கிடாரி ஒரு தாமதமான‌ விமர்சனம்

Kidari-Movie-Stills-3

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சிப் பூ பூக்கும் என்று சொல்வார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் திரைத்துறையில் உதவி இயக்குனர், நிர்வாகத் தயாரிப்பாளர் என பல்வேறு தளங்களில் பணியாற்றிய பிரசாத் முருகேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்காக சுமார் இரண்டு ஆண்டுகள் காத்திருந்ததாக ஒரு பேட்டியில் அவர் சொன்ன ஞாபகம். இருக்கட்டும் படத்துக்கு வருவோம்.

கொம்பையா பாண்டியன் எனும் சாத்தூர் பகுதி கட்டப்பஞ்சாயத்து கில்லாடி குத்தப்படுகிறார். “என்னது ஆணிவேரையே சாச்சுடாய்ங்களா ?” என ஊரே அல்லோல கல்லோலப்படுகிறது. கிடாரி இருக்கும்போது அவரைத் தாண்டி கொம்பையா பாண்டியனைத் தொட யாருக்கு தைரியம் இருக்கிறது என எல்லோருக்கும் திகைப்பு ! என்னடா சொல்றீங்க ? கொம்பையா தான் எல்லாரையும் செய்வான், கொம்பையாவையே செஞ்சது யாருடா என மருத்துவமனை பதறுகிறது. குத்தியது யார் ? ! ஏன் ? எதற்கு ? எப்படி ? என்பது தான் படம்.

இத்தகைய திரைப்படங்களுக்கென ஒரு ஃபார்முலா உண்டு. ஒரு கொலை நடக்கும். அதை விசாரிக்க ஒரு அதிகாரி வருவார். விசாரணையின் ஒவ்வொரு கட்டமாக முடிச்சு விழுவதும், அவிழ்வதுமாய் காட்சிகள் பரபரப்பாய் நகரும். கடைசியில் அட போட வைக்கும் முத்தாய்ப்போடு படம் முடியும். மலையாளத்தில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் சிபிஐ டைரி குறிப்பு ஒரு உதாரணம்.

அல்லது ஒரே கதையை பலர் பல விதமாய் சொல்லும் ஹாலிவுட் “பேசிக்ஸ்” திரைப்படம் போல ஒரு வகை. முடிச்சுகளும், அவிழ்தலுமாய் சுவாரஸ்யம் கூட்டும்.

அந்த வகைகளிலிருந்தெல்லாம் மாறி ஒரு புதுமையான திரைக்கதையை செய்திருக்கிறார் இயக்குனர். ஒருவர் கதையைச் சொல்லச் சொல்ல விரியும் காட்சியமைப்புகளும், அதற்குள் நுழையும் கதாபாத்திரங்களும், அவர்களுடைய இயல்புகளும் என படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார். தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்காகவே அவரைப் பாராட்டலாம்.

அவருடைய கதை சொல்லும் பாணிக்கு பக்க பலமாய் இருக்கிறது தர்புகா சிவாவின் இசையும், எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும். அதிலும் தர்புகா சிவா தனது அறிமுகப் படத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு தாமதமான வரவு. இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் எல்லாம் இவருடைய குழுவில் இசைத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

kidari stills 1

ஒன்லைனில் கேட்பதற்கு மிகவும் சாதாரணமாய் தெரியும் கதையை தனது வலுவான காட்சியமைப்புகளின் மூலமும், திரைக்கதையின் மூலமாகவும், அற்புதமான கதாபாத்திரத் தேர்வுகளின் மூலமும்
ஒரு வசீகர அனுபவமாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரசாத் முருகேசன்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில் படம் முடிந்து வரும்போது கொம்பையா பாண்டியனின் கதாபாத்திரத்தில் வேறு எந்த நபரையும் உட்கார வைக்க முடியவில்லை. அதே போல தான் ஜோக்கர் படத்தில் பட்டையைக் கிளப்பிய மு.ராமசாமியும் ! இந்தப் படத்தில் அவர் ஏற்றிருப்பது மிக வலுவான ஒரு கதாபாத்திரம். கனகட்சிதம். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமாய்த் தேர்வு செய்திருப்பதால் படம் ஒரு புதுமையான அனுபவத்தைத் தருகிறது.

விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவை மட்டும் வளைத்துப் போட்டு மொத்த படத்தையும் எடுத்து முடித்திருக்கின்றனர். படம் முடியும் போது டென்ட் கொட்டாயிலிருந்து வெளியே வருவது போல ஒரு பிரம்மை. “டேய் தெம்மாடிப் பயலே டீ சொன்னியாடே ” என அந்த ஊர் பாஷையும் கூடவே வந்து ஒட்டிக் கொள்கிறது.

Image result for kidaari

விரோதம், குரோதம், பழிவாங்கல், இயலாமை என அனைத்து உணர்வுகளையும் பதிவு செய்திருப்பதில் இயக்குனரின் வெற்றி பளிச்சிடுகிறது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல, காதல், காமெடிக்கு சற்றும் ஸ்கோப் இல்லாத திரைக்கதையில் மிக‌ அழகான ஒரு காதல் இழையை நுழைய விட்டதில் இயக்குனரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.

கதாநாயகி நிகிலா விமல், பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவருடைய கண்களும், உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கும் அருமை. கிடைத்திருக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளையெல்லாம் அழகாக்கியிருப்பதில் அவருடைய பங்கு அதிகம்.

சசிக்குமாரைப் பற்றி புதிதாகச் சொல்ல எதுவும் இல்லை. அளவெடுத்துத் தைத்த சட்டை என்பார்களே, அதே மாதிரி கதாபாத்திரம். ஆனால் என்ன ? சுப்பிரமணிய புரத்தின் நீட்சி போல இருக்கிறது அவருடைய உடல்மொழி. முடிந்தவரை சற்று வித்தியாசப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

Image result for kidaari

இன்னொரு பலம் வசனங்கள். அந்தந்த கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப வசனங்கள் அமைந்திருக்கின்றன. “இந்த வசனம் சூப்பர்” என எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. வசனங்கள் கதாபாத்திரங்களையும், கதையையும் சுமந்து அவர்களுடைய உணர்வுகளின் வழியாகப் பயணிக்கின்றன.

வன்முறையை துவக்கம் முதல், கடைசி வரை வைத்திருக்கும் படத்திலும் அதை வெறுக்கும் வகையில் காட்டவில்லை என்பது ஒரு ஆறுதல்.

மொத்தத்தில் கிடாரி நம்பிக்கையூட்டும் ஒரு புதிய இயக்குனரின் கம்பீரமான வரவு ! வாழ்த்துகள் பிரசாத் முருகேசன்.

Image result for Director Prasad murugesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *