வஞ்சிரம் மீன் : சாப்பிடும் முன்னாடி படிங்க…

Image result for vanjaram

பெரும்பாலான உணவகங்களிலும், வீடுகளிலும் வஞ்சிரம் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. விளம்பரங்களில் நேர்த்தியாகப் பொரித்து வைக்கப்பட்டிருக்கும் நீள் வட்ட மீன் துண்டைப் பார்த்திருப்பீர்களே. பெரும்பாலும் அது வஞ்சிரமாகத் தான் இருக்கும். அலாதியான சுவை. அதிலும் ஃப்ரெஷ் மீனில் இருக்கும் சுவை ரொம்பவே மெய்மறக்க வைக்கும்.

கேரளாவிலும், குமரி மாவட்டத்திலும் இதை நெய்மீன் என்று சொல்கிறார்கள். குழம்பு வைத்தாலும், பொரித்தாலும் சூப்பர் சுவையுடன் இருக்கும் இந்த மீன் தமிழகம் முழுவதுமே மிகவும் விரும்பிச் சாப்பிடும் மீன் இனங்களில் ஒன்று.

சைனஸ் பிரச்சினையுடையவர்களுக்கு வஞ்சிரம் மீன் நல்லது. வஞ்சிரம் மீனில் நிறைய ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் இது உடலுக்கு ரொம்ப நல்லது. உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதில் நெய்மீனின் பங்கு கணிசமானது. எந்த மீனையும் பொரித்துத் தின்பதை விட வேகவைத்துத் தின்பதில் அதிக சத்து உண்டு என்பது வஞ்சிரம் மீனுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வஞ்சிரம் மீனை வாங்கும்போது அடர் நிறத்திலுள்ள மீனை வாங்குவது நல்லது என்கின்றனர் மீன் ஸ்பெஷலிஸ்ட்கள். அத்தகைய மீன்களில் தான் எண்ணைப் பசை அதிகமாக இருக்குமாம். எனவே லைட் கலர் மீன்களை விட டார்க் கலர் மீன்களையே வாங்க முயலுங்கள்.

ஆர்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பெரிய நோய்களிலிருந்து மக்களைத் தடுக்கும் வல்லமை இந்த வஞ்சிரம் மீனுக்கும் உண்டு. உடலின் ஒட்டு மொத்தமான ஆரோக்கியத்துக்கும் வஞ்சிரம் மீன் சிறந்தது.

இதில் புரோட்டீன் ரொம்ப அதிகம். கூடவே கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலீனியம் மற்றும் மெக்னீசியம் சத்துகள் தேவையான அளவு உண்டு. எனவே இந்த மீனைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலின் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.

இதில் வைட்டமின் எ, வைட்டமின் கே, வைட்டமின் டி, நயாசின், வைட்டமின் பி12, வைட்டமின் சி,கோலைன் மற்றும் ஃபோலேட் போன்ற அம்சங்கள் நிறைய உண்டு. கூடவே ஒமேகா 6 ஃபேட்டு ஆசிட் இதில் உண்டு. இந்த சத்துகள் உடலுக்கு நல்கும் பலன்களைப் பற்றி ஏற்கனவே பல முறை வாசித்து விட்டோம். இந்த பலன்களெல்லாம் உடலுக்குத் தேவையெனில் வஞ்சிரம் மீனை அஞ்சாமல் கொஞ்சலாம்.

உடலிலுள்ள ஹார்மோன் லெவலைக் கட்டுப்படுத்துவதில் வஞ்சிரம் மீன் துணை செய்யும். இதனால் உடலிலுள்ள இரத்தக் குழாய்களின் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும். இரத்தம் அதிக அளவில் நரம்புகளில் பாய்ந்து ஓட இது துணை செய்யும்.

உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதிலும், செரிமானத்தைச் சீராக்குவதிலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதிலும், மூளையின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்துவதிலும் வஞ்சிரம் மீன் ஒரு கிங் ஃபிஷ் தான். மைக்ரைன் தலைவலிப் பிரச்சினை உடையவர்கள் தொடர்ந்து வஞ்சிரம் சாப்பிட்டு வந்தால் அந்த பாதிப்பு குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதில் வைட்டமின் டி அதிக அளவு உண்டு. உடலிலுள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்திருந்து கான்சர் வராமல் உடலைப் பாதுகாக்கும் வல்லமையும் வஞ்சிரம் மீனுக்கு உண்டு. இரத்தக் குழாய்களில் இரத்தம் கெட்டியாகாமல் தடுத்து இதய நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாகவும் இது செயல்படும். உடலின் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் வஞ்சிரம் உதவும்.

இப்படி ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இருந்தாலும் இதிலுள்ள ஒரே ஒரு சிக்கல் இதிலுள்ள மெர்குரி அளவு தான். இதில் மற்ற குட்டி மீன்களோடு ஒப்பிடும்போது மெர்க்குரி அளவு கொஞ்சம் அதிகம். எனவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் இதைச் சாப்பிட விரும்பினால் மருத்துவரிடம் ஆலோசித்து அவர்கள் சொல்லும் அளவு மட்டுமே சாப்பிடுங்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *