What is that கடல் எல்லை ?

Image result for sea boundary

மீன் பிடிக்கப் போனவர்கள் எல்லை தாண்டி விட்டார்கள். எல்லை தாண்டியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு. இதெல்லாம் சமீப காலமாக இந்திய மீனவர்களின் உயிரை உலுக்கும் பிரச்சினை. கடலுக்குப் போன மீனவன் திரும்பி கரைக்கு வரும் வரை அவனுடைய குடும்பம் அருவாமனை மீனாகிறது.

மீனவனுக்குக் கடல் அமுத சுரபி. அவனுடைய தாய்மடி. அதில் எல்லைகள் போட்டு தொல்லைகள் தொடுப்பது எந்த விதத்தில் நியாயம் எனும் தார்மீகக் கேள்வி எல்லோருக்குள்ளும் உண்டு. அதற்கு முன் இந்த கடல் எல்லை சமாச்சாரத்தைக் கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது.

முன்பெல்லாம் கடலில் அங்கீகரிக்கப்பட்ட எல்லை தொடர்பான சட்டம் ஏதும் இல்லை. கரையிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் அந்தந்த நாட்டுக்குச் சொந்தம். மற்றதெல்லாம் எல்லாருக்கும் பொது. என்பது தான் பொதுவான அணுகுமுறையாய் இருந்தது. அதிலும் தெளிவு இல்லை. அவரவர் விருப்பப்படி தங்கள் கடல் எல்லைகளை அமைத்துக் கொண்டார்கள்.

1982ம் ஆண்டு UNCLOS (United Nations Convention on the Law of the Sea) எனும்  சர்வதேச அமைப்பு உருவானது. கடலில் எல்லை எவ்வளவு தூரம் ? யாருக்கு எங்கே அதிகாரம் ? என்னென்ன அதிகாரம் ? என்பதையெல்லாம் இது வரையறுத்தது. கடல் எல்லைகள் குறித்து சர்வதேச அளவில் ஒழுங்குகளைக் கொண்டு வந்தது இந்த அமைப்பு தான். 158 நாடுகள் இதுவரை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

Image result for fisherman tamilnadu

அதன்படி ஒவ்வொரு நாடும் அதன் கடற்கரையில் இருந்து 12 நாட்டிகல் மைல் தூரத்தை தன் எல்லையாக்கிக் கொள்ளலாம். 12 நாட்டிகல் மைல் என்பது உத்தேசமாய் 22.2 கிலோமீட்டர் தூரம். இந்த 22 கிலோ மீட்டர் தூரத்துக்கும் முதலாளி இந்த நாடு தான். ஆனால் இந்த வழியாக பிற நாட்டுப் பயணக் கப்பல்கள் போன்றவை செல்லலாம் சம்பந்தப்பட்ட நாடு அனுமதிக்க வேண்டும். கடல் வளைகுடாவாய் நாட்டுக்குள் வளைந்திருந்தால் அது முழுக்க முழுக்க அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் தான் வரும்.

ஒருவேளை 22 கிலோமீட்டருக்குள் இன்னொரு நாட்டின் எல்லை வந்தால் என்ன செய்வது ? அது தான் நமக்கும் இலங்கைக்கும் உள்ள பிரச்சினை கூட. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 30  கிலோ மீட்டர்கள் தான். இரண்டு நாட்டில் கடல் எல்லைகளும் ஒன்றின் மீது ஒன்றாக இருக்கின்றன. இத்தகைய சூழலில் நாடுகள் அந்தக் கடல் எல்லையை பேசி ஆளுக்குப் பாதியாய் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனக்கு 22 கிலோமீட்டரெல்லாம் தேவையில்லை கொஞ்சம் போதும் என ஒரு நாடு நினைத்தால் பிரச்சினை இல்லை. சிங்கப்பூர், ஜோர்டன் போன்ற நாடுகளெல்லாம் எங்களுக்கு ஆறு கிலோமீட்டர் தூரம் போதும் என விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கின்றன ! இரண்டு நாடுகளுமே எனக்கு அதிகம் இடம் வேண்டும் என குடுமிப் பிடி சண்டை போட்டால் தான் நிலமை சிக்கலாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டின் பாதி வரை இந்த எல்லை ஆறு கிலோமீட்டராய் இருந்ததற்கு ஒரு சுவாரஸ்ய காரணம் உண்டு. அப்போதைய அதி நவீன பீரங்கி “கேனன்” குண்டு வீசினால் இதைத் தாண்டி வராதாம் ! இப்போது ஆயுதங்களும் மாறிவிட்டன. சட்டமும் மாறிவிட்டது. 12 நாட்டிக்கல் மைல், அதாவது 22 கிலோ மீட்டர் எனும் எல்லை உலக அளவில் ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதை ஒப்புக் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உண்டு, இலங்கையும் உண்டு !

Image result for fisherman tamilnadu

இந்த 22 கிலோ மீட்டரையும் தாண்டி இன்னும் ஒரு 22 கிலோமீட்டர் தூரத்தை நாடுகள் தங்கள் “கண்காணிப்பில்” வைத்திருக்கலாம். இது பெரும்பாலும் போர்கள், அண்டை நாடுகளிடமிருந்து வரும் ஆபத்து போன்ற சிக்கல்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. கடலில் ரோந்து போகவேண்டும், தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றால் இந்த எல்லையைப் பயன்படுத்தலாம்.

இந்த இரண்டு எல்லைகளையும் தாண்டி மூன்றாவதாய் ஒரு எல்லையும் உண்டு. அது பொருளாதார எல்லை. கரையிலிருந்து சுமார் 393 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எல்லா கடல் வளங்களும் அந்த நாட்டுக்கே உரித்தாகும். வேறு நாடுகள் கப்பலேறி வந்து உரிமை கொண்டாட முடியாது. மீன்பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்ற சகல பொருளாதார உரிமைக்கும் கடிவாளம் அந்தந்த நாட்டிடமே. இதற்கு மேலும் எல்லையை நீட்டிக்க விரும்பினால் சர்வதேசக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

இந்த மூன்று எல்லைகளும் தான் இப்போதைக்கு அங்கீகரிக்கப்பட்ட கடல் எல்லைகள். அருகருகே நாடுகள் இல்லாமல் இருந்தால் இந்த எல்லைகள் அதுபாட்டுக்கு தேமே என்று கிடக்கும். அருகருகே நாடுகள் இருந்து, அந்த எல்லையில் வளங்களும் இருந்தால் சிக்கல் தான்.

 

One thought on “What is that கடல் எல்லை ?

  1. திலிப் says:

    Rare information. Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *