கருவாடு சாப்பிடலாமா ?

Image result for karuvadu

கருட புராணம் தெரியுமோ இல்லையோ, மீன் ரசிகர்கள் எல்லோருக்கும் தெரிந்த புராணம் கருவாடு புராணம். கிராமத்து நினைவுகளை அசைபோடுகையில் எனது நாவில் தவறாமல் கருவாட்டுச் சுவை வந்து போவதுண்டு. விறகு அடுப்பில் பாட்டி சாம்பலுக்குள் புதைத்துவைத்து சுட்டுத் தரும் கருவாடும், அதை ஒருகையில் பிடித்துக் கொண்டு பழைய கஞ்சி குடித்ததும், டோமினோஸ் பிஸ்ஸாக்களால் சமரசம் செய்து கொள்ள முடியாத சுவை. சரி, எனது புராணம் கிடக்கட்டும், கருவாட்டுக்கு வருகிறேன்.

கருவாடு பற்றித் தெரியாத நபர்கள் இருந்தால் அவர்கள் அடுத்த இரண்டு வரிகளைப் படியுங்கள். மற்றவர்கள் சபிக்காமல் அடுத்த பத்திக்குத் தாவி விடலாம். கருவாடு என்பது மீனில் உப்பு தடவி நல்ல வெயிலில் உலர்த்தி காயவைப்பது என்பது மிகச் சுருக்கமான குறிப்பு ! காய வைக்கப்படுவதாலும், உப்பு நிறைய தடவப்படுவதாலும் இது நீண்ட நாட்களுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும். இதன் சுவையும் சாதாரண மீன் குழம்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் !

ஒரு நாள் பிரார்த்தனை செய்யாவிட்டால் எப்படி ஆன்மீகவாதிகள் தவித்துப் போவார்களோ அதே போல ஒரு நாள் மீன் கிடைக்காவிட்டால் “மீன்”வாதிகள் ரொம்பவே தவித்துப் போய்விடுவார்கள். அவர்களுடைய மீன் விருப்பத்தை தினம் தோறும் நிவர்த்தி செய்வதும் இயலாத காரியம்.

“கடல் கொந்தளிப்பாய் இருக்கிறது, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனும் அறிவிப்புகள் தொடங்கி, “மீனின் இனப்பெருக்க காலம் ஆனதால் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வதில்லை” எனும் முடிவு வரை பல விஷயங்கள் மீன் தட்டுப்பாட்டுக்குக் காரணமாகிவிடும். அத்தகைய காலகட்டங்களில் ஆபத்பாந்தவனாகக் கைகொடுப்பதும் இந்தக் கருவாடு தான்.

கருவாடு தயாராக்குவதில் உலகம் முழுவதும் ஏறக்குறைய ஒரே வழியைத் தான் கையாள்கிறார்கள். முதலில் மீனை நன்றாகச் சுத்தம் செய்வது. குறிப்பாக மீனில் உள்ள இரத்தம் முழுமையாக வடியும் வரை அதை பிரைன் கலவையில் ஊறவிடுவார்கள். இதை உப்புக் கலவை என்று புரியும் படியாகச் சொல்லலாம். அதன் பின் மீனை தனியே எடுத்து அதன் மீது மேலும் உப்பு போட்டு உலர வைப்பார்கள்.

உப்பு ஒரு அற்புதமான பதப்படுத்தல் சாதனம். மீனில் பாக்டீரியாவின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுவது இந்த உப்பு தான். மீனில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுப்பதன் மூலம் பாக்டீரியா பாதிப்பு ஏற்படாமல் இது பாதுகாக்கும். பெரும்பாலும் கடல் உப்பு, அதாவது பரல் உப்பையே பதப்படுத்துதலுக்குப் பயன்படுத்துவார்கள்.

வெயில் காலங்களில் சூரியபகவான் மீனை உலரவைத்துக் கொடுக்கிறார். வருண பகவான் இன்சார்ஜ் எடுக்கும் மழைக்காலங்களில் எலக்ட்ரிக் டிரையர்கள் மூலம் மீன் உலரவைக்கப்படுகிறது ! மீனை உலரவைத்துப் பயன்படுத்தும் முறை குறைந்தது 500 ஆண்டுகள் பழசு என்கிறது வரலாறு ! நன்றாக உலர்ந்த கருவாடு பல ஆண்டுகள் பத்திரமாக இருக்கும் என்பது நல்ல செய்தி !

கருவாட்டுக் குழம்பின் சுவை அலாதியானது ! மீன் வாசம் பிடிக்காதவர்கள் கருவாடு இருக்கும் எல்லைக்குள் நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். காரணம் கருவாட்டு வாசனை நிறைய தூரம், அதிக வீச்சில் பரவும் என்பது தான்.

மகிழ்ச்சியான செய்தி இது தான். ஒரு சாதாரண மீனில் இருக்கக் கூடிய எல்லா விதமான பயன்களும் கருவாட்டிலும் உண்டு. அபரிமிதமான புரோட்டீன் சத்து, வைட்டமின்கள், இரும்புச் சத்து, கால்சியம் என எல்லா முக்கியமான சத்துகளும் கருவாட்டிலும் உண்டு.

கருவாட்டில் கார்போஹைட்ரேட் ரொம்ப ரொம்பக் கம்மி. கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவுகளே உடல் எடை குறைய விரும்புபவர்களின் சாய்ஸ். எனவே உடல் எடை குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள் கருவாட்டை ஒரு கை பார்க்கலாம்.

கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உப்பு ! கருவாட்டில் ஏற்கனவே நிறைய உப்பு இருக்கும். காரணம், இதைப் பதப்படுத்துவதற்காக ஏகப்பட்ட உப்பைப் பயன்படுத்துவார்கள் என்பது தான். அதிக உப்பு உடலுக்குத் தீமை செய்யும். எனவே கருவாட்டுக் குழம்பு வைக்கும்போது எக்ஸ்ட்ரா உப்பு ஏதும் சேர்க்காமல் அதை சமரசம் செய்து கொள்ளுங்கள்.

கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், கருவாடு நன்றாகக் காய்ந்து, உலர்ந்த நிலையில் இருக்கிறதா என்பது. சொதசொதவென கருவாடு இருந்தால் அதில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே நல்ல உலர்ந்த நிலையிலுள்ள கருவாட்டைப் பார்த்து வாங்குங்கள். !

தெரிந்த இடங்களிலிருந்து கருவாடு வாங்குவது எப்போதுமே உசிதம். பெரும்பாலும் பாக்கெட்களில் அடைத்து கடைகளுக்கு வரும் கருவாட்டைக் கொஞ்சம் கவனமாகவே அணுகுங்கள். பெரிய அளவில் கருவாடு எக்ஸ்போர்ட் செய்பவர்கள் சில அமிலங்களைப் பயன்படுத்துவதுண்டு எனும் குற்றச்சாட்டு உண்டு.

குறிப்பாக சைப்பர்மெத்ரின், மெட்டாசின்,என்டோசல்ஃபர் போன்றவற்றைக் கரைசலாக்கி கருவாட்டை ஊறவைப்பதுண்டு. அதே போல எறும்பு மொய்க்காமலிருக்க மெலிதான அளவில் பாலிடால் அல்லது ஆக்‌ஷன் 50 போன்ற கெமிக்கல்களைப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உண்டு.

எனவே தெரிந்த நபர்கள், தெரிந்த மூலங்களில் இருந்து கருவாடு வாங்குவதே சிறந்தது என்பதை மனதில் கொள்ளுங்கள். கருவாட்டை ருசியுங்கள்,   சுவைத்தவர்களுக்கே தெரியும் அதன் மகிமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *