Christianity : Sunday’s School Article

பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்

 

Image result for treasure in Heaven

முன்னுரை :

 

சேமிப்பு மிக முக்கியமானது என்பதை நமக்கு எல்லோரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். சிலர் வங்கிகளில் சேமிக்கின்றனர். சிலர் நிலங்களாக சேமிக்கின்றனர், சிலர் தங்கம் வெள்ளி பிளாட்டினம் என உலோகங்கள் மூலமாக செல்வம் சேர்க்கின்றனர். கடவுள் நம்மிடம் “பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்” என்கிறார். அது என்ன ? எப்படி ? ஏன் என்பதைக் குறித்து பார்ப்போம்.

 

பொருளுரை :

“பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம். பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (மத்தேயு 6 : 19 லிருந்து)

கடவுள் நாம் செல்வங்களைச் சேமித்து வைக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் நாம் நினைப்பது போல உலகத்தில் அல்ல. பரலோகத்தில் சேர்த்து வைக்க வேண்டும். இங்கே சம்பாதிக்கும் பணத்தையோ, பொருளையோ பரலோகத்துக்கு அனுப்பி வைக்க முடியாது. “நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்” (யோபு 1:21 ) என யோபு சொல்வது போல, நாம் இந்த உலகத்திலிருந்து செல்லும் போது எதையும் எடுத்துச் செல்ல முடியாது.

அப்படி உலகத்தில் செல்வம் சேர்த்து பணக்காரனாய் இருப்பவன், இறைவன் பார்வையில் பரம ஏழை. அவன் ” தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் ( லூக்கா 12:21  ) என்கிறார் இயேசு.

அப்ப‌டியானால் விண்ண‌க‌த்தில் பொக்கிஷ‌ம் சேர்ப்பது எப்படி ? விண்ண‌க‌த்தில் சேமிக்க‌ வேண்டுமானால் இங்கே செல‌வ‌ழிக்க‌ வேண்டும் ! “உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும் ( ம‌த்தேயு 19 : 21 ) என்கிறார் இயேசு. ஏழையின் தேவையை இயேசுவின் மகிமைக்காக‌ நீ ச‌ந்திக்கும் போது விண்ண‌க‌த்தில் உன‌க்காய் பொக்கிஷ‌ம் சேர்கிற‌து.

அதையே “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” ( மத் 25 :40 ) என்று இயேசு சொன்னார்

செல்வ‌த்தை நாம் சொந்த‌மாக்கிக் கொள்வ‌தில் த‌வ‌றில்லை, ஆனால் செல்வ‌ம் ந‌ம்மை சொந்த‌மாக்கிக் கொள்ளாம‌ல் இருக்க‌ வேண்டும். க‌ட‌வுளை விட‌ பெரிதாய் எதையேனும் நாம் நினைக்கும் போது அது விக்கிர‌க‌ ஆராத‌னையாய் மாறி விடுகிற‌து. ப‌ண‌ம், உண‌வு, குழ‌ந்தைக‌ள், குடும்ப‌ம், வேலை, புகழ், படிப்பு என எதுவாகவும் இருக்கலாம்.

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” ( ம‌த்தேயு 6 :33 ) என்கிறார் இயேசு. அப்ப‌டித் தேடும் போது ந‌ம‌து பொக்கிஷம்ம் ப‌ர‌லோக‌த்தில் சேர்கிற‌து.

“அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்” ( யோவான் 6 :27) இறைவார்த்தைக‌ளே ந‌ம‌க்கு போஜ‌ன‌ம். இறைவ‌னுடைய‌ வார்த்தை எனும் அப்ப‌த்தை நாடி, அதை உண்டு, அத‌ன் ப‌டி ந‌ம‌து கிரியைக‌ளை ந‌ட‌ப்பிக்கும் போது ந‌ம‌து பொக்கிஷ‌ம் ப‌ர‌லோக‌த்தில் சேர்கிற‌து.

மத்தேயு 6 : 19 ‍ 25 வரையுள்ள வசனங்களில் இயேசு மூன்று விஷயங்களைச் சொல்கிறார். ஒன்று விண்ணகத்தில் சேர்க்கும் செல்வம். இரண்டாவது நமது கண் வெளிச்சமாய் இருக்க வேண்டும் என்கிறார். அது நமது இதயத் தூய்மையைக் குறிக்கிறது. மூன்றாவதாக ‘கடவுள், பொக்கிஷம்’ எனும் இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்கிறார். மூன்று வசனங்களுமே இறைவனை மட்டுமே பற்றிக் கொண்டு, தூய்மையான இதயத்தோடு பணி செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கின்றன.

தென்னமெரிக்காவில் ஊழியம் செய்து வந்த டேவிட் லிவிங்ஸ்டன் இறந்த போது என்ன சொன்னார் தெரியுமா ? எனது உடலை இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லுங்கள். ஆனால் எனது இதயம் இதோ இயேசுவைப் போதித்த இந்த மண்ணிலே புதைக்கப்பட வேண்டும் என்றார். அப்படியே அங்கே ஒரு மரத்தினடியில் அவர் இதயத்தைப் புதைத்தார்கள். நமது இதயம் இயேசுவில் புதைக்கப்பட்டிருக்கிறதா ?

விண்ணகத்தில் பொக்கிஷத்தைச் சேர்க்க தனது நாடு, குடும்பம், செல்வம் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்த ஊழியக்காரர்கள் வில்லியம் கேரி, அன்னை தெரசா, ஜார்ஜ் முல்லர், ஹட்சன் டெய்லர், ஏமி கார் மைக்கேல், ஜோனதன் கோபோர்த், நேட் செயின்ட், எரிக் லின்டெல் போன்றவர்களின் வாழ்க்கை நம்மை அத்தகைய தன்னலமற்ற வாழ்க்கைக்குத் தயாராக்குகிறதா ?

இவ்வுல‌க‌ வாழ்க்கையில் ஆவியின் க‌னிக‌ளான‌, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ” என்ப‌வ‌ற்றைப் ப‌ற்றிக் கொண்டால் ப‌ர‌லோக‌ ராஜ்ய‌த்தில் செல்வ‌ம் சேர்ந்து கொண்டே இருக்கும். மாம்ச‌த்தின் கிரியைக‌ளைச் செய்தாலோ ப‌ர‌லோக‌ வ‌ங்கியில் செல்வ‌ம் ஏதும் இருக்காது.

 

நிறைவுரை

 

க‌ட‌வுள் ந‌ம‌க்கு ஏராள‌மான‌ செல்வ‌ங்க‌ளைக் கொடுத்திருக்கிறார். ப‌ண‌ம், ப‌டிப்பு, நேர‌ம், வேத‌ வாக்கு, உட‌ல் ந‌ல‌ம், திற‌மைக‌ள் என‌ நிறைய‌ செல்வ‌ங்க‌ள். இந்த‌ செல்வ‌ங்க‌ளையெல்லாம் க‌ட‌வுளின் க‌ட்ட‌ளைப்ப‌டியும், விருப்ப‌ப்ப‌டியும், அவ‌ர் ம‌கிமைக்காக‌வும் செய‌ல்ப‌டுத்தினால் ப‌ர‌லோக‌த்தில் ந‌ம‌து செல்வ‌ம் மிகுதியாகும்.

ப‌ர‌லோக‌ செல்வ‌த்தைச் சேமிக்க‌ முடிவெடுப்போம். செய‌ல்ப‌டுவோம். அவ‌ர‌து நாம‌ம் ம‌ட்டுமே புக‌ழ‌ப்ப‌ட‌ட்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *