செங்கடலாகுமா கருங்கடல்

செங்கடலாகுமா கருங்கடல்

Image result for Black Sea oil

கருங்கடல் உலக மேப்பில்  முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் கடல். சுற்றுலாத்தலம், கப்பல்களின் வழிப்பாதை, ஆழ்கடல் குழாய்கள், எண்ணெய் வளம், எரிவாயு வளம், போர்க் கப்பல்களின் தளம் இத்யாதி.. இத்யாதி என பல்வேறு முகங்கள் இதற்கு உண்டு. உலகின் நாடுகளெல்லாம் இப்போது கருங்கடலின் மீது இருக்கும் கண்களையெல்லாம் வைத்திருக்கின்றன. விஷயம் அங்கே கிடைக்கும் எண்ணை வளம்.

ஏற்கனவே கருங்கடலின் அடிப்பாகத்தில் பல நாடுகளையும் இணைக்கும் எரிவாயு, எண்ணைக் குழாய்கள் இருக்கின்றன. ரஷ்யா, இங்கிலாந்து, துருக்கி உட்பல  பல்வேறு நாடுகள் இந்த இணைப்பில் சங்கமம். துருக்கி தனது கடல் எல்லையை தனது கட்டுப்பாடுக்குள் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறது. ஆனால் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதையெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. துருக்கியின் எல்லை இல்லாமலேயே அவை ஜோராக பிசினஸ் செய்கின்றன.

துருக்கி 1995ல் எண்ணை வளத்துக்காகக் கருங்கடலில் தோண்டியபோது அடித்தது ஜாக் பாட். 100 மில்லியன் டன் குரூட் ஆயில் !. அந்த சந்தோஷத்தில் அடுத்த புராஜக்ட் பத்து பில்லியன் பேரல்கள் என கணக்கு போடுகிறது. பிரேசிலுடன் கை கோர்த்து துருக்கி இந்த பணியைத் அடுத்த ஆண்டு துவங்குகிறது. கருங்கடலின் கிழக்குப் பகுதியில் இருக்கும் அப்காசியா நாடு எப்படியும் 200 மில்லியன் டன் ஆவது எடுத்தே தீர்வேன் என தன் பங்குக்கு களத்தில் குதித்திருக்கிறது.

இதையெல்லாம் பார்த்த உலக அண்ணன் அமெரிக்காவுக்கும் மூக்கில் வியர்த்து விட்டது. ஏற்கனவே “எண்ணை” நாடுகளுடன் பிரச்சினை, இயற்கை எரிவாயு, அது இது என அல்லாடிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. எனவே கருங்கடலிலிருந்து எண்ணையை உறிஞ்சி எடுக்கமுடிவு செய்து எக்ஸான் மொபைலுடன் ஒப்பந்தமும் இட்டுவிட்டது.

கருங்கடலின் எண்ணையை எடுக்க நீயா நானா என போட்டி போட்டுக் கொண்டு பக்கெட்டுடன் நிற்கும் நாடுகளின் பட்டியல் மிகப் பெரியது. பல்கேரியா, ரொமானிய, ஜோர்ஜியா, உக்ரைன் , அப்காசியா, இங்கிலாந்து, ரஷ்யா, துருக்கி, அமெரிக்கா என நீள்கிறது அது.

பழம் காய்க்கும் மரம் கல்லடி படத்தானே செய்யும். இந்த போட்டியில் கல்லை எறிபவை எல்லாம் பகையாளிகளும், பங்காளிகளும் என்பதால் வெளித்தெரியாத பதட்டம் உள்ளுக்குள் நிறையவே இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

1/7/2009

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *