ஆற்று மீன் ஆரோக்கியமானதா ?

Image result for river fish

மீன் என்றவுடனே நமது நினைவுக்குச் சட்டென வருவது கடல் மீன் தான் இல்லையா ? . ஆனால் ஆற்று மீன்கள் மிகப்பெரிய வர்த்தக எல்லையைக் கொண்டிருக்கின்றன. ஆற்று மீனை ஒரு கை பார்ப்பதற்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உண்டு. இவற்றை ஆங்கிலத்தில் “ஃப்ரஷ் வாட்டர் ஃபிஷ்” என்பார்கள். நன்னீர் மீன்கள் அல்லது நல்ல தண்ணீர் மீன்கள் என்று சொல்லலாம். நல்ல தண்ணீரில் ஏதோ சில வகை மீன்கள் தான் இருக்கும் என நினைத்தால் அந்த நினைப்பை அப்படியே கடலில் போடுங்கள். உலகில் உள்ள மீன் வகைகளில் 41.21 சதவீதம் வகைகள் நல்ல தண்ணீரிலும் உண்டு ! அதாவது ஆறு, குளம், குட்டை, அருவி, ஏரி, வளர்ப்பு நிலையங்கள் இத்யாதி போன்ற இடங்களில் !

எல்லாம் மீன் தானே என்பவர்கள் மீன் சுவை அறியாதவர்கள். மீன் பிரியர்கள் ஒரு வாய் சாப்பிட்டதும் சொல்லி விடுவார்கள் இது கடல் மீனா ஆற்று மீனா என்பதை. அந்த அளவுக்குச் சுவையில் வேறுபாடு இருக்கும்.  அருவிக்கரைகளிலும், நல்ல நதிகளிலும் கிடைக்கும் மீன்கள் ரொம்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆலைகளிலிருந்து வரும் கழிவு நீர் பல இடங்களில் மீன்களையும் அசுத்தமாக்கி விடுவதுண்டு. அத்தகைய இடங்களிலுள்ள மீன்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

கடல் மீனில் இருக்கின்ற எல்லா சத்துகளும் ஆற்று மீனிலும் உண்டு. கடல் மீன்களில் இருக்கும் பாதரச அம்சம் ஆற்று மீன்களிலும் உண்டு. எனவே இரண்டு மீன்களுக்கும் பயன்கள் எனும் அடிப்படையில் மிகப்பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்பது குறித்துக் கொள்ள வேண்டிய முதல் அம்சமாகும். எனினும் எந்த மீனை வேண்டுமானாலும் சாப்பிடுவேன் என்பவர்களின் முதல் சாய்ஸ் கடல் மீனாக இருப்பது நல்லது என்பது ஆய்வாளர்களின் கருத்து. காரணம் கடல் மீன்கள் அதிக ஆழத்தில், அதிக குளிரான சூழலில் வளர்வதால் அதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உண்டு என்பது தான்.

எனினும், மீன்களின் மிகப்பெரிய சத்தான இந்த ஒமேகா 3 அமிலச் சத்து ஆற்று மீன்களிலும் உண்டு. ஆற்று மீன்களில் உள்ள பாசிடிவ் விஷயம், இந்த மீன்கள் கடல் மீன்களை விட ஃப்ரெஷ் ஆகக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்பது தான்.

கடல் மீன்களில் கிடைக்கும் நயாசின், வைட்டமின் பி12 போன்ற சத்துகள் வளர்ப்பு மீன்களிலும் உண்டு. ஆனால் US Department of Agriculture ஆய்வின் படி வளர்ப்பு மீன்களை விட கடல்மீன்களில் தான் 20 சதவீதம் அதிக புரோட்டீன்களும், குறைவான கொழுப்பும் உண்டு. உடலுக்கு சக்தியளிக்கக் கூடிய ஒமேகா 3 யும் கடல் மீன்களில் தான் அதிகம் உண்டு. எனவே கடல்மீன்கள் முதல் தேர்வாய் இருப்பது நல்லது என்கின்றனர். ஆனால் சற்றே குறைந்த அளவில் அந்த சத்துகளெல்லாம் ஆற்று மீன்களிலும் கிடைப்பதால் தயக்கத்தைத் தள்ளி வைத்து விட்டு அவற்றையும் ஒரு வெட்டு வெட்டுங்கள்.

இப்போதெல்லாம் எந்த சத்து வேண்டுமோ அதை பாட்டில்களிலும், மாத்திரைகளிலும் அடைத்து விற்கும் கலாச்சாரம் பரவிவிட்டது. அதனால் மீன் கிடைக்காவிட்டால் மீன் எண்ணை வாங்கலாம் என பலர் நினைப்பதுண்டு. உண்மையில் மீனை நேரடியாகச் சாப்பிடும் போது கிடைக்கும் சக்தியை மாற்று மருந்துகள் மூலம் பெறவே முடியாது என்பது தான் நிஜம். எனவே மீனை உணவாய்ச் சாப்பிடுவதையே கவனத்தில் கொள்ளுங்கள்.

இலக்கியங்களிலும் ஆற்று மீன்கள் பாடப்பட்டுள்ளன. பிசிராந்தையார், பரணர் போன்றவர்களுடைய பாடல்களிலெல்லாம் அயிரை மீன் வருகிறது. அயிரை மீன் ஆற்று மீன் வகைகளில் சுவாரஸ்யமான ஒரு மீன். நெத்திலி மீனைப் போல அப்படியே முழுமையாக இதைச் சமைத்துச் சாப்பிடுவார்கள். சுவையான ஆற்று மீன்களின் பட்டியலில் அயிரைக்கும் ஒரு இடம் உண்டு.

ஆற்று மீன் இனங்களில் மூன்று மீன்கள் மிகவும் முக்கியமானவை. கட்லா, ரோகு மற்றும் மிர்கால் ஆகியவையே அந்த மூன்று வகை மீன்கள். இவை மூன்றுமே கெண்டை இனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அணைக்கட்டு போன்ற இடங்களில் வளர்த்துவதற்கு ஏற்ற மீன்கள் இவை. இந்தியாவில் மீன் உற்பத்தியின் 85 விழுக்காட்டையும் கெண்டை மீன்களே கர்வத்துடன் வைத்திருக்கின்றன. விரால் கெளுத்தி போன்ற இதர மீன்கள் எல்லாம் சேர்ந்து 15 சதவீதமே நிரம்புகின்றன என்பது சுவாரஸ்யத் தகவல்.

ஆற்று மீன்களைப் பற்றி அறிமுகம் இல்லாதவற்களுக்கு ஒரு சிறு குறிப்பு. கட்லா மீன் கொஞ்சம் பெரிய தலை, அகன்ற உடல் என அமைப்பு இருக்கும். வாய் சற்றே மேல் நோக்கியிருக்கும். இந்த வகை மீன்கள் நீரின் மேற்பரப்பில் நீந்தும் குட்டிக் குட்டி மீன்களைச் சாப்பிட்டு வாழ்வதால் இயற்கை அதன் வாயை இப்படி அமைத்திருக்கிறது !

ரோகு மீன் சுவையில் சூப்பர்ஸ்டார். தலை கொஞ்சம் சின்னதாக இருக்கும். ரொம்ப தட்டையா இருக்காது. கொஞ்சம் உருண்டை சைசில் இருக்கும். நிறைய இடங்களில் வளர்க்கப்படும் மீன் இனம் இது.

மிர்கால் இன்னொரு வகை மீன் இனம். இதன் வாய் கொஞ்சம் கீழ் நோக்கியே இருக்கும். பெரும்பாலும் நீரின் அடிப்பகுதியில் இந்த மீன் காணப்படும். இந்த மூன்று மீன் இனங்களும் அதிகமாக விற்பனைக்குக் கிடைக்கும். ஆற்று மீன் குறித்த ஏதும் தெரியாதவர்கள் இந்த மீன்களை முயற்சி செய்யலாம்.

மீன் பிரியர்கள் நிச்சயம் ஆற்றுமீன் சுவையில் மயங்கிப் போவார்கள் என்பது திண்ணம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *