இருமுகன் : திரை விமர்சனம்

Image result for irumugan

மிரட்டலாய் ஆரம்பிக்கிறான் இருமுகன்.

போர்ன் அல்டிமேட்டம் இசையின் சாயலில், ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கோர்வையில், ஒரு மிரட்டலான தொனியில் படம் ஆரம்பிக்கிறது. கற்கால மனிதன் முதல் தற்கால மனிதன் வரை, மனித வரலாற்றில் வன்முறை ஆயுதங்களின் வளர்ச்சி, ஓவியங்களாக பின்னணியில் ஓட “வாவ்.. என மனம் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் பறக்க விடுகிறது”

ஒரு எழுபது வயது முதியவர், மலேஷியாவிலுள்ள இந்தியன் எம்பஸிக்குள் நுழைகிறார். இன்ஹேலர் ஒன்றை அடிக்கிறார், அசுர பலம் வருகிறது. அதிரடி சரவெடியாய் ஒரு சண்டை. படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறுகிறது.

சண்டை நடந்த இடத்தில் கிடக்கும் ஒரு சிக்னல், இந்த வழக்கை விசாரிக்க அகிலன் ( வேற யாரு விக்ரம் தான் ) தான் வேண்டும் என ரா முடிவெடுக்கிறது. அகிலன் எங்கே என்று பார்த்தால் ஜேஸன் சாந்தம் போல ஒரு குத்துச் சண்டையில் இருக்கிறார். ரொம்ப ரா வா இருக்கிறார் என ரா வில் இருந்து ராவோடு ராவாக துரத்தப்பாடு, நாலு வருஷம் சோகத்தைச் சுமந்து கொண்டு “ஜாலியாக” திரிகிறார்.

Image result for irumugan nassar

“நீங்க தான் வழக்கை விசாரிக்கணும்” என வழக்கம் போல நாசர் சொல்ல, “முடியாது” என படு வழக்கமாய் விக்ரம் நிராகரிக்க, இதுல ஈடுபட்டது யாரு தெரியுமா ? என அதரப் பழசான டயலாக்கை நாசர் பேச, விக்ரம் அதை விடப் பழைய படத்து ஹீரோ போல, மீண்டும் ரா அலுவலகம் போய் சுருட்டி வைத்த மேப்பை விரிக்கிறார், கணினியில்.

“என்னப்பா, படம் படு செயற்கைத் தனமாவே போகுது” என அருகில் இருந்த நண்பன் காதைக் கடித்தான்.

“சும்மா இருப்பா, படமே இப்போ தான் ஆரம்பிக்குது.. கொஞ்சம் வெயிட்” என சொன்னபோது முட்டிக்கும் அரைமீட்டர் மேலே நிற்கும் குட்டைத் துணியுடன் நயந்தாரா நடனமாட வந்தார், நண்பர் “செயற்கையாவது, மண்ணாவது” இந்தப் பாட்டை நாலுவாட்டி போடுங்கப்பா என சௌகரியமாய் உட்கார்ந்து விட்டார்.

நயந்தாரா விக்ரமின் மனைவி என்பதும், அந்த லவ்லி மனைவி லவ் எனும் ஒரு வில்லனால் கொல்லப்பட்டார் என்பதும், அந்த வில்லன் மறுபடியும் அகிலன் கையால் தான் கொல்லப்பட வேண்டும் என ரா முடிவெடுப்பதும் .. என சுவாரஸ்யமில்லாத தினமலர் செய்தி போல காட்சிகள் நகர்கின்றன.

Image result for irumugan nayanthara

விக்ரமின் மிரட்டலான நடிப்பும், வித்தியாசமான வில்லன் நடிப்பும் தான் படத்தின் பக்க பலம். இல்லை இல்லை முழு பலம். அதிலும் லவ் எனும் கதாபாத்திரம் காட்டும் நளினமும், உதட்டு அசைவும், கண்ணசைவும், நளின நடையும் வாவ்.. சொல்ல வைக்கிறது.

சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. சண்டைகளுக்கான மெனக்கெடல் நல்ல பலனைத் தந்திருக்கிறது. ஆனா என்ன எல்லாமே ஓவர் டோஸ்.

ஒரு விஷயத்தைப் புதிதாக படத்தில் கொண்டு வரும் போது படம் முழுக்க அதை கொண்டு வரவேண்டும் என இயக்குனர்கள் நினைத்து விடுகிறார்கள். அதனால் அந்த விஷயத்தின் அழுத்தம் அழிந்து போகிறது.

ஏழாம் அறிவில் “நோக்கு வர்மம் என்றால் இந்த படத்தில் இன்ஹேலர்”. முதலில் ஆஹா என்று ஆகி, இரண்டாவது ஓஹோ என்று மாறி, தொடர்ந்து ஆளாளுக்கு இன்ஹேலர் அடித்துக் கொண்டே இருக்க நமக்கு மூச்சுத் திணறல் வந்து விடுகிறது.

Image result for iru mugan

படத்தை ஆளாளுக்கு பேசும் வசனத்தால் பாடம் ஆக்கி விட்டது இன்னொரு கொடுமை. பழைய படங்களில் பாட்டிலில் கொட்டை எழுத்தில் “விஷம்” என்று எழுதி வைத்து, அதை நான்கு முறை ஸூம் பண்ணி, விஷத்தைக் காட்டுவது போல என்று சொல்லலாம். இதென்ன தெரியுமா.. இது தான்.. என கெமிக்கல் விஷயங்களை பேசி ” மறுபடியும் மொதல்ல இருந்தா” என நமக்கு மரண பயத்தை காட்டி விடுகிறார்கள்.

படம் தொடங்கும் போது “படத்தில் வரும் வேதியல் ஃபார்முலாக்களெல்லாம் கற்பனையே” என ஒரு கார்ட் போடுகிறார்கள். அப்புறம் எதுக்கு இவ்வளவு வியாக்கியானம் ? “மிஸ்ட் காலுக்காடா முக்கா மணி நேரம் பேசினே” எனும் சலிப்பு தான் வருகிறது.

திரைக்கதை லாஜிக் ஓட்டைக்குள் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, அங்கேயே வாழ்க்கையையும் முடித்து விடுகிறது. அத்தனை அமெச்சூர் தனம்.

பஸ்ஸிலிருந்து இறங்கும் எல்லோரையும் சோதனை செய்யும் கராரான‌ போலீஸ் விக்ரமையும், நயனையும் மட்டும் சோதிக்காமல் அனுப்புகிறார்கள். கள்ளிக்காட்டு ஆட்டுக் கொட்டில் போல இருக்கிறது ராணுவ தளம். அதை காலால் எட்டி உதைத்து உள்ளே போகிறார் ஹீரோ. உடனே “செக்யூரிடி பிரீச்” என்கிறது வில்லனின் கணினி. “ஆல்ட் கன்ட்ரோல் 3 போடு சிஸ்டத்தை ஹேக் பண்ணிடலாம்” என்கிறார் நயன். வில்லன்  ஃப்ளைட்டை எப்போ வேணுமானாலும் கிளப்பலாம், ஆனா போலீஸ் வெப்ஸைட்டில் இன்னும் இருபது நிமிஷத்தில் கிளம்பும் என மின்னுகிறது. போதுமடா சாமி, தாங்கல.

அரிமா நம்பி எடுத்த டைரக்டரை “நம்பி”, “வரியா தம்பி” என அழைத்து படத்தைக் கொடுத்ததற்காக வெச்சு செஞ்சிருக்காரு.  இந்தப் படத்தை எடுக்க மூணு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டாங்களாம். ரெண்டு பேரோட பொட்டி தப்பிச்சுது.

Image result for iru mugan

படத்தின் மிகப்பெரிய மைனஸ் எந்தக் காட்சிகளையும் சுவாரஸ்யமாய், ஒரு பரபரப்புடன், ஒரு திடுக்கிடலுடன், ஒரு மர்மத்துடன் கொண்டு போகாதது தான். எல்லா மர்ம முடிச்சுகளும் சட் சட்டென தானே விலகி விடுகின்றன. அதனால் படத்தின் வேகமும், விவேகமும் நொண்டியடித்து விடுகிறது.

அகிலன் எங்கே நாலுவருஷமா ஆளைக் காணோமே என்றால் கணினியைத் தட்டுகிறார்கள், அது காஷ்மீர் பக்கத்தில் நாலு பச்சை புள்ளிகளோடு சுத்துகிறது. அதோ அங்கே என்கிறார்கள்.

துப்பாக்கி துளைத்து டேமேஜ் ஆன கருவியை அடுத்த காட்சியில், “ஃபிக்ஸ் பண்ணிட்டேன்” என்கிறார்கள், ஏதோ பத்து ரூபாய் ஃபெவி குவிக் மாயாஜாலம் போல.

ரா அதிகாரியைப் பிடிக்க ஆயிரம் போலீசார் குழுமி இருக்க, படுபயங்கர வில்லன், அப்போது தான் சிறையிலிருந்து தப்பியவன், நர்ஸ் டிரஸ் போட்டு போலீஸ்காரனையே இடித்துக் கொண்டு, சாரி “இஸ்க்கி கினு” போகிறான். போகிறானா, போகிறாளா, போகிறான்ள் ஆ? எப்படி சொல்றதுன்னு தெரியல.

பெரிய காமெடி, வில்லன் கருணாகரன் காட்சி. அவருடைய அலட்சிய பேச்சுகளெல்லாம் ஏதோ பெருசாகச் செய்யப் போகிறார் என நினைக்க வைக்கிறது. அடுத்த காட்சியிலேயே “சுட்ட கருவாடு தந்தா போதும் பாஸ், நான் எல்லாத்தையும் சொல்லிடறேன் என அப்ரூவர் ஆகிறார்”. ஏன் ? எதற்கு ? எப்படி ?

Image result for iru mugan karunagaran

கிளைமேக்ஸ் காட்சியில், ஒரு முறை பஃப் அடிச்சவன் அப்புறம் பல மணிநேரம் சுருண்டு கிடப்பான் என டைரக்டர் சொன்னதையே மறந்துட்டாரு போல. ஹீரோவாச்சே, ஹலோ என்றதும் “ஆஜர்” என்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டு வந்திருக்கிறார் என நினைத்தால், அவர் “மீண்டும்” வந்திருக்கிறார். அவ்வளவு தான். ஆங்காங்கே மிரட்டுகிறார், மிச்ச இடங்களில் விரட்டுகிறார்.

பாடல்களும், ஏன் பாடல் வரிகளும் கூட ரசிக்க வைக்கவில்லை. இன்னும் எத்தனை காலம் தான் டெக்னாலஜி பாடல் என்றால் ஃபேஸ்புக்கும், செல்ஃபியும் வருமோ கடவுளே.

தொழில்நுட்பம் எல்லாம் பக்காவாக இருந்தும், நடிப்பு எல்லாம் அசத்தலாக இருந்தும், படம் ஈர்க்காததற்குக் காரணம் திரைக்கதையில் வலுவில்லாதது மட்டுமே.

“ஐயோ கஷ்டப்பட்டு எடுத்துட்டேன்” என நினைத்து காட்சிகளை படத்தில் வைப்பது ஆபத்து. படத்தில் தேவையற்ற பாடல்களையும், தொய்வு தரும் காட்சிகளையும் வெட்டி படத்தை 2 மணி நேரமாய் மாற்றினால் இன்னும் வேகம் கூடும். பார்வையாளன் சீக்கிரன் வீட்டுக்காச்சும் போவான்.

Image result for iru mugan karunagaran

படம் பார்க்க நுழைந்தபோதே ஏதோ ஒரு அசரீரியாக பாரதியார் பாடல் ஒன்று காதுக்குள் ரீங்காரமிட்டது.

“நல்லதோர் வீணை செய்தே.. அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ…”. விக்ரம் அட்டகாசமான வீணை. அந்த வீணையை எடுத்து டங்கமாரிக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு முக்கி முக்கி முட்டு கொடுத்திருக்கிறார்.

பாவம் விக்ரம், கஷ்டப்பட்டு நடிச்சிருக்காரே என்பதற்காகத் தான் சுக்கு நூறாய்க் கிழிந்த இலையில் கொட்டிய பிரியாணியை மேம்போக்காகவேனும் சாப்பிடவேண்டியிருக்கிறது.

கடைசிக் காட்சி தான் ஹைலைட். தேனிலவு மூடில் ஹீரோவும் ஹீரோயினும். அட்டகாசமான லொகேஷன். உன்னை என்ன பண்றேன் பாரு என, ஹீரோ கண்ணடிக்க, ஹீரோயின் வெட்கப்படுகிறார். உடனே ஸ்டைலாக ஹீரோ இன்ஹேலர் எடுத்து அடிக்கிறார். “அடப்பாவி இவ்ளோ செலவு செய்து, இந்த படகுல, இந்த லொக்கேஷனுக்கு வந்தது ஜஸ்ட் 5 மினிட்ஸ்க்கா ?” என நயந்தாரா அதிர்ச்சியில் மயங்கி விழ, திரையில் இருட்டு.

இருமுகன் : ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.. நோ பீஸ் ஆஃப் மைன்ட்.

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *