Christianity : இதயத்தைப் பார்க்கும் இறைவன்

A Sunday’s Class Speech

Image result for kid speech in stage painting

முகம் தனைப் பாராமல்

அகம் தனைப் பார்த்தென்னை

அன்போடணைக்கும் எந்தன்

ஆண்டவரை வணங்குகிறேன்.

 

அவையோருக்கு என் அன்பின் வணக்கம். இன்று நான் “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” எனும் தலைப்பில் ஒரு சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

சேற்றிலே வேர்பிடித்து, செங்கதிரில் இதழ் பிரித்து சிரிக்கின்ற அல்லி மலரை நாம் ரசிக்கிறோம். அதன் வேர்கள் சேற்றின் அழுக்கிலே புதைந்து கிடப்பதை நாம் பார்ப்பதில்லை.

நீரிலே சலங்கை கட்டி, நளினமாய் நடனமாடும் நதியை கவிதையாய் ரசிக்கிறோம். அதன் ஆழங்களில் கிடக்கும் மேடுபள்ளங்களோ, கற்குவியல்களோ நமக்குத் தெரிவதில்லை.

நாம் கண்களுக்குத் தெரிபவற்றை ரசிப்பவர்கள். அதனால் தான் வெள்ளாட்டுத் தோல் போர்த்து வரும் வேங்கைகளைக் கூட வெள்ளாடுகள் என்றே நம்பி விடுகிறோம். ஆனால் கடவுள் அப்படியல்ல. அவர் வெளிவேடங்களை விரும்புவதில்லை. அப்படி வெளிவேடமாய்த் திரிபவர்களுக்கு அவர் ஒரு பெயரை வைத்திருக்கிறார். அது தான் “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்” !

கல்லறைகளுக்கு என்ன வர்ணம் அடித்தால் என்ன ? வானவில்லை இழுத்து வந்து வசீகரமாய் ஒட்டி வைத்தாலும் அதில் பயனென்ன ? உள்ளே தான் உயிர் இல்லையே !  இறைவன் வர்ணத்தைப் பார்த்து வியந்து போவதில்லை, உள்ளே உயிரில்லையே என வருந்துகிறார்.

“நாலு பேருக்கு நல்லது நடக்கும்ன்னா எதுவுமே தப்பில்லை” என்பது உலகத்தினருக்கு மிகவும் பழக்கமான பொன் மொழி. இறைவனைப் பொறுத்தவரையில் அது வீண் மொழி. அவர் செயலை மட்டும் பார்ப்பதில்லை. செயலுக்கு உள்ளே ஒளிந்திருக்கும் சிந்தனைகளைப் பார்க்கிறார்.

நல்லது நடக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, நல்ல சிந்தனையோடு அது நடக்க வேண்டும் என்பதும் இறைவனின் பார்வையில் மிகவும்  முக்கியமானது. “ஏழைகளுக்கு நலத்திட்டம் வழங்குகிறேன்” என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்து விட்டு செய்யும் உதவிகள் இறைவன் பார்வையில் வீணானவையே !

மனிதருக்கு அகத்தைப் பார்க்கும் வரம் இல்லை. எனவே தான் விஷப் புன்னகையைக் கூட நேசப் புன்னகையாய் நினைத்துக் கொள்கிறார்கள்.  கடவுள் முகத்தை வாசிப்பதில்லை, அகத்தை வாசிக்கிறார். எனவே தான் அவர் மூன்று விஷயங்களை நமக்குச் சொல்கிறார்.

செபம் என்பது தனியறையில் இருக்கட்டும். உன் வார்த்தை ஜாலங்களைக் காட்டும் மணியறைகளாய் அவை இருக்க வேண்டாம்.

நோன்பு என்பது மறைவாகவே இருக்கட்டும். நீ ஆன்மீகவாதி என விளம்பரப் படுத்தும் ஏற்பாடாக அது இருக்க வேண்டாம்.

வலது கை செய்யும் உதவி, இடது கைக்கே தெரியாமல் இருக்கட்டும். நீ ஈகை வள்ளல் என கர்வம் கொள்ளும் காரியமாக அது இருக்க வேண்டாம்.

என்கிறார் இயேசு.

ஆல‌ய‌த்தில் க‌ட்டுக் க‌ட்டாய் ப‌ண‌த்தைக் கொட்டிய‌வ‌ர்க‌ளையா இயேசு பாராட்டினார் ? இல்லை ! இர‌ண்டு காசு போட்ட‌ வித‌வையையே பாராட்டினார். கார‌ண‌ம் அள்ளிக் கொடுக்கும் அள‌வை வைத்த‌ல்ல, கொடுக்கின்ற‌ ம‌ன‌நிலையை வைத்தே இறைவ‌ன் நியாய‌ம் தீர்ப்பார். எண்ணிக்கைய‌ல்ல‌ முக்கிய‌ம், எண்ண‌ங்க‌ளே முக்கிய‌ம். சில்ல‌றைக‌ள‌ல்ல‌ முக்கிய‌ம், சிந்த‌னைக‌ளே முக்கிய‌ம்.

செயல்களை மனிதர்கள் இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள். நல்ல செயல்கள் அல்லது கெட்ட செயல்கள். நல்ல செயல்கள் வெளிப்பார்வைக்கு நன்மையாய்த் தெரிகின்றன. கெட்ட செயல்கள் வெளிப்பார்வைக்கு கெட்டதாய்த் தெரிகின்றன.

கடவுளோ மூன்றாவதாய் ஒன்றைச் சொல்கிறார். அது தான் செத்த செயல்கள். இவை நல்ல செயல்களைப் போலத் தோற்றமளிக்கும் செயல்கள், ஆனால் உள்ளத்தில் கெட்ட சிந்தனைகள் ஒளிந்திருக்கும்.

“கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” எனும் இயேசுவின் எச்ச‌ரிக்கை முகமூடிகளைக் கண்டு ஏமாந்து விடவேண்டாம் என எச்சரிக்கிறது.

சிலருடைய சில நிமிட செபம் கேட்கப்படுவதுண்டு. சிலருடைய பல நாள் செபம் கூட கேட்கப்படுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்கள் இதயத்தை மறுபரிசீலனை செய்து கொள்ளுங்கள். இதயம் தூய்மையாக இருந்தால் அது இறைவனின் இல்லமாக மாறி விடுகிறது.

“நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” என்கிறார் இறைவன். காரணம் இறைவன் “வார்த்தைகளைக் கேட்டு வரமளிப்பதில்லை, வாழ்க்கையைப் பார்த்து வரமளிக்கிறார்”. வாழ்க்கை வ‌ள‌மாக‌ வேண்டுமெனில், இத‌ய‌ம் ந‌ல‌மாக‌ வேண்டும்.

வெளியூருக்குப் போகும் போது நாம் என்ன செய்கிறோம் ?

” கேட் பூட்டியாச்சா ?”, ” பின் பக்கக் கதவை பூட்டியாச்சா ? அங்கே திருடன் நுழைய வழி இருக்கா ?”, “மாடி வழியா யாராச்சும் வர முடியுமா ? சன்னலெல்லாம் பூட்டியாச்சா ?” என பல கேள்விகளைக் கேட்கிறோம். வீடு பத்திரமாய் இருக்க வேண்டும் எனும் கவலை நமக்கு.

அதே போல நமது இதயம் எனும் வீட்டைப் பாதுகாக்கிறோமா ? “நாவில் தூய ஆவியானவரின் நெருப்புப் பாதுகாப்பு இருக்கிறதா ?”, “கண்களில் பரிசுத்தம் எனும் கண்ணாடியை அணிந்திருக்கிறோமா ?”, “இதயத்துக்குள் கெட்ட சிந்தனைகள் வரும் வழி இருக்கிறதா ?”  என்றெல்லாம் கேள்வி கேட்கிறோமா ?

ஒரு வீட்டைப் பாதுகாக்க ரொம்ப கவனமாய் இருக்கும் நாம், இறைவனின் ஆலயமான இதயத்தைப் பாதுகாக்க எத்தனை கவனமாய் இருக்க வேண்டும் ? அப்படி இருக்கிறோமா ?

அழகாக இருக்க வேண்டும், கலராக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வேண்டும், அழகான ஆடை உடுத்த வேண்டும் என்றெல்லாம் கவலைப்படுகிறோம். காரணம் என்ன ? மனிதர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும். நம்மை ரசிக்க வேண்டும் என்பதற்காக.

மனிதர்கள் பார்க்கும் உடலுக்கே இத்தனை கவனம் செலுத்தினால், எல்லாவற்றையும் படைத்த இறைவன் பார்க்கும் இதயத்துக்கு நாம் எத்தனை கவனம் செலுத்த வேண்டும் ? ஆனால் நாம் செலுத்துவதில்லை. சாக்கடை மேல் ரோஜாக்களை விரிப்பது போல நமது இதய அழுக்குகளின் மேல் ஆடைகளை அணிந்து மறைக்க முயல்கிறோம்.

ம‌னிதர் முன்னால் த‌ங்க‌ளை அழ‌காய்க் காட்டிக்கொள்ள‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் அடிக்க‌டி ம‌ன‌ அழுத்த‌த்தில் விழுவார்கள் என்கின்ற‌ன‌ர் உள‌விய‌லார்க‌ள். தாங்க‌ள் உய‌ர‌மாக‌ இல்லை, அழ‌காக‌ இல்லை, ந‌ன்றாக‌ப் பேச‌வில்லை, மூக்கு நீளமாக இல்லை, கூந்தல் அடர்த்தியாக இல்லை என்றெல்லாம் அடிக்க‌டி ம‌ன‌ அழுத்த‌ம‌டைவார்க‌ள். அவர்களுடைய உறவுகள் கூட சிக்கலில் முடிந்து விடும். ஆனால், இத‌ய‌த்தை அழ‌காக்க‌ நினைப்ப‌வ‌ர்க‌ளோ ம‌னித‌ர்க‌ளின் விம‌ர்ச‌ன‌ங்க‌ளைக் குறித்து க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை.

தீக்கோழியை யாராவது துரத்தினால் ஓடிப் போய் மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளும். அப்போது யாரும் தன்னைப் பார்க்கமாட்டார்கள் எனும் நினைப்பு அதற்கு. அந்த தீக் கோழியைப் போல தீய கோழிகளாக நாம் இருக்கிறோம். கடவுள் பார்க்க மாட்டார் எனும் நினைப்பில் பாவங்களைச் செய்து குவிக்கிறோம். ஆனால் கடவுள் உள்ளங்களைப் பார்க்கிறார்.

ஒல்லியான, வளைந்த, வலிமையற்ற, யாரும் விரும்பாத ஒரு உருவம் தான் அன்னை தெரசாவுக்கு இருந்தது. ஆனால் கடவுள் அவரை நேசித்தார். காரணம் அவருடைய இதயம் இறைவனுக்காய், இறைவனின் பணிக்காய் காத்திருந்தது.

இருதயம் தூய்மையாக இருப்பவர்கள் தான் தேவனை தரிசிப்பார்கள். இதையே மலைப்பிரசங்கத்தில் “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” என்றார் இயேசு.

இதயத்திலே இறைவன் வசிக்கிறார்.

இதயத்தையே இறைவன் வாசிக்கிறார்.

அதை இருளடைய விடவேண்டாம். தூய‌ ஆவியின் ஒளியால் இதயத்தை நிர‌ப்புவோம். இறைவ‌ன் பார்க்கும் அக‌த்தினால் இறைவ‌னைப் பார்ப்போம். என்று கூறி அனைவ‌ருக்கும் ந‌ன்றி கூறி விடை பெறுகிறேன். ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *