என் செய்வேன் பிரியமே

Image result for beautiful girl fantasy

உன்
நினைவுகள் துரத்த
அறைக்குள் மூடி
தாளிட்டுக் கொண்டேன்.

சுவர்களெங்கும்
அறையப்பட்டிருந்த
உன்
சிரிப்புகள் சிதறி விழுகின்றன.

இருக்கைகளில்
அமர்ந்திருக்கும்
உன்
சொற்கள் சரிகின்றன.

போர்வை மூடி
படுக்கையில் கவிழ்கையில்
கீழிருந்து
முளைக்கின்றன
உன் தந்த விரல்கள்.

இமைத் திரைகளை
இறக்கினால்
விழிகளுக்குள் உளிகளாய்
உன்
ஸ்பரிசங்கள் மிதக்கின்றன.

என்
அவஸ்தைகளின் அங்குலமும்
அறியாத நீ
அடக்குதலின் அங்குசத்தை
உதடுகளில்
தளும்பத் தளும்ப
நிரப்பி வைத்திருக்கிறாய்.

மீண்டும் மீண்டும்
தற்கொலைத் தாக்குதல் நடத்தும்
என்
காதல் விண்ணப்பங்கள்
மீளும் வழிக்காக,
மீண்டும் உன்னைச் சந்திப்பதென
முடிவெடுத்துக் கொண்டு
கனவுகளுக்குள்
கடந்து செல்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *