ஆண்டவன் கட்டளை : கிராமம் vs நகரம் ( திரை விமர்சனம் )

Image result for aandavan kattalai

கிராமம், அடிமைகளையும் ராஜாவாய் உலவ வைக்கும்
நகரம், ராஜாக்களையும் அடிமைகளாய் அலைய வைக்கும்

புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை இரண்டாய் மடித்து அதன் நிறம் வெளியே தெரியக்கூடிய ஒரு மெல்லிய சட்டையில் போட்டுக் கொண்டு, லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு நடப்பான் கிராமத்து ராஜா. அவனுக்கு வேறெதைப் பற்றியும் கவலையில்லை. முற்றத்துக்கு வெளியே கிடக்கும் காற்றும், காற்று முதுகு தடவிவிடும் நாற்றும், சோர்வுகளைக் கழற்றி எறியும் ஆறும் அவனுக்கு இலவச சேவை செய்யும்.

உறவுகளும், நட்பும், ஆடம்பரங்கள் தேவைப்படாத வரவேற்பறையும் அவனை சாய்வு நாற்காலியில் கங்கை கொண்ட சோழனைப் போல ஓய்வெடுக்க வைக்கும். கிராமம் ஆயிரம் ராஜாக்கள் உலவும் ஒற்றை தேசம்.

அதே இளைஞன் கிராமத்திலிருந்து பிடுங்கப்பட்டு, நகரத்தின் கூவத்துக் கரையில் நடப்படும் போது எழும் துயரம் சொல்ல முடியாதது. வலுக்கட்டாயமாய் வெள்ளையடிக்கப்படும் பட்டாம் பூச்சியின் சிறகுகள் போல அவன் வாழ்க்கை நிலை குலையும். எல்லாம் அடிக் கணக்கில் அளந்து பேசியே பழக்கப்பட்ட நகரம் அவனை பத்துக்கு பத்து மொட்டை மாடியில் போட்டு இறுக்கும். மூச்சுத் திணறும் நிலையில் அவனுடைய வாழ்க்கை அவனை பிழிந்து தள்ளும்.

வாழ்க்கையைத் தேடி வந்ததாய் அவன் நினைத்துக் கொள்கிறான், உண்மையில் வாழ்க்கையை தொலைத்து விட்டி வந்து நிற்கிறான். நகரத்தின் தீப்பெட்டி வாழ்க்கையில் தன்னை அடைத்துக்கொள்ளும் இளைஞனுக்குள் இன்னும் அகலாமல் கிடக்கின்றன‌ ஏக்கர் கணக்கான காற்றுப் பெருவெளிகளும், நீரின் சமவெளிகளும்.

அழுத்தங்களின் கடைசிப் படிக்கட்டில், கண்ணி வெடியின் நுனியில் அழுத்தப்படும் பெருவிரல்களுக்கு அடியில் அவன் வெடித்துச் சிதறும் கணங்களில் அவனுக்குள்ளிருந்து நகரத்தின் எந்த சாயலும் வெளியேறுவதில்லை. கிராமத்தின் நினைவுகளே ஊர்வலமாய் வெளிக்கிளம்புகின்றன.

Image result for aandavan kattalai

ஆண்டவன் கட்டளை திரைப்படம் தனது மையமாக “ஏஜென்டுகளை நம்பி ஏமாறாதே தம்பி” எனும் பாடத்தை வைத்திருந்தாலும், என்னை மிகவும் பாதித்தது இந்த கிராமத்துக் காரனின் நகர அனுபவங்கள் தான். ஒருவேளை எனது வேர்கள் இன்னும் ஈரம் இழுப்பது கிராமத்தின் வரப்புகளில் என்பதால் இருக்கலாம்.

செய்தி சொல்கின்ற படங்களெனில் அவை டாக்குமென்டரிகளாகவோ, அழுகாச்சி படங்களாகவோ இருக்க வேண்டும் எனும் விதியை அழுத்தமாய்த் துடைத்து புதுமை செய்யும் இயக்குனர் மணிகண்டன் தொடர்ந்து வசீகரிக்கிறார். சிரித்துக் கொண்டே சொல்லும் எந்த விஷயமும் மனதுக்குள் இறுக்கமாய் இருந்து விடும் என்பது பொது விதி.

ஒரு காலத்தில் பிரியதர்ஷன் மோகன்லால் திரைப்படங்கள் வரிசையாய் ஹிட் அடிக்க இந்த சின்ன ஃபார்முலா தான் உதவியது. எங்கிருந்தோ வரும் நாயகன், சிரிப்பும் களிப்புமாய் செல்லும் அவனுடைய நடவடிக்கைகள் முக்கால் வாசி படம். திடுமென வந்து நிற்கும் அழுத்தமான பிளாஷ்பேக், அதன் தீவிரம், அது தரும் வலி, அது சொல்லும் செய்தி, அழுகை என கடைசிக் கால்வாசி படம் நெற்றிப் பொட்டில் அறையும். மணிகண்டன் திரைப்படங்களிலும் சிரிப்போடு கலந்த செய்தி சொல்லும் பாணி அட்டகாசம், அற்புதம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல ?

பாத்திரத் தேர்வு, கன கட்சிதம். ஹீரோ ஹீரோயினைத் தாண்டிய கதாபாத்திரத் தேர்வுகள் தான் ஒரு இயக்குனரின் திறமையை பளிச் என வெளிச்சம் போட்டுக் காட்டும். இந்தப் படத்தில் ஹவுஸ் ஓனர் கூட அக்மார்க் பொருத்தம் என வியக்க வைக்கிறார். சமீபத்தில் கதாபாத்திரத்துக்காய் வியந்த இன்னொரு படம் இயக்குனர் பிரசாத் முருகேசனின் கிடாரி.

இயக்குனர் மணிகண்டனிடம் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் அவரிடம் இருக்கும் டீம் வர்க் திறமை தான். ஒரு மிகச்சிறந்த நிர்வாகியாக அவரால் மிளிர முடியும் என நினைக்கிறேன். திறமையானவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களை இணைத்து ஒரு சிறப்பான படத்தைக் கொடுப்பது தான் இயக்குனரின் பணி. அதை அமர்க்களமாய்ச் செய்து வருகிறார்.

ஒரு படம் என்றால் கதை நான் தான் எழுதுவேன், திரைக்கதை?… வேற யாரு நான் தான், இசை ?… முடிஞ்சா நானே போடுவேன், வசனம்.. யோவ் அது நான் தான்யா.. என எல்லா வேலைகளையும் தானே செய்ய நினைக்கும் இயக்குனர்களிடமிருந்து இவர் வேறுபடுகிறார். அதுவே இவரது பலம். அருள் செழியனின் கதை, அணுசரணோடு இணைந்து உருவாக்கிய திரைக்கதை, கூர்மையாக்கப்பட்ட வசனங்கள் என படம் வசீகரிக்க இதுவும் ஒரு காரணம்.

Image result for aandavan kattalai

ரித்திகா சிங் இரண்டாவது படத்திலும் அற்புதமாக விளையாடியிருக்கிறார் என்றால், நாசர் தனக்குப் பிரியமான பாத்திரத்தில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். எல்லோரையும் விட அசத்தியிருப்பவர் யோகிபாபு. அவருக்கு உதவுகின்ற ஷாப்பான வசனங்கள். அந்தக் கதாபாத்திரத்தை அற்புதமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

ஒரு ஈழத்து அகதியின் கதாபாத்திரத்தை நுழைத்து, அதன் கண்ணியம் கெடாமல் பாதுகாத்து, இயல்புடனே பதிவு செய்து, கண்கலங்க வைத்து முடித்திருக்கிறார் இயக்குனர். தனியே ஒரு திரைப்படமாய் சொல்ல வேண்டிய கனம் அந்த குட்டிக் கதையில் இருக்கிறது.

விஜய் சேதுபதி பற்றி சொல்ல என்ன இருக்கிறது ? பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். இது அவருக்கேற்ற கதாபாத்திரம் புகுந்து விளையாடியிருக்கிறார். சிங்கம் புலியை குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும். இந்தப் படத்தில் அவரை ரொம்பவே ரசிக்க முடிகிறது.

போலி ஆவணங்களால் உருவாகும் பிரச்சினை, ஒரு பிரச்சினையை இன்னொரு பிரச்சினையால் தீர்க்க முயல்வது, பொய்களெல்லாம் கூடி பேரணியாய் மிரட்டுவது, கடைசியில் உண்மையின் காலடியில் சரணடைவது என கதை தெளிந்த நீரோடையாய் இயல்பாய் பயணிக்கிறது.

ஆண்டவன் கட்டளை !
மணிகண்டனின் முத்திரை.

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *