இரால் மீன் : ஆண்கள் ஸ்பெஷல் !

 

Image result for prawns

 

ஷ்ரிம்ப், ப்ரான்ஸ், இரால்  என்று அழைக்கப்படுவதெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். கடல் உணவுப் பிரியர்களில் ஷிரிம்ப் சாப்பிடாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கடல் உணவுகளில் பெரும்பாலானவர்களின் ஃபேவரிட் உணவு ஷிரிம்ப் என்பதிலும் சந்தேகம் இல்லை.

இரால் வகைகள் எக்கச் சக்கம் உண்டு. அளவிலும், நிறத்திலும் அவை பல விதம். என்ன நிறத்தில் இருந்தாலும் அவற்றை வேக வைத்தபின் பெரும்பாலும் ஒரே நிறத்தில் வந்து விடும். ஒருவித ஆரஞ்ச் நிறம். மற்ற கடல் மீன்களைப் போலவே ஷிரிம்ப் பல்வேறு அட்டகாசமான குணாதியங்களைக் கொண்டது !

இதிலுள்ள செலீனியம் சத்து உடலுக்கு ரொம்ப ஆரோக்கியமானது. 85 கிராம் இரால் சாப்பிடுகிறீர்களெனில் 48% செலீனியம் சத்து உங்களுக்குக் கிடைக்கும். ஒருவகையில் கேன்சர் போன்ற கொடிய நோய்களிலிருந்து பாதுகாக்கும் வல்லமை அதற்கு உண்டு.

கலோரி குறைந்த புரோட்டீன் சத்து இதிலுள்ள இன்னொடு சிறப்பம்சம். புரோட்டீன் தேவையெனில் தயங்காமல் இரால் சாப்பிடலாம் ! இந்த புரோட்டீன் சத்து தான் உங்களுடைய தலைமுடி, நகங்கள்  மற்றும் தோலின் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. இதிலுள்ள வைட்டமின் இ, தோலை பளபளப்பாக்கும் நல்ல செயலைச் செய்கிறது !

ஒருவேளை செரிமானப் பிரச்சினைகள் உங்களுக்கு நிறைய இருந்தால் நீங்கள் ரொம்பக் கம்மியாகச் சாப்பிடுங்கள். காரணம் அதிக புரோட்டீன் சத்து எளிதில் செரிமானமாவதில்லை.

இதில் மற்ற மீன்களை விட சற்றே அதிகமான கொழுப்பு உண்டு. எனினும் “ஆஸ்திரேலியன் ப்ரான் ஃபார்மர்ஸ் அசோசியேஷன்” ஆராய்ச்சியின் படி, இது உடலுக்கு கேடு விளைவிக்காது. இதில் நல்ல கொலஸ்ட்ரால் தான் அதிகம் என உற்சாகப்படுத்தியிருக்கிறது. எனினும், கொஞ்சம் அளவாகவே சாப்பிடுவது சந்தேகங்களை விலக்க உதவும்.

பல்லுக்கும், எலும்புக்கும் வலு சேர்க்கும் பல நல்ல விஷயங்கள் இராலில் உண்டு. குறிப்பாக வைட்டமின் டி சத்து. கணிசமான வைட்டமின் டி இரால் மீனில் உண்டு. உடல் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளை கிரகித்துக் கொள்ளவும் இது பயன்படும்.

மூளையின் முக்கியமான தேவை வைட்டமின் பி12. அது இரால் மீனில் உண்டு. அது மூளை சிறப்பாகச் செயல்படவும், அதன் வளர்ச்சிக்கும் துணை செய்கிறது ! பி12 உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் உருவாகவும் துணை செய்யும். அது உங்களை இரத்த சோகையிலிருந்து காப்பாற்றும். மூளையைக் கவனிக்க வேண்டும், இரத்த சோகையை விரட்ட வேண்டும் எனும் ஆர்வம் இருந்தால் இரால் மீனை நோக்கிப் பார்வையைச் செலுத்தலாம்.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் பற்றி போதுமான அளவு பேசிவிட்டோம். அது இரால் மீனில் நிறையவே உண்டு. இதயத்தைப் பாதுகாக்கும் பணிக்கு அது ரொம்ப நல்லது. உடலிலுள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது பயன்படும். இரால் மீனிலுள்ள ஒமேகா 3 இரத்தக் கட்டுகளைச் சரிசெய்து, இரத்தம் சரிவர உடலில் பயணிக்கவும் பயன்படும். கேன்சர், அல்சீமர் போன்ற நோய்கள் வரும் வாய்ப்பைப் பெருமளவில் குறைக்கும் பணியைக் கூட இரால் செய்கிறது. அப்படியே மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் இந்த அமிலம் துணை செய்யும்.

இரால் மீனில் நிறைய இரும்புச் சத்து உண்டு. அது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். உடலுக்கு நிறைய எனர்ஜியை அது தரும். இதிலுள்ள நயாசின் எனும் சத்து, அதாவது வைட்டமின் பி3, உடலின் எனர்ஜியை அதிகரிக்க உதவுகிறது. தைராய்ட் பிரச்சினை வராமல் தடுக்கும் வல்லமையும் இந்த ஷிரிம்ப் க்கு உண்டு என்பது ஸ்பெஷல் செய்தி !

நீரிழிவு நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கும் பணியையும் இரால் செய்கிறது. இரால் மீனிலுள்ள மெக்னீஷியம் சத்து டைப் 2 டயாபடிக் வருவதைத் தடுக்கவும் முயல்கிறது !

கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு. சிலருக்கு இரால் மீன் அலர்ஜியை ஏற்படுத்தக் கூடும். அப்படி உடலில் அரிப்பு, வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் இரால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம் !

கடைசியாக ஒரு முக்கியமான விஷயம். இது ஆண்கள் ஸ்பெஷல் ! சைனீஸ் மருத்துவத்தில் இரால் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. அவர்களுடைய பார்வையில் ஆண்களின் ஆண்மைக்கும், ஷிரிம்ப் சாப்பிடுவதற்கும் தொடர்பு உண்டு. இரால் கிட்னிக்கும், இரத்த ஓட்டத்துக்கும் நல்லது என்பது அவர்களுடைய ஆய்வு முடிவு. அது ஆண்மைக்கும் நல்லது என்பதை சைனீஸ் மருத்துவம் எடுத்துச் சொல்கிறது !

இரால் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் எனும் ஒரு தப்பான அபிப்பிராயம் பலருக்கும் உண்டு. ஆனால் இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது, மாறாக உடல் எடை குறைய உதவும் எனும் வியப்பூட்டும் ஆய்வு முடிவு. இராலில் உள்ள தாமிரச் சத்து உடலிலுள்ள லெட்பின் எனும் சுரப்பி அதிகம் சுரக்க வழி செய்கிறது. அது உடல் எடை குறைய மறைமுகமாய் உதவுகிறது !

இப்படி ஏகப்பட்ட பயன்கள் இருக்கும் இராலை எதுக்கு ஒதுக்க வேண்டும் ? சுவைக்கலாமே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *