ஆக்டபஸ் சாப்பிட்டிருக்கீங்களா ?

Image result for eating octopus

 

ஆக்டபஸ் என்றதும் ஆஜானுபாகுவான தலையுடன் மலைப்பாம்பு போன்று நீண்ட ஒரு கொத்துக் கைகளுடன் அலையும் உருவம் தானே நினைவுக்கு வருகிறது ? இதையெல்லாமா சாப்பிடுவாங்க என மனசுக்குள் ஒரு சின்ன கேள்வியும் எழும் இல்லையா ? சாப்பிடலாம். ஆனால் அந்த பெரிய சைஸ் ஆக்டபஸை அல்ல, குட்டி ஆக்டபஸை.

பிரபலமான உணவு வகையான சுசி, சூப்கள், பாஸ்தா போன்ற பலவற்றில் ஆக்டபஸின் அம்சம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆக்டபஸ் எல்லாம் வேண்டாம் என ஒதுக்குவதற்கு முன் அதிலுள்ள விஷயங்களை ஒரு தடவை பார்த்து விடுவோமே.

ஆக்டபஸில் நிறைய சத்துகள் அடங்கியிருக்கின்றன என்பது மகிழ்ச்சியான முதல் செய்தி. கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம் ஆகிய மினரல்கள் அவற்றில் குறிப்பிடத் தக்கவை. உடலின் ஆரோக்கியத்துக்கும் வலிமைக்கும் இந்த சத்துகள் பெருமளவு துணை செய்கின்றன.

கண்பார்வைக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் குட்டி ஆக்டபஸ் பயன்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ, மற்றும் வைட்டமின் சி இரண்டும் தான் இந்தப் பணியைத் திறம்படச் செய்கின்றன. வைட்டமின் எ கண்ணுக்கு, வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்திக்கு. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் போது ஆரோக்கியம் வளரும் என்பது நாம் அறிந்ததே. இதில் கூடுதலாக வைட்டமின் பி – கூடவே இருப்பது உடலுக்கு கூடுதல் பலம்.

இதில் கொழுப்புச் சத்து ரொம்பக் கம்மி. கலோரி கணக்கை அளந்து அளந்து சாப்பிடும் ஆரோக்கியவாதிகள் ஆக்டபஸ் ஒரு ஆபத்பாந்தவன் என்று கூட சொல்லலாம்.

ஒமேகா 3 பற்றி இன்னும் பேசவேண்டுமா என்ன ? இதய நோயைத் தடுப்பது, அல்சீமர் நோய் வராமல் பார்த்துக் கொள்வது, கேன்சர், மன அழுத்தம் போன்றவற்றின் சிக்கலைக் குறைப்பது, என ஏகப்பட்ட பலன்களை வஞ்சகமில்லாமல் அள்ளித் தரும் சத்து தான் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம். அது ஆக்டோபஸில் நிறைய நிறைய உண்டு என்பது முக்கியமான விஷயம்.

ஆக்டபஸில் இருக்கும் இன்னொரு வசீகரச் சக்தி டாரைன் Taurine. இந்த அமிலச் சத்து உடலிலுள்ள நச்சுத் தன்மையை நீக்க உதவும். உடலின் தசைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கவும், கண் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கவும் இந்த சத்து உதவுகிறது. உடலிலுள்ள இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் இது பக்க பலமாய் இருக்கும். வயதானவர்களுக்கு வரக்கூடிய கொடிய எலும்பு முறிவு நோயான ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வராமல் தடுக்கவும் இது உதவும். கூடவே இதய தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது பயன்படுகிறது !

இதிலுள்ள இரும்புச் சத்து இன்னொரு வரப்பிரசாதம். சிவப்பு இரத்த அணுக்களின் உருவாக்கத்துக்கு இது கைகொடுக்கும். உடலின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், மூளையின் ஆரோக்கியத்துக்கும் இரும்புச் சத்து உதவும் என்பது நாம் அறிந்ததே.

புற்று நோயை எதிர்க்கும் வல்லமை ஆக்டபஸ்க்கு உண்டு என்பது நல்ல செய்தி ! வாய், வயிறு, மார்பு, நுரையீரல், புரோஸ்டேட், கணையம் போன்ற பல இடங்களில் வரும் புற்று நோயை ஆக்டபஸ் கொஞ்சம் தடுக்க முயலும்.

சிலருக்கு ஆக்டபஸ் தோலில் அரிப்பை ஏற்படுத்தக் கூடும். அது சில வேளைகளில் அந்த மீனைக் கழுவும் போதோ, வாங்கும்போதோ ஏற்படும் அலர்ஜியாய் கூட இருக்கலாம். எனவே கிளவுஸ் போட்டு கழுவ முயலுங்கள். சாப்பிட்ட பின் அந்த அறிகுறி தெரிந்தால் உங்களுக்கு அலர்ஜி இருக்கலாம் என கணிக்கலாம். மருத்துவரை கலந்தாலோசிக்கும் தேவை அப்போது உண்டு.

இவற்றைத் தவிர ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் கே, வைட்டமின் இ, ரிபோஃப்ளேவின், ஃபோலேட், வைட்டமின் பி12, கோலைன், தாமிரம், மெக்னீசியம், செலீனியம், என வரிசையாய் ஏகப்பட்ட பலன்கள் உள்ளன.

அப்புறமென்ன அடுத்ததடவை ஆக்டபஸை விழுங்குங்க, பிடிச்சிருந்தா கன்டின்யூ பண்ணுங்க !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *