அன்பின்றி அமையாது உலகு

Image result for Happy elderly couple

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த மற்ற நண்பர்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை.

“குமார் இப்போ நல்லா இருக்கான். நாலஞ்சு மாசத்துக்கு  முன்னாடி ஒரு கார் வாங்கினான். போனவருஷம் தான் வீடு வாங்கினான். ஒரு இருபத்தைஞ்சு முப்பது சம்பளம் வாங்குவான்னு நினைக்கிறேன். அப்படியே லைஃப்ல செட்டில் ஆயிட்டான்”

“அருள் பாவம்டா. இன்னும் சரியான வேலை கிடைக்காம கஷ்டப்படறான். வாடகை வீட்ல தான் இருக்கான்.”

இப்படிப்பட்ட கதைகளைக் கொஞ்சம் அலசி ஆராந்து பாருங்கள். நமது ஒப்பீடுகளும், அளவீடுகளும், மகிழ்ச்சிக்கான எல்லைகளும் பெரும்பாலும் பொருளாதாரம் சார்ந்தே இருக்கின்றன என்பது புரியும்.

ஒரு வீடு, கார் வாங்கி ஒரு நல்ல வேலையில் இருந்தால் அவன் பாக்கியசாலி ! இதில் ஏதாவது குறைவு படுபவனோ அனுதாபத்துக்குரியவன். இந்த மதிப்பீடுகள் சரியா என்பதைப்பற்றி நாம் எப்போதாவது ஆர அமர யோசித்ததுண்டா ?

ஆனந்தமும், வாழ்வின் உன்னதமும் பொருளாதாரத்தால் அமைவதல்ல என்பதைப் புரிந்து கொள்ளும்போது நமது வாழ்வின் சட்டென ஒரு திருப்பம் உண்டாகும். பொருளாதாரம் ஒரு மனிதனுக்கு வசதிகளைத் தர முடியும். ஆனால் ஆழமான அன்பு குடும்பத்தில் நிலவும் போது மட்டுமே அவனுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆகிறது.

ஈகோவும், பிணக்குகளும், பொறுமையின்மையும், விட்டுக் கொடுத்தல் இல்லாமையும்  இன்றைய தம்பதியரிடையே மிக அதிகம். விவாகரத்து எண்ணிக்கைகள் கிடு கிடுவென உயர இவையெல்லாம் முக்கியமான காரணிகள். குறிப்பாக இளம் தம்பதியினர் உப்பு சப்பில்லாத காரணத்துக்கெல்லாம் விவாகரத்து செய்வது அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

சிலி நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அபார்க்காவுக்கு மனைவி எரிகா சோடிலோ மீது மிகுந்த அன்பு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய கருப்பையில் நோய் வந்தது. எனவே கருப்பையை நீக்க வேண்டிய நிலை. ஆபரேஷனுக்காக ஆஸ்பிடலில் மயக்க மருந்து கொடுத்தார்கள். அது ஏராகூடமாகி அவருடைய மூளையைப் பாதிக்க, எதிர்பாராத விதமாக கோமா நிலைக்குப் போனார்.

கார்லோஸ் துடித்துப் போனார். மனைவி சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டுமே என பிரார்த்தித்தார். மனைவியின் அருகிலேயே எதிர்பார்ப்புகளோடு அமர்ந்திருந்தார். நாட்கள் ஓடின, மாதங்கள் ஓடின, வருடங்களும் ஓடிவிட்டன. நண்பர்கள், உறவினர்கள், மருத்துவர்கள் எல்லோருமே நம்பிக்கை இழந்து விட்டார்கள். இவர் இனிமேல் உயிரை மட்டும் கொண்டிருக்கும் “வெஜிடபிள்” நிலை தான் என்றார்கள்.

எதுவும் கணவனுக்கு மனைவி மீது இருந்த காதலைக் குறைக்கவில்லை. கடந்த பதினைந்து வருடங்களாக கார்லோஸ் தினமும் மூன்று நேரம் தனது மனைவியின் அருகே சென்று அமர்கிறார். அவருடைய கரங்களைப் பற்றி அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் சொல்கிறார்.  மனைவி ஒருவேளை தான் பேசுவதையெல்லாம் கேட்கக் கூடும் எனும் நம்பிக்கையில் கண்கள் பனிக்க அன்பைச் சொல்கிறார்.

“இனிமேல் நம்பிக்கையில்லை.. இன்னும் ஏன்… ?” என அவரிடம் கேட்பவர்களுக்கு அவர் சொல்லும் பதில் குடும்ப வாழ்வின் மகத்துவத்தைப் பறைசாற்றுகிறது. “என் வாழ்வில் என் மனைவியைத் தொடர்ந்து நேசிப்பதை விட வேறு முக்கியமான பணி ஏதும் இல்லை” என்பதே அவருடைய பதில்.

“குறட்டை விடுகிறார்.. ” என்ற காரணத்துக்கெல்லாம் கோர்ட் படியேறும் தம்பதியர் இருக்கும் நாட்டில் கார்லோஸ் போன்ற மனிதர்களும் இருப்பது குடும்ப உறவுகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

சின்னச் சின்ன மலர்களால் அமைவது தான் மாலை. சின்னச் சின்ன வரிகளால் அமைவது தான் கவிதை. சின்னச் சின்ன துளிகளால் அமைவது தான் பெருமழை. சின்னச் சின்ன ஆனந்தங்களால் அமைவது தான் வாழ்க்கை. இந்த சின்ன விஷயத்தைப் புரிந்து கொண்டாலே வாழ்க்கையை இனிமையாக வாழ முடியும்.

என்னுடைய அப்பாவுக்கு ஒரு வழக்கம் இருந்தது. தினமும் மாலை வேளையில் குடும்பத்திலுள்ள ஏழு பிள்ளைகளையும் அம்மாவையும் அமர வைத்து எதையாவது பேசி கலகலப்பாய் நேரம் செலவிடுவார். படிப்பு, வேலை எல்லாவற்றையும் மறந்து செலவிடும் அந்த நேரம் எத்துணை தூரம் குடும்ப உறவை வலுப்படுத்தியிருக்கிறது என்பதை கால் நூற்றாண்டு கடந்தபின் என்னால் உணர முடிகிறது.

“வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என்பது அன்பு செலுத்தும் குடும்பத்தில் அங்கமாய் இருப்பது தான்” என்கிறார் தாமஸ் ஜெஃபர்சன். உங்களுடைய வாழ்வின் ஆனந்தமான தருணங்களை நினைத்துப் பாருங்கள். அது பெரும்பாலும் குடும்ப உறவுகளோடு ஆனந்தமாய் செலவிட்ட பொழுதுகளாய்த் தான் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு ஆனந்தமான குடும்பத்தைக் கட்டியெழுப்புவதில் தான் நம்முடைய வாழ்க்கையின் அர்த்தம் நிறைந்திருக்கிறது. ஒரு மனிதனுடைய வெற்றியும் தோல்வியும் அவனுடைய குடும்பத்தின் மகிழ்ச்சியிலும், சோகத்திலும் இருக்கிறது.

ஆனந்தமான குடும்ப வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதொன்றும் குதிரைக் கொம்பல்ல. ஆத்மார்த்தமான சின்னச் சின்ன கவனிப்புகள் மட்டுமே போதுமானது.

  1. பேசுங்கள். கணவன் மனைவியரிடையே நல்ல ஆரோக்கியமான உரையாடல் இருந்தால் குடும்பங்களில் ஆனந்தம் தங்கும். எதிர்பார்ப்புகள், நிகழ்வுகள், தேவைகள் என எல்லாவற்றையும் பேசுங்கள். பொறுமையாய்க் கேட்பதும் பேசுவதன் ஒரு பாகம் என்பதை உணருங்கள். முக்கியமாக அவ்வப்போது கணவன் மனைவி இருவருமாக தனியே எங்காவது சென்று நேரம் செலவிடுங்கள். சேர்ந்து உணவருந்துவது, சேர்ந்து பீச் போவது இப்படி.
  2. வாழ்க்கையின் ஆனந்தம் சின்னச் சின்ன அன்புப் பரிமாற்றங்களில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அன்பை வார்த்தைகளாலும், சின்னச் சின்ன பரிசுகளாலும் அவ்வப் போது தெரிவிப்பது அவசியம். பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்கள் அல்லாமல் ஒரு சாதாரண நாளில் எதிர்பாராமல் தரப்படும் சின்னப் பரிசுக்கு மதிப்பு அதிகம் ! திடீரென ஒரு நாள் ஒரு காதல் வாழ்த்து அட்டை வாங்கிப் பரிசளித்துப் பாருங்கள் ! அந்த மகிழ்ச்சியே அலாதியானது.
  3. தவறுகளை ஒத்துக் கொள்ளுங்கள். யார் பெரியவன் எனும் விவாதங்கள் நடத்த குடும்பம் ஒன்றும் வழக்காடு மன்றங்களல்ல. தவறுகள் செய்ததாய் உணரும்போது மனம் திறந்து  மன்னிப்புக் கேளுங்கள். அடுத்த நபர் மன்னிப்புக் கேட்கும் முன்பாகவே மன்னித்து, மறக்கும் மனதைக் கொண்டிருங்கள்.
  4. உம்மணாமூஞ்சியாய் அமைதியாய் இருப்பது தீர்வல்ல. விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் ரொம்ப சகஜம். விவாதியுங்கள். ஆனால் விவாதம் தடம் மாறிப் போகிறது என்பதை உணரும் வினாடியில் அதை வளர்த்துக் கொண்டே போகாதீர்கள். தீர்வுகளை நோக்கிய உரையாடல்களே முக்கியம், தனிநபர் நோக்கிய குற்றச்சாட்டுகளல்ல.
  5. இணைந்து திட்டமிடுங்கள். குடும்பம், குழந்தைகள், பொருளாதாரம், எதிர்காலம் என எதுவாய் இருந்தாலும் இருவருமாய் இணைந்து திட்டமிடும் குடும்பங்கள் வலுவாக இருக்கும்.
  6. ஊரோடு ஒத்து வாழுங்கள். உறவினர்கள் நண்பர்கள் அயலார் போன்றவர்களுடன் நல்ல ஆரோக்கியமான நட்புறவும், அன்பும் கொண்டிருப்பது உங்கள் குடும்ப வாழ்க்கையை வலுப்படுத்தும். குறிப்பாக பெற்றோரின் அன்யோன்யத்தையும், அன்பையும் காணும் குழந்தைகள் அதை தங்கள் வாழ்க்கையிலும் பிரதிபலிப்பார்கள்.
  7. உங்கள் வாழ்க்கைத் துணையின் நம்பிக்கையைச் சம்பாதிப்பது நீண்டகால பந்தத்தின் முக்கிய அம்சம். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு சரியான மரியாதையைத் தரவும் மறக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கைத் துணை எதிர்பார்ப்பதற்கு மேலாகவே குடும்பத்தில் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்.
  8. நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். நடக்கும் எல்லாவற்றையும் உர் எனும் முகத்தோடு கவனிப்பதும், பேசுவதும் வாழ்க்கையை சுவாரஸ்யமாய் நடத்த உதவாது. தோல்விகள், ஏமாற்றங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடு எதிர்கொள்ளப் பழகினால் குடும்பத்திலுள்ள இறுக்கமான சூழல் விலகி விடும். எந்தக் காரணம் கொண்டும் ஒரு நாளைய கோபத்தை மறு நாள் வரை கொண்டு செல்லாதீர்கள்.
  9. கணவன் மனைவியிடையேயான தாம்பத்ய உறவை எப்போதும் விட்டு விடாதீர்கள். குழந்தைகள் பிறந்தபின் பலரும் செய்யும் இந்தத் தவறு தம்பதியரிடையேயான பிணைப்பை வலுவிழக்கச் செய்து விடுகிறது. ஆண்டுகள் செல்லச் செல்ல உங்கள் நெருக்கமும், அன்பும் அதிகரிக்கட்டும். பழைய காதல் நினைவுகளை அவ்வப்போது அசைபோட்டுப் பேசி அன்பைப் புதுப்பியுங்கள்.
  10. பாராட்டுங்கள். வாழ்க்கைத் துணை செய்யும் நல்ல விஷயத்தையெல்லாம் பாராட்டுங்கள். அது ஒரு சின்ன ஒத்தாசையாய் இருக்கலாம், அல்லது பெரிய சாதனையாய் இருக்கலாம். எல்லா நல்ல விஷயங்களையும் பாராட்டுங்கள்.

 

இந்த சின்னச் சின்ன விஷயங்களைக் கடைபிடித்தாலே குடும்ப வாழ்க்கை தொடர்ச்சியாய் பூக்கள் நல்கும் பூந்தோட்டமாய் மலரும் என்பதில் ஐயமில்லை.

 

இல்லத்தில் நேசங்கள் வளரட்டும்

அகமெங்கும் ஆனந்தம் மலரட்டும்

 

சேவியர்

2 thoughts on “அன்பின்றி அமையாது உலகு

  1. natchander says:

    well
    another very useful article for every one of us.

    1. writerxavier writerxavier says:

      Nantri 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *