும் உரியவர்கள். எனவே அவர்களை எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே விவிலியம் சொல்லும் செய்தியாகும்.

( Thanks Desopakari )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *