மீன் சில சுவாரஸ்யமான குறிப்புகள்

Image result for underwater fish

 

உலகின் பழமையான இனங்களில் ஒன்று தான் மீன் இனம். சுமார் 450 மில்லியன் வருஷங்களுக்கு முன்பே இது தோன்றிவிட்டதாம் ! அதாவது நம்ம “ஜுராசிக் பார்க்” டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்பே நீந்தத் தொடங்கியவை தான் மீன் இனம்.

உலகில் 25,000 மேற்பட்ட வகையான மீன் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்பட்டமல் குறைந்த பட்சம் 15,000 மீன் வகைகளாவது இருக்கும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. இது பல மடங்காகவும் எகிறலாம் !

உலகிலுள்ள மீன்களில் 40 சதவீதம் மீன்களும் நல்ல தண்ணீரில் வாழ்பவையாம். உலகிலுள்ள தண்ணீரில் வெறும் 0.01 சதவீதம் தான் நல்ல தண்ணீர் என்பது குறிப்பிடத் தக்கது !

தனது வயிற்றில் காற்றை நிரப்பிக்கொண்டு தான் பெரும்பாலான மீன்கள் மிதக்கின்றன. ஆனால் எல்லா மீன் வகைகளும் அப்படியில்லை. சில சுறா மீன்கள் தொடர்ந்து நீந்திக்கொண்டே இருக்கும். அல்லது நம்ம யோகா மாஸ்டர்களைப் போல உடலை லேசாக்கி மிதக்கும்.

“லேட்டரல் லைன்” என்பது மீன்களுக்கு மட்டுமேயான ஸ்பெஷல் உறுப்பு. இது ஒரு ரேடாரைப் போல செயல்படும். அதாவது இருட்டில் நீந்தினாலும், சகதியில் நீந்தினாலும் இந்த உறுப்பு அதற்கு வழிகாட்டிக் கொண்டே இருக்குமாம்.

சுமார் அறுபது அடி நீளம் வரை வளரக் கூடிய வேல் ஷார்க் தான் இப்போதைக்கு கடல் மீன்களில் பெருசு. ஆனால் கடல் எனும் பிரம்மாண்டத்தில் இன்னும் கண்டுபிடிக்கப் படாத இதை விடப் பெரிய மீன்களும் இருக்கலாம் ! அதே போல “பிலிபைன் கோபி” எனும் குட்டி மீன் தான் மிகச் சின்ன மீன். நல்ல முழு வளர்ச்சி அடைந்த மீன் ஒரு இன்ச் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் இருக்குமாம்.

மீன் தான் டேஸ்டா இருக்கு என்றில்லை. மீனுக்கே நல்ல சுவை அறியும் திறன் உண்டு. கூடவே கூர்மையான பார்வை, தொடு உணர்வு, மணம், கேட்கும் திறன் என எல்லாம் உண்டு.

மீன்களுக்கு அப்பப்போ மன அழுத்தம் வருமாம். அடிக்கடி கடற்கரையோரமா மீன்கள் கூட்டம் கூட்டமா செய்துப் போவதற்கும், இதற்கும் ஏதேனும் காரணம் உண்டா என விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது !

மீனை விதவிதமாகச் சமைத்துச் சாப்பிடுவது ஒருவகை. அதை அலங்காரப் பெட்டிகளில் வைத்து அழகுபார்ப்பது இன்னொரு வகை. அமெரிக்காவில் செல்லப்பிராணிகளின் பட்டியலில் முக்கிய இடம் மீனுக்கு உண்டு. அமெரிக்கா மட்டுமன்றி உலகின் பல பாகங்களிலும் மீன் செல்லப்பிராணி தான்.

உலகிலுள்ள எல்லா மீன் இனங்களுமே வெர்டிபிரேட் வகையைச் சேர்ந்தவை தான். அதென்ன வெர்டிபிரேட்ஸ் ? முதுகெலும்பு உள்ள விலங்கு என்பது பொருள்

தொட்டாலே உறையவைக்கும் குளிரான கடல்பகுதியில் கூட மீன்கள் ஏராளம் உண்டு. அதற்குக் காரணம் இவை குளிர் இரத்தப் பிராணிகள் என்பது தான். ஆங்கிலத்தில் கோல்ட் பிளட்டட் என்பார்கள். தன்னைச் சுற்றியிருக்கும் தண்ணீரின் வெப்பத்தைப் பொறுத்து இதன் இரத்த வெப்ப நிலை மாறும்.

தண்ணீரிலே மீனழுதால் கண்ணீரைத் தான் யாரறிவார் ? என்று ஒரு பாடல் உண்டு. உண்மையில் மீன் தூங்கினால் கூட யாரும் கண்டுபிடிக்க முடியாது. காரணம் அவை கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தான் தூங்கும் !

மீன்களில் வாழ்நாள் இனத்துக்குத் தக்கபடி வேறுபடும். யெல்லோ ஐ ராக்ஃபிஷ் எனப்படும் மீன் செஞ்சுரி அடிக்கும். நூறு வருடங்கள் என்பது இதன் சராசரி ஆயுள்.

பிராணா என்றொரு மீன் உண்டு. இதன் பற்கள் வேட்டை நாயின் பற்களைப் போல கூரியது. அளவில் சாதாரண மீனைப் போல இருக்கும் இந்த மீன் தாவி ஒரு கடி கடித்தால் குதி கால் அதன் வாயில் இருக்கும் !

வீட்டில் தங்க மீன் வளர்ப்பது பலருடைய பொழுது போக்கு. தகதகவென இருக்கும் அந்த தங்க மீன்களை சூரிய ஒளியே படாத இடத்தில் போட்டு வைத்தால் அது வெள்ளை நிறமாக மாறிவிடும் !

லங்க் ஃபிஷ் எனும் ஒரு மீன் இனம் உண்டு. காற்றைச் சுவாசித்தும் வாழும் திறமை இதற்கு உண்டு. புடித்துக் கொண்டு போய் ஒரு ரூமில் பூட்டிப் போட்டால் வருடக்கணக்கில் உயிருடன் இருக்குமாம் !

கர்னார்ட் என்றொரு மீன் இனம் உண்டு. அமெரிக்காவின் புளோரிடா கடற்பகுதியில் இவை காணப்படும். இவை பற்களைக் கடித்து ஒரு விதமான ஓசை உருவாக்கினால் அங்கே அடைமழை பெரும் மழை பெய்யப்போகிறது என்று அர்த்தமாம். இது பொய்க்கவே பொய்க்காது என்கின்றனர் அந்தப் பகுதியிலுள்ள மக்கள்.

பெரும்பாலான மீன்கள் சின்ன மீன்களைச் சாப்பிடுவது சர்வ சாதாரணமாம் !

ஆக்டபஸ் மீனைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனா அதுக்கு மூணு இதயம் உண்டுங்கற மேட்டர் தெரியுமா ? ஜப்பான், ஹவாய் போன்ற நாட்டு மக்களுக்கு ஆக்டபஸ் மீன் மீது ஒரு ஸ்பெஷல் விருப்பம் எப்போதுமே உண்டு என்பது சுவாரஸ்யம்.

ஸ்டார் பிஷ் பற்றி ஒரு சுவாரஸ்யமான சமாச்சாரம் உண்டு. அதற்கு மூளை கிடையாது. உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் மூலமாகத் தான் திசை அறிவது, நீந்துவது என பல வேலைகளைச் செய்கின்றன. ஆனால் அதன் ஒவ்வொரு காலிலும் ஒவ்வொரு கண் உண்டு. இந்தக் கண்ணைக் கொண்டு இருட்டு வெளிச்சம் எனும் வேறுபாட்டை நட்சத்திர மீன் அறிந்து கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *