கொடி திரை விமர்சனம்

Image result for Kodi dhanush

சில படங்களில் சறுக்கலைச் சந்தித்து, தொடரியில் அதிவேக ரயிலில் இருந்து விழுந்து பலத்த அடிபட்ட தனுஷ், மீண்டு எழுந்து மீண்டும் மிடுக்கு காட்டியிருக்கும் படம் கொடி !

அரசியலில் சாதிக்க வேண்டும் எனும் வெறி ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது, அரசியல் போதையும் அரசியல் பதவியும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது, பதவிக்காக ஒருவர் எதையெல்லாம் இழக்கத் தயாராகிறார் என்பதை காதல், பாடல், சமூகப் பொறுப்பு என பலவற்றைக் கலந்து கட்டி சொல்லியிருக்கிறார்கள்.

கொடி என்பது கதாநாயகனின் பெயர் என்பதிலிருந்து படத்தின் சுவாரஸ்யம் தொடங்குகிறது. நம்ம ஊர் உண்மையான எம்.எல்.ஏ கருணாஸ், படத்தில் வாய் பேச முடியாத, காது கேளாதவர். அரசியலில் சாதிக்க வேண்டும் எனும் வேகம் மட்டும் இருக்கிறது. அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. ஒருவர் அரசியலில் பட்டையைக் கிளப்ப, இன்னொருவர் கல்லூரியில் பாடம் நடத்துகிறார்.

பாடம் நடத்துபவர் அரசியலுக்கு வரவேண்டிய சூழல் நிகழ்கிறது. அது எப்படி நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது என்பதையெல்லாம் விளக்கமாய்ச் சொல்ல இது பழைய விகடன் அல்ல ! எனவே நீங்களே வெண்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்

இந்தப் படத்தை அப்படியே அலேக்காகத் தூக்கி நிறுத்துபவர்கள் மூன்று பேர். கொடி எனும் தனுஷ், ருத்ரா எனும் திரிஷா, அன்பு எனும் தனுஷ். மூன்று பேருமாக படத்தை கொடிக்கம்பத்தில் தூக்கிக் கட்டுகிறார்கள். சரண்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகுமார் எனும் துணை கதாபாத்திரங்கள் அதற்கு துணை நிற்கின்றன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைதிப்படையின் சாயலில் படம் பார்ப்பது சுவாரஸ்யம். நடிப்பில் எப்போதுமே குறை வைக்காத தனுஷ் தனது இரட்டை வேடத்தை மிகவும் வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார். அதிலும் அரசியல்வாதியாய் வரும் காட்சிகளில் அவருடைய நடிப்பு புதிய எல்லையைத் தொட்டு விடுகிறது.

கொடி பறக்குது ! எனும் தலைவர் பட டைட்டிலை கொஞ்சம் மாற்றி “கொடி பறக்குதா ?” என கேள்வி கேட்கிறார் தனுஷ். ஆங்காங்கே ரஜினியின் பட டயலாக்குகளை கொஞ்சமாய் டிங்கரிங் பண்ணி கைத்தட்டல் வாங்குகிறார் இயக்குனர்.

இயக்குனர் துரை செந்தில் குமாருக்கு இது மூன்றாவது படம், ஹாட்ரிக் வெற்றி என்று சொல்லலாம். தனது படங்களைத் தயாரித்தவரை, தனது பட இயக்குனராக்கியிருப்பதில் தனுஷின் நம்பிக்கை தெரிகிறது.

வரவர சந்தோஷ்நாராயணனின் இசை படுத்தி எடுக்கத் துவங்கியிருக்கிறது. அனிருத்தின் இரைச்சலுக்கு இந்த இசைச்சல் பரவாயில்லை ரகம் தான். அனுபமாவின் கதாபாத்திரம் அழகு. எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் தலைவருக்குரிய அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

சண்டைக்காட்சிகள், சவால் காட்சிகள், அரசியல் நேர் எதிர் காட்சிகள் போன்றவற்றால் படத்தை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள். ஆலைக்கழிவுகள் எப்படியெல்லாம் மக்களைப் பாதிக்கின்றன, அவர்கள் பெரும்பான்மைச் சாதியையோ, கட்சியையோ சாராமல் இருக்கும்போது அவர்கள் எப்படி நிராகரிக்கப்படுகின்றனர் என்பதையெல்லாம் போகிற போக்கில் சொல்லிச் சென்றிருக்கிரார்கள்.

த்ரிஷாவின் கதாபாத்திரம் அவருக்கு ஒரு மைல்கல். நாயகி, பேயகி என கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தவருக்கு இதில் வலுவான கதாபாத்திரம். அசரடித்திருக்கிறார். தொடர்த்து இத்தகைய வித்தியாசமான கதாபாத்திரங்களை கண்டு பிடித்து நடிக்கட்டும்.. வாழ்த்துகள்.

கொடி பறக்குது !

Image result for Kodi movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *