அச்சம் என்பது மடமையடா திரை விமர்சனம்

Image result for acham enbathu madamaiyada

கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு எனும் அதே வெற்றிக் கூட்டணியின் வந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா.

கௌதம் படங்களின் டிரென்டுக்கு மாறாக இதில் படித்த கதாநாயகன். அரியர் வைக்காத நாயகன். ஏன் இந்தப் படத்தில் மட்டும் கதாநாயகன் எம்பிஏ எல்லாம் படித்தான் என்பது கிளைமேக்ஸ் காட்சியில் விளங்கும்.

வழக்கம் போல ஜாலியாய் நண்பர்களுடன் கேரம் விளையாடியும், பளிச் வசனங்கள் பேசியும் பொழுதைக் கழிக்கும் சிம்புவுக்கு பெண்களைப் புரிந்து கொள்ளும் வரம் கைவரவில்லை. இரண்டு தங்கைகள் இருந்தும் பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முடியவில்லையே என புலம்புகிறார்.

அப்போது அங்கே வருகிறார் தங்கையின் தோழி. தோழி புதுமுகம். என்னவளும் சீதையே எனும் குறும்படத்தில் அசத்தலாக நடித்திருப்பார். வீட்டிலேயே தங்கும் தோழியிடம் கதை பேசிக் கதை பேசி மனதுக்குள் பட்டாம் பூச்சித் தோட்டம் வளர்க்கிறார் சிம்பு. பைக் பிரியரான அவருக்கு நீண்ட பைக் பயணம் ஒரு கனவாய் இருக்கிறது.

அப்படி ஒரு பயணம் கதாநாயகியோடு செல்ல வேண்டிய பரவச தருணம் வருகிறது. கன்யாகுமரிக்குப் பயணிக்கிறார். பின்னர் மஹாராஷ்டிரா செல்லும் வழியில் ஒரு விபத்து ! அதன் பின் காணாமல் போகும் கதாநாயகி, மீண்டும் தொடர்பு கொள்ளும் போது ஒரு படபடப்புச் சூழலில் அவர் சிக்கியிருப்பது புரிகிறது.

சிம்பு அந்த சூழலில் என்ன செய்தார் ? எப்படி செய்தார் ? ஏன் செய்தார் ? அதில் என்னென்ன நடந்தன போன்ற கேள்விகளுக்கான விடைகள் திரையில்.

ஒவ்வொரு காட்சியிலும் கௌதம் மேனனின் பெயர் பச்சை குத்தி வைத்திருக்கிறது எனலாம். குறிப்பாக முழுக்க முழுக்க ஃப்ரெஷ் ஆன காதல் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யம். முதல் பாதி படு வேகமாக முடிந்து விடுகிறது. எல்லா பாடல்களும் இடைவேளைக்கு முன் விடை பெற்று விடுகின்றன. இருந்தாலும் சலிப்பு வரவில்லை என்பது வியப்பு.

சிம்புவுக்கு நிச்சயமாய் ஒரு ரீ என்ட்ரி படம் இது. இவ்வளவு அழகாகவும் ஆக்ரோஷமாகவும் நடிக்க முடியும் என அவர் நிரூபித்திருப்பது இந்தப் படத்தில் தான். உதாரணமாக முதன் முறையாக துப்பாக்கியால் சுடும்போது அவருடைய கண்களும், உடலும் ஒரு சேர நடிக்க பிரமாதப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகள் வரும்போது துரு துரு இளைஞன் போலவும், ஆக்ஷன் காட்சிகளில் பரபர இளைஞனாகவும் இவருடைய உடல் மொழி மாறிவிடுவது நடிப்பின் இன்னொரு உதாரணம்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் என்று சொல்வேன். பாடல்களிலும் தாமரையின் வரிகளும், இசைப்புயலின் இசையும் பின்னிப் பிணைந்து பிரமிக்க வைக்கின்றன.

அசத்தலான ஒளிப்பதிவு. பாட்டு என்றாலே வெளிநாட்டுக்கு ஓடும் சூழலை மாற்றி கன்னியா குமரியின் சூரிய உதயத்தை உணர்வு பூர்வமாய் படம் பிடித்திருப்பதில் இயக்குனரின் கவித்துவம் தெரிகிறது.

கதாநாயகி அன்றலர்ந்த மலராய் அறிமுகமாகி, அறிமுகமான மலராய் நிலைபெறுகிறார். அசத்தல் வரவு. பாலக்காட்டுப் பைங்கிளி மஞ்சிமா. பல படங்களில் குழந்தை நட்சத்திரமாய் நடித்த அனுபவம் பெற்றவர். வடக்கன் செல்ஃபியில் சின்னப் பெண்ணாக வந்தவர். “இவிடிந்து போய கௌதம் மேனன் தமிழ்நாட்டிலு கலக்குந்நு” என மலையாளம் பேசிய கிளி, அவர் படத்திலேயே தமிழ் பேசியிருப்பது அழகிய முத்தாய்ப்பு.

வில்லனாய் அறிமுகமாகியிருக்கும் பாபா ஷாகேல் கொஞ்சமாய் பயமுறுத்துகிறார். டானியேல் பாலாஜி டக்கென அறிமுகமாகி சட் சட்டென போய் விடுகிறார். வேட்டையாடு விளையாடு படத்தைப் போன்ற ஒரு படம் அவருக்கு பிறிதொன்று அமையவில்லை என்பது தான் நிஜம்.

சிம்புவின் நடிகர் சதீஷ் கட்சிதமான தேர்வு. ரசிக்க வைக்கிறார்.

தள்ளிப் போகாதே பாடலை படமாக்கியிருக்கும் விதமும், அது திரைக்கதையின் முக்கிய காட்சியோடு எப்படி இணைகிறது என்பதும் இயக்குனரின் புதுமையான டச்க்கு ஒரு உதாரணம்.

இடைவேளைக்குப் பின் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார் இயக்குனர். கடைசிக் காட்சியில் சினிமாத்தனம் தலை காட்டுவது கௌதம் மேனன் படங்களில் நாம் இதுவரை பார்க்காதது. ஒரு கமர்ஷியல் முடிவாக ரசிக்க முடிகிறது.

முதல் பாதி ஆக்ஷனே இல்லாவிட்டாலும் பரபரப்பாகப் போகிறது. பிற்பாதி ஆக்ஷன் ரூட்டுக்குத் தாவினாலும் வேகம் கொஞ்சம் குறைவு. வேட்டையாடு விளையாடு + விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டு படங்களின் அம்சங்களும் இருந்தாலும் புதுசாய் இருக்கிறது படம்.

துவக்கத்திலேயே இந்தப் படத்தின் கரு காட்ஃபாதர் படத்தின் ஒரு காட்சியின் பாதிப்பு என்கிறார் இயக்குனர். சாமான்யனாய் இருக்கும் அல்பசினோ எப்படி தலைவனாகும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார் என்பது தான் அவர் எடுத்த சிந்தனை என நினைக்கிறேன். அதை வெளிப்படையாய் சொல்லாமல் இருந்தாலும் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால் அதை பளிச் என சொன்னதில் அவருடைய நேர்மையும், அவர் தனது படைப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் வெளிப்படுகிறது.

அச்சம் என்பது மடமையடா, ரசிக்க வைக்கிறது.

*

3 thoughts on “அச்சம் என்பது மடமையடா திரை விமர்சனம்

 1. Swamy says:

  Xavier….Reala ippave padam parkanum pol thondrugirathu….after reading your review…!! Thanks, Swamy

  1. writerxavier writerxavier says:

   Thank you Swamy 🙂

 2. மது says:

  ரசிக்க வைத்தால் சரி ..
  பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *