காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை

 

Image result for romantic love fantasy

 

மகிழ்ச்சி !

 

காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை. எல்லா காதலும் கல்யாணத்தில் முடிந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

ஆரம்பப் பள்ளியின் அரும்பு நாட்களில் கண்களுக்குள் சின்ன மின்மினிக் காதல் ஒன்று விட்டு விட்டு ஒளிகொடுக்கும். கணக்கு பாடத்தின் விடையைக் காட்டிக் கொடுத்ததன் மூலமாகவோ, இருந்த பலப்பத்தை இரண்டாய் ஒடித்து பாதி கொடுத்த பாசத்தின் பார்வையிலோ அந்த மின்மினிகள் தோன்றியிருக்கலாம். காமத்தின் அரிச்சுவடி கூட அருகில் நுழையாத, இனக்கவர்ச்சியின் இனம் என்ன என்பதே புரியாத பால்யத்தின் புனிதக் காதல் அது.

ஐந்தாம் வகுப்பின் பிரியாவிடை கணங்களில் சொல்ல முடியாத ஏதோ ஒரு இழப்புடன் விலகிப் போகும் அந்த காதல். காலத்தின் சாரட் வண்டியில் யாராரோ ஏறி இறங்கிப் போன்பின்பும் அந்த முதல் காதலின் மெல்லிய சத்தமும், அந்த முதல் காதலியில் மறந்து போகாத பெயரும் மனதுக்குள் ரீங்காரமிடும். அந்த ஆரம்பப் பள்ளியை எப்போதேனும் கடக்கும் கணங்களில் சட்டென மீண்டும் கண்ணுக்குள் எட்டிப் பார்த்துச் செல்லும் அந்த மின்மினிக் காதல்.

இரண்டாவது காதல் பதின் வயதுகளின் படிகளில் பல்லாங்குழி ஆடும். ஹார்மோன்கள் சக்திமான்களாக புஜம் உயர்த்தும் பொழுதுகளில் இந்தக் காதல் கனவுகளுக்குள்ளே கற்பனைகளையும், கற்பனைகளுக்குள்ளே கனவுகளையும் ஒளித்து வைத்து மாயாஜாலம் காட்டும். இதுதாண்டா காதல் என பள்ளிக்கூட தாவணி தேவதைகளின் பின்னே அரும்பு மீசை பாரதிராஜாக்களாக அலையவிடும்.

கடைக்கண் பார்வை போதும் இடுக்கண் எல்லாம் நீங்கும் என இலக்கியம் பேசும். கள்ளி முள்ளில் காதல் கிறுக்கி, காம்பஸால் மேஜை கிறுக்கி, நாளெல்லாம் கவிதை கிறுக்கி இந்தக் காதல் கிறுக்கு தேசத்தில் கிறு கிறுக்க வைக்கும். காதலுக்கும், காமத்துக்கும் வெகு அருகில் உலவும் இந்தக் காதல் இரண்டையும் விட உயர்வாய் இதயத்தில் பச்சை குத்தும்.

கல்லூரிக் காதல் கலர்புல் காதல். பரவச தேசத்தின் பளிங்கு மாளிகையில் கனவுகளின் தாயம் உருட்டி விளையாடும் காதல். குறைந்த பட்சம் ஒரு காதல் என்பது கல்லூரிக் காதலின் கணக்கு. மேலதிகக் காதல் என்பது சுகமான அவஸ்தை அல்லது அவஸ்தையான சுகம். தற்குறிப்பேற்ற அணிகளும், இல்பொருள் உவமை அணிகளும், உவமைத் தொகைகளும் கவிதைகளாய் பொழியும் காலம் இது. அணி என்பதே அழகுதானே, உனை அணிகளால் அழகு பார்க்கவா, அணியாமல் அழகு பார்க்கவா என சிலேடை சில்மிஷங்கள் உலவும் காதல்.

நல்லவேளை காதல் எல்லாம் கல்யாணத்தில் முடியவில்லை. கல்யாணம் முடிந்து குழந்தை குட்டிகளுடன் வாழ்வின் உன்னத வாழ்க்கை வாழும் எல்லா மனங்களுக்குள்ளும், ஏதோ ஒரு மூலையில் பரவசம் ஊட்டும் பச்சைய நினைவுகளாய் இந்தக் காதல்கள் கண்ணாமூச்சி ஆடுகின்றன. நீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவே  இமைக்காமல் கிடக்கின்றன என் இமைகள் என வந்து விழுகின்ற கவிதை வரிகளில் ஏதோ ஒரு பால்ய காதலின் வாசம்.

இந்தக் காதல்கள் தான் வாழ்க்கையை அழகாக்குகின்றன. இந்தக் காதல்கள்  தான் காதலை அர்த்தப்படுத்துகின்றன. இந்தக் காதல்கள் தான் ஒரு மனிதனை ரசனைவாதியாகவோ, இலக்கியவாதியாகவோ, கலைஞனாகவோ, ஓவியனாகவோ, சிற்பியாகவோ மாற்றுகின்றன.

பால்ய காலக் காதல்களின் வேர்களிலிருந்து தான் இலக்கியவாதிகள் தங்களுக்கான விருதுப் படைப்புகளை உறிஞ்சி எடுக்கின்றனர். திரை இயக்குனர்களின் கனவுப் படைப்புகள் பெரும்பாலும் அவர்களின் கனவுகளில் புரண்டு படுக்கும் காதலின் பெருமூச்சுகளே. கவிஞர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பால்யக் காதல் இல்லாத கவிஞர்கள் பாலையில் சாகுபடி செய்யும் பரிதாபத்துக்குரியவர்கள்.

எல்லாக் காதலையும் சொல்ல முடியாது. எல்லாக் காதலையும் வெல்ல முடியாது. காதல் என்பது காற்றைப் போல, அரைகிலோ காற்றை அளந்து தர முடியாது. காதல் மின்சாரம் போல, நாலு மீட்டர் மின்சாரத்தை வெட்டிக் காட்ட முடியாது. காதல் என்பது உணர்வு. தோல்வி என்பது நாமாகவே சொல்லிக் கொள்வது. நந்தவனத்தில் நடப்பது போன்றதே காதலில் பயணிப்பது. ஓர் முறை நடந்த சிலிர்ப்பு மறையப் போவதில்லையே.

நல்லவேளை எல்லாக் காதலும் கல்யாணத்தில் முடிவதில்லை. காதல் பிரமிப்புகளை மட்டுமே வரிசையாய் வைக்கும். கல்யாணம் ரேஷன் கடைகளிலும் வரிசையில் நிற்க வைக்கும். காதல் சிரிப்புகளின் சின்ன தீவு, திருமணம் வாழ்க்கையின் நெரிசல் வீதி. காதல் அருவியின் ஆக்ரோஷம், திருமணம் தண்ணீரின் தடுமாற்றம். காதல் விருப்புகளின் அனுமதிச் சீட்டு, திருமணம் பொறுப்புகளின் கூட்டுத் தொகை.

எல்லாக் காதலும் கல்யாணத்தில் முடிவதில்லை.

ஆனால்,

எல்லா கல்யாணங்களும் காதலில் தொடங்குகின்றன !

 

இது இரண்டாம் பாகம். எழுதிக் கிழித்தவைகளை புறந்தள்ளிவிட்டு புதிதாய் பதிப்பிக்கப் போகும் கவிதைத் தொகுப்பு. மாங்கல்ய முடிச்சிட்டு, இடைவெளி அவிழ்த்து புலன்களின் வாய்க்கால்களின் புதிதாய் பதியமிடப்போகும் நாற்று.

 

இது காதலின் கூட்டுத் தொகை. பால்யக் காதலின் புனிதமும், பதின் வயதுக் காதலின் பரவசமும், கல்லூரிக் காதலின் சில்மிஷமும் இணைந்து ஊட்டும் கூட்டாஞ்சோறு. திருமணத்தில் செயல்படுத்தத்தான் அத்தனை முன்காதலின் முகவுரைகளா ?

கடந்து வந்த பாதைகளின் இனிமைகளை எடுத்து, கல்யாண வாழ்க்கையின் வீதிகளில் விதைப்பவர்கள் வலுவான திருமண வாழ்க்கையை அறுவடை செய்கின்றனர். அதுவே காதலுக்குச் செய்யும் மரியாதையும் கூட. கடந்த காதல்களின் இனிமையை மறந்து காயங்களில் மட்டுமே கூடு கட்டிக் குடியிருப்பவர்கள் திருமணத்தை மட்டுமல்ல காதலையே காயப்படுத்துகின்றனர்.

எல்லாக் காதலும்

கல்யாணத்தில் முடிவதில்லை.

எல்லா

கல்யாணங்களும் காதலில் தொடங்குகின்றன !

 

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *