நெத்திலி மீன்…ம்ம்ம்…

Image result for Nethili fish

 

மீன் வகைகளிலே ஒரு ஸ்பெஷல் மீன் நெத்திலி மீன் தான். கருவாடாகவும் இது மிக அற்புதமான சுவையைத் தரும். பச்சை மிளகாய் மிதக்கும் நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு சுவை அறிந்தவர்களுக்கே தெரியும். மாங்காய், முருங்கைக்காய் என இந்த குழம்பு இடத்துக்குத் தக்கபடி பல்வேறு முகம் காட்டும் என்பது சுவாரஸ்யமான அம்சம்.

இந்த நெத்திலி மீன் சுவையில் மட்டுமல்லாமல் பயன்களிலும் அசரடிக்கக் கூடிய விஷயங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பது தான் சிறப்பம்சம். மேலை நாடுகளில் இந்த மீனைக் கொண்டு சால்ட், பிஸ்ஸா, பாஸ்தா போன்றவற்றை உருவாக்குகிறார்கள். நம்ம ஊரைப் பொறுத்தவரை ஊரையே அடித்து உலையில் போடும் கம கம மணத்துடனான குழம்பு தான் ஸ்பெஷல். இதைப் பொரித்தும் சாப்பிடுவதுண்டு.

பொதுவாக சின்ன மீன்களில் கெட்ட சமாச்சாரங்களான மெர்க்குரி போன்றவை ரொம்பக் கம்மி. இந்த மீன் குட்டியூண்டே இருப்பதால் இதில் அத்தகைய சிக்கல்கள் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். இந்த முதல் செய்தியே நெத்திலி மீனின் மற்ற பயன்களைக் குறித்துப் பார்க்க நம்மைத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

வைட்டமின் எ – நெத்திலி மீனில் இருக்கக் கூடிய மிக முக்கியமான ஒரு சூப்பர் விஷயம். நூறுகிராம் நெத்திலி மீன் சாப்பிட்டால் 50,000 யூனிட் அளவுக்கு வைட்டமின் எ கிடைக்கும் என்பது மருத்துவக் கணக்கு. கண்பார்வைக்கும், எலும்பு வளர்ச்சிக்கும், செல்களின் ஆரோக்கியத்துக்கும் இது ரொம்ப நல்லது. இது தவிரவும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் நெத்திலி மீன் நெத்தியடி மீன் !

அதே நூறுகிராம் அளவில் கால்சியம் சத்து 147 மில்லி கிராம் அளவுக்குக் கிடைக்கிறது என்பது இன்னொரு சிறப்புச் செய்தி. நம்முடைய பல்லுக்கும், எல்லுக்கும் சிறந்த ஆரோக்கியம் ஊட்டுவது கால்சியம் என்பது சின்னப் பிள்ளைகளுக்குக் கூட தெரிந்த விஷயம் தான்.

இதிலுள்ள பொட்டாசியம் சத்து இதயத்துக்கும், மூளைக்கும் ரொம்ப நல்லது ! பொட்டாசியம் சத்து உடலில் சேரக் கூடாது என மருத்துவர் ஆலோசனை சொல்லியிருந்தால் மட்டும் இந்த மீனைத் தவிர்க்கலாம்.

செலினியம் சத்து இதிலுள்ள இன்னொரு அற்புதம். இதய நோய் வராமல் தடுக்கவும், இரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தைக் காக்கவும், வலிப்பு போன்ற நோய்களிலிருந்து விடுவிக்கவும் இது ரொம்ப உதவும். ஆஸ்டியோபோரோசிஸ் எனும் கொடிய எலும்பு முறிவு நோய் மற்றும் கேன்சர் போன்றவற்றைத் தடுக்கும் வல்லமையும் இந்த குட்டி நெத்திலி மீனுக்கு உண்டு.

இந்த நூலை முதலில் இருந்தே படித்து வருகிறீர்களென்றால் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் பற்றி உங்களுக்கு அட்சர சுத்தமாய்த் தெரிந்திருக்கும். ரொம்ப ரொம்ப நல்ல சத்து இது. வாரம் இரண்டு தடவை நெத்திலி மீன் சாப்பிட்டால் உங்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 36 சதவீதம் குறையும் என்கிறது “அமெரிக்கன் மெடிகல் அசோசியேஷன்” கட்டுரை ஒன்று. நெத்திலி மீன் நல்ல எண்ணை மீன், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ரொம்ப நிறைய உண்டு !

நயாசின், வைட்டமின் பி12, வைட்டமின் பி6, போன்ற ஸ்பெஷல் சத்துகள் நெத்திலி மீனை இதயத் தோழனாய் அறிமுகம் செய்கிறது. இதிலிருக்கும் இரும்புச் சத்து உடலுக்கு ரொம்பத் தேவையானது. தினமும் தேவைப்படும் இரும்புச் சத்தில் 12 சதவீதம் கிடைக்க 20 கிராம் நெத்திலி மீன் சாப்பிட்டாலே போதுமானது !

மேனி எழிலுக்கு நெத்திலி என தைரியமாகச் சொல்லலாம். இதிலுள்ள வைட்டமின் இ சத்து சருமத்தை ரொம்பக் கவனமாய்ப் பாதுகாக்கிறது. கூடவே இதில் அதிக புரோட்டீன், குறைவான கொழுப்பு மற்றும் கலோரி எனும் விகிதம் இருப்பதால் உடல் எடை குறையவும் இது உதவும் !

மெக்னீசியம், பாஸ்பரஸ், ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட், தாமிரம், சோடியம், ஃபோலேட், நயாசின் என இதிலுள்ள பயன்களின் பட்டியல் இன்னும் நீள்கிறது.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது ! நெத்திலிக்கு அது சாலப் பொருந்தும் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *