மக்கா நம்ம சாள மீனு….

சாளை மீன்

Image result for Chalai fish

ஆங்கிலத்தில் சார்டைன் என அழைக்கப்படும் சாளை மீன் அற்புதமான மீன் உணவு. நிஜமாகத் தான் சொல்கிறேன். மற்ற மீன்களில் இருப்பதை விட பல சிறப்பம்சங்கள் இந்த சாளை மீனில் உண்டு. கேரளாவிலும், குமரியிலும் சாளை என்று அழைக்கப்படும் இந்த மீனை மத்தி என மற்ற இடங்களில் அழைக்கிறார்கள். ஆனால் அதிலும் இரண்டு வகை உண்டு. நான் சொல்வது அளவில் சின்னதாக இருக்கும் சாளை மீன் பற்றி !

தனிப்பட்ட முறையில் என்னுடைய ஃபேவரிட் மீன் எது என கேட்டால் சட்டென சாளை மீன் என்று சொல்வேன். அதிலும் பொரித்த சாளை மீன் எனது சூப்பர் ஃபேவரிட். பொரித்து சாப்பிடுவதில் அதிக பயன் இல்லை என்பது ஒரு சோகச் செய்தி !

சாளை மீன், சின்ன மீன் வகைகளில் வந்து விடுவதால் மீன் உணவில் இருக்கக் கூடிய ஆபத்தான பாதரச ஆபத்து இதில் இல்லை என்பது முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால் நீங்கள் சாளை மீனை நிறைய சாப்பிடுங்கள். குறைந்த கலோரி உணவு இது. புரோட்டீன் சத்து நிறைய உண்டு. நன்றாக வேகவைத்த சாளை மீனைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கணிசமாய்க் குறையும்.

சொல்லியே ஆகணும், இதிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைய உண்டு. உங்கள் உடலும் மூளையும் இணைந்தே வளர உதவிசெய்யும் சத்துகளில் இது ரொம்பவே ஸ்பெஷல் !  உடலிலுள்ள நல்ல கொழுப்பை அதிகரிப்பதில் இது கில்லாடி. அப்படியே உங்களுடைய குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் உங்களுடைய இதயத்தை நல்ல முறையில் பாதுகாக்கும், இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் ஒமேகா 3 உதவி செய்யும். இன்னும் ஸ்பெஷலாக உடலின் சுருக்கங்களை நீக்குவது, தோலை பராமரிப்பது, எலும்புகளின் இணைப்பை வலுவாக்குவது, முதுகெலும்பை ஆரோக்கியமாக்குவது  என அட்டகாசமான பல விஷயங்களை இது கவனமாய்ச் செய்யும்.

வைட்டமின் டி பற்றியும் நிறைய பேசினோம். மீனில் இருக்கும் வைட்டமின் டி சத்து உடலை வலுவாக்கும், உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை உறிஞ்சிக் கொள்ள வைட்டமின் டி உடலில் இருப்பது அவசியம். சாளை மீனில் நிறைய கால்சியம் சத்து உண்டு. அது உடலின் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும். பல்லுக்கும் அது ரொம்ப நல்லது. கால்சியம் நிறைய இருந்தால் உடலை வலுவிழக்கச் செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வராது என்பது நாம் அறிந்ததே. உடலில் கேன்சர் நோயின் பாதிப்பு வராமல் தடுக்கும் வல்லமையும் இந்த சாளை மீனுக்கு உண்டு என்பது சந்தோஷ சமாச்சாரம்.

நரம்புகளை வலுவாக்கும் சத்துகளும், மூளையை வலுவாக்கும் சத்துகளும், உடலை வலுவாக்கும் சத்துகளும் இந்த குட்டி மீனில் இணைந்தே இருப்பது மீன் பிரியர்களுக்கு மகிழ்வளிக்கும் செய்தி. வைட்டமின் பி12, பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் சாளை மீனில் நிறைய உண்டு.

இதிலுள்ள டிரைப்தோபான் உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. பெரும்பாலான உணவுப் பொருட்களில் இது அதிகம் இருப்பதில்லை. சாளை மீனில் 78 சதவீதம் உண்டு. இதில் இரும்புச் சத்து, வைட்டமின் சி, வைட்டமின் எ, கால்சியம் , பாஸ்பரஸ், பொட்டாசியம், செலீனியம் போன்றவையும் உண்டு என்பது கூடுதல் மகிழ்ச்சியூட்டும் செய்தி.

கண்களின் ஆரோக்கியத்துக்கும் கூட சாளை மீன் நல்ல செயலாற்றும். பார்வையை கூர்மையாக்கவும், சிக்கலில்லாமல் பாதுகாக்கவும் சாளை மீன் உதவும். ஐம்பது வயதுக்கு மேல் கண்பார்வை இழக்கும் அபாயத்திலிருந்து சாளை மீன் காப்பாற்றும். கூடவே உங்களுக்கு “கண் உலர்தல்” டிரை ஐ பிரச்சினை உண்டெனில் தொடர்ந்து சாளை மீன் சாப்பிடுவது நல்ல தீர்வு !

முடி உதிர்தலைத் தடுக்கும் ஷாம்பூ என கத்திக் கத்தி விளம்பரம் செய்கிறார்களே, அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சாளை மீனைத் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். உங்களுடைய தலைமுடியின் பாதுகாப்புக்கு அது நிச்சயம் உதவும்.

கடைசியாக ஒரு சின்ன செய்தி. குறிப்பாக பர்ஸைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனும் கரிசனை உடையவர்களுக்கு இந்தச் செய்தி. இருக்கும் மீன்களிலேயே விலை குறைவாகக் கிடைக்கும் மீன்களில் சாளை மீன் முதலில் நிற்கும். ஏராளமாகக் கிடைக்கும் என்பதால் இந்த மீன் மலிவாகக் கிடைக்கும் என்பது ஒரு காரணம். இந்த மீனைப் பற்றித் தெரியாமல் பெரிய மீன்களைத் தேடி மக்கள் ஓடுவது இன்னொரு காரணம் !

அப்புறமென்ன, சாளை மீனை ஒரு சட்டி நிறைய சாப்பிடலாமே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *