TIPS : நல்ல‌ மீனா பாத்து வாங்கணுமா ?

Image result for buying fish

 

வெண்டைக்காயை ஒடிச்சு பாத்து வாங்கணும், முருங்கையை முறுக்கிப் பாத்து வாங்கணும் என சொல்லும் பலருக்கும் மீனை எப்படி வாங்குவது என்பதில் சந்தேகமும் சிக்கலும் உண்டு. நல்ல மீன் என நினைத்து வாங்கிக் கொண்டு வரும் மீன் வீட்டில் வந்து சமைக்கும் போது கெட்டுப் போயிருக்கும் விஷயம் தெரியும். ஒரு நாள் நல்லா இருப்பது போலத் தெரியும் மறுநாள் கெட்டுப் போனதாய் தெரியும்.

ஆனால் மீன் வாங்குவதில் எக்ஸ்பர்ட் ஆன மக்களுக்கு இதெல்லாம் ரொம்ப சிம்பிள் மேட்டர். தூரத்திலிரிந்தே பார்த்து சொல்லி விடுவார்கள். அவர்கள் முதலில் பார்க்கும் விஷயம் மீனின் வயிற்றுப் பகுதி.

மீனின் வயிற்றுப் பகுதி நல்ல வழவழப்பாக இறுக்கமாக இருக்க வேண்டும். ஒரு விரலை வைத்து மெல்ல அழுத்தி ஒரு கோடிழுத்தால் உடனே வயிறு பழைய நிலைக்கு வர வேண்டும். அப்படியே அமுக்கி இருந்தால் கெட்டுப் போய்விட்டது என்று அர்த்தம்.

அப்படியே மீனின் தலைப்பகுதியின் அருகே செதிலை விலக்கிப் பாருங்கள். அது செக்கச் செவேல் என இருக்க வேண்டும் அப்படியானால் அது நல்ல மீன். அது கறுத்துப் போய் இருந்தால் கெட்ட மீன் என்பது அர்த்தம். மீன்களைக் கொண்டு வரும்போது வரிசை வரிசையாய் பெட்டியில் அடுக்கி, அவற்றுக்கு இடையே நிறைய ஐஸ்கட்டிகள் போட்டு நிரப்பிக் கொண்டு வந்தால் மீன்கள் ரொம்ப நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும். இல்லையேல் சட்டென கெட்டுப் போய்விடும்.

மீன் வாங்கி உடனே சமைக்காமல் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருந்தால் நீங்களும் இதே போல நிறைய ஐஸ்கட்டிகள் நிரப்பி கொண்டு போனால் பத்திரமாக இருக்கும். லோக்கல் முறையில், கார் டியூபுக்குள் ஐஸ்கட்டிகளை நிரப்பி அதில் மீன்களை வைத்துக் கொண்டு போவார்கள். அது ரொம்பவே பாதுகாப்பானது என்பது மீனவர்கள் சொல்லும் செய்தி !

அடுத்தது மீனின் கண்கள். மீனின் கண்கள் தெளிவாக பளிச் என இருந்தால் அது புதிதாய் இருக்கிறது என்று பொருள். நிறம் மங்கியிருந்தா எச்சரிக்கை. அதுவும் நல்ல புகை மண்டிப் போய் கிடந்தால் கொஞ்ச நாள் ஆச்சுன்னு அர்த்தம். வேற மீன் வாங்கறது உசிதம்.

ஒட்டு மொத்தமா மீனைப் பார்க்கும்போ கொழ கொழ என்று இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் மீன் கெட்டுப் போயிருக்கிறது என்று அர்த்தம். மீனின் சதை பிரிந்து இருப்பது போல தோன்றினாலும் மீனை வாங்காதீர்கள் அது பழசாய் இருக்க வாய்ப்பு அதிகம்.

மீனைச் சுற்றி பச்சைக்கலர் பெரிய ஈ சுத்தினா அது கெட்ட மீன் என்று சொல்வதுண்டு ! அதையும் கவனத்தில் வையுங்கள்.
இந்த கஷ்டமெல்லாம் மீன் கடையில போய் நின்று மீன் வாங்குபவர்களுக்குத் தான். இப்போதெல்லாம் கடைகளில் பாலிதீன் கவர்களில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் மீன்களைத் தான் நகரத்தில் பெரும்பாலானோர் வாங்குகிறார்கள். அவர்கள் ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டு மீன் வாங்க வேண்டியது தான் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *