மீன் முட்டை சாப்பிடலாமா ?

Image result for fish egg

 

முட்டை சாப்பிடுவீங்களா ? என்று உங்களிடம் கேட்டால் சட்டென உங்கள் நினைவுக்கு வருவது என்ன ? வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சுடச் சுட பொரித்துத் தரும் ஒரு ஆம்லெட். லைட்டாக பெப்பர் போட்டு சுடச்சுட வாயில் தள்ளும் ஒரு ஆஃப் பாயில், ஒரு அவித்த முட்டை, அல்லது குறைந்த பட்சம் கடையில் அடுக்கி வைத்திருக்கும் முட்டைகள். எப்படியோ ஒருவகையில் உங்கள் கண்னுக்கு முன் நிழலாடுவது கோழி முட்டை தான் இல்லையா ?

நாம் இங்கே அலசப் போவது மீன் முட்டையைப் பற்றி ! மீன் சாப்பிடும் பலருக்கும் மீன் முட்டை பற்றி அதிகம் தெரிந்திருக்காது. காரணம் நாம் சாப்பிடும் குட்டி குட்டி மீனில் அவ்வப்போது தட்டுப்படும் முட்டையையும் பெரும்பாலும் கழுவி வெளியே போடுவதுண்டு. ஆனால் நமது பாட்டிகளிடம் கேட்டால் சொல்வார்கள், எவ்வளவு கவனமாய் அவர்கள் அந்த முட்டையைக் கழுவிக் குழம்பில் போடுவார்கள் எனும் செய்முறை விளக்கத்தை !

ஆங்கிலத்தில் இதை ஃபிஷ் ரோ என்று அழைப்பதுண்டு. எனவே கடைகளில் ஃபிஷ் ரோ என்று பாட்டில்களில் எழுதப்பட்டிருந்தால் அது மீன் முட்டை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மீன் சாப்பிடும் பலரும் கொஞ்சம் ஒதுக்கி வைக்கும் சமாச்சாரம் இந்த மீன் முட்டை. அப்படி ஒரு ஒதுக்குதல் மனப்பான்மை இருந்தால், இந்த வினாடியிலிருந்து அதைத் தள்ளி வையுங்கள். மீன் முட்டையில் இருக்கின்ற மருத்துவக் குணாதிசயங்கள் அப்படி !

மீன் முட்டையில் மிக அதிக அளவில் வைட்டமின் டி இருக்கிறது.  மருத்துவ பாஷையில் சொல்ல வேண்டுமெனில் ஒரு டீஸ்பூன் அளவு மீன் முட்டையில் 17,000 யூனிட் வைட்டமின் டி இருப்பதாக வியக்க வைக்கிறது டாக்டர் வெஸ்டன் ஏ. பிரைஸ் ஆராய்ச்சி ஒன்று !

மீன் முட்டையில் காணக்கிடைக்கும் சத்துகளில் குறிப்பிடத்தக்கவை வைட்டமின் ஏ, வைட்டமின் கே2, தாமிசச் சத்து, அயோடின், ஃபேட்டி ஆசிட் போன்றவை. இவை குழந்தைகளுக்கும், தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கும் ஒரு வரப்பிரசாதமான உணவு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கவனிக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம், இதில் லேசாக மெர்க்குரி உண்டு என்பது தான். எனவே டாக்டர் பரிந்துரைக்கும் அளவு மட்டுமே உண்ணுங்கள்.

எஸ்கிமோக்களின் முக்கியமான உணவுகளில் ஒன்று மீன் முட்டை. இது வெயில் காலத்தில் உலர்ந்து ஆண்டு முழுவதும் பயன்படுத்தக் கூடியவகையில் இருக்கும்.

மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் இந்த மீன் முட்டைகள் ஏராளமாக கடலிலும், கரையோரங்களிலும் கிடைக்கும். சில நாட்டுக் கடற்கரைகளில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு மீன் முட்டைகள் குவியல் குவியலாகக் காணக் கிடைக்குமாம். உலகில் பல இடங்களிலும் உள்ள மக்கள் மீன் முட்டையின் பயன்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இது ரொம்பவே ஆரோக்கியம் தரும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். பெண்களின் கருவுறும் தன்மையை மீன் முட்டை அதிகரிக்கச் செய்யும் எனும் டாக்டர் வெட்ஸன் ஏ பிரைஸ் அவர்களுடைய கருத்து வியப்பூட்டும் சமாச்சாரம் ! குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள் ஆலமரத்தைச் சுற்றிய கையோடு மீன் முட்டையையும் சுற்றி வாருங்கள், பயன் கிடைக்கும் !

வைட்டமின் டி தேவையென்றால் மாத்திரைகளைத் தேடி ஓடும் நிலைக்கு ஒரு மிகப்பெரிய முற்றுப் புள்ளி இந்த மீன் முட்டை ! மீன் முட்டையில் கிடைக்கும் புரோட்டீன்கள் உடல் வளர்ச்சிக்கு ஆதாரம் !

மீன் முட்டையை “கேவியர்” என்றும் அழைப்பதுண்டு. ஆனால் அது புராசஸ் செய்யப்பட்ட மீன் முட்டை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உப்பு போன்ற சமாச்சாரங்களையெல்லாம் போட்டு தயாராக்கி வைத்திருப்பார்கள்.

சும்மா ஒரு டீஸ்பூன் மீன் முட்டையைச் சாப்பிட்டாலே உங்கள் உடலுக்கு ஒரு நாள் தேவைப்படும் இரும்புச் சத்தில் பத்து சதவீதத்துக்கும் மேல் கிடைத்து விடும். இரும்புச் சத்து உடலுக்கு ரொம்ப முக்கியம் என்பது நமக்குத் தெரிந்ததே. இரத்தம் தூய்மையாய் இருக்கவும், தசை பாதுகாப்புக்கும், தலைவலி போன்ற சிக்கல்களிலிருந்து விடுபடவும் அயர்ன் சத்து உதவும். வைட்டமின் இ, தயாமின், ரிபோஃப்ளேவின், ஃபோலேட், வைட்டமின் பி-12, நயாசின், பான்டோதெனிக் ஆசிட், பாஸ்பரஸ் போன்ற பல நல்ல விஷயங்கள் இதில் உள்ளன !

மீன் முட்டையில் கிடைக்கும் வைட்டமின் ஏ, கண்பார்வைக்கு ரொம்ப நல்லது. குறிப்பாக இரவில் கூட உங்கள் பார்வை கூர்மையாய் இருக்க வைட்டமின் ஏ உதவும். அப்படியே நமக்குத் தினசரி தேவையான வைட்டமின் சி யில் 4 சதவீதமும் ஒரு டீஸ்பூன் மீன் முட்டையில் கிடைக்கும் !

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மீன் முட்டையில் நிறைய உண்டு. அதன் பயன்கள் என்ன என்பதை முன்பே பல இடங்களில் பார்த்தோம். மன அழுத்தம் குறைத்தல் முதல் அறிவு வளர்ச்சி வரை ஏகப்பட்ட பயன்கள் இதில் உண்டு ! இதில் சோடியம் சத்து உண்டு என்பது கூடுதல் செய்தி !

எனவே முட்டை என்றதும் கோழி முட்டையை மட்டுமே நினைக்காமல் மீன் முட்டை பக்கமும் கவனத்தைச் செலுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *