Christianity : ஏசாயாவின் மனைவி

Image result for isaiah's wife

 

கிறிஸ்தவம் பெண்களைப் போற்றுகிறது. பைபிளைப் புரட்டிப் பார்த்தால் ஒவ்வோர் காலகட்டத்திலும் பெண்கள் எழும்பி ஆன்மீக எழுச்சிக்காகக் குரல் கொடுக்கிறாள். அல்லது அந்த காலகட்டத்தின் சமூக மாற்றத்துக்காகக் குரல் கொடுக்கிறாள். பைபிளில் 117 பெண்கள் இடம்பெறுகின்றனர் என்பதிலிருந்தே பெண்மையை விவிலியம் எவ்வளவு தூரம் முக்கியப் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சில பெண்கள் நமக்கு மிகவும் அறிமுகமானவர்கள். குறிப்பாக இறைமகன் இயேசுவைச் சுமந்த அன்னை மரி நமக்கெல்லாம் ரொம்பவே தெரிந்தவர். எப்போது வேண்டுமானாலும் அவரைப் பற்றிப் பேசுவோம். குறைந்த பட்சம் கானாவூர் திருமணமாவது நமது நினைவுக்கு வரும்.

ரூத்தைப் பற்றிப் பேசச் சொன்னாலோ, நகோமியைப் பற்றிப் பேசச் சொன்னாலோ நமக்கு பல விஷயங்கள் உண்டு. ரபேக்கா, தெபோராள், எஸ்தர், மிரியம் என பிரபலமான பெண்களைப் பற்றி விரல் நுனியில் நமக்கு விஷயங்கள் கிடைக்கும்.

ஆனால் ஏசாயாவின் மனைவியைப் பற்றிப் பேசச் சொன்னால் என்ன தெரியும் ? பலருக்கும் ஏசாயாவுக்கு ஒரு மனைவி இருந்த விஷயமே தெரியாது. ஏசாயாவைத் தெரியுமா ? என்று கேட்டால் அடிக்க வருவீர்கள். இயேசுவின் பிறப்பை முதன் முதலாகத் தெரிவித்த இறைவாக்கினர் அல்லவா அவர். பைபிளில் வருகின்ற முக்கியமான தீர்க்கத் தரிசியல்லவா அவர். ஏசாயா என்றாலே கூடவே நினைவுக்கு வருவது அவருடைய தீர்க்கத் தரிசனங்கள் தான்.

அந்த தீர்க்கத் தரிசியே ஒரு நபரைச் சுட்டிக் காட்டி, “இவர் ஒரு தீர்க்கத்தரிசி” என்று சொன்னார். அது தான் அவருடைய மனைவி ! அவருடைய மனைவியின் பெயர் என்ன என்பது யாருக்கும் தெரியாது. காரணம் பைபிள் அதைக் குறிப்பிடவில்லை. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பெயருக்கு ஆசைப்படாதே என்று நம்மைப் பார்த்து கடவுள் சொல்கிறாரா தெரியவில்லை.

பெயர் இல்லாமலேயே மனைவியின் பெருமையை ஏசாயா ஒரே வார்த்தையில் விளக்குகிறார் “பெண் தீர்க்கத்தரிசி” !. பெண்கள் தீர்க்கத் தரிசனம் உரைக்கலாமா ? உரைப்பார்களா எனும் கேள்விக்கான விடை கூட இதிலே இருக்கிறது இல்லையா ? ஏசாயா 8ம் அதிகாரம் மூன்றாம் வசனத்தை வாசித்தால் அது தெரிய வரும்.

நியாதிபதிகள் நூலிலே தெபோரா வருகிறார். தீர்க்கத்தரிசன வல்லமை பெற்ற பெண்மணி. நியாயாதிபதிகள் 4:4 ஐ அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 2 ராஜாக்கள் 14 முதல் 20 வரையுள்ள வசனங்களில் உல்தாள் எனும் தீர்க்கத் தரிசனப் பெண்மணி குறிப்பிடப்பட்டுள்ளார். ஏசாயாவின் மனைவியும் அந்தப் பட்டியலில் தீர்க்கத்தரிசனப் பெண்மணியாக அறியப்படுகிறார்.,

ஆன்மீகப் பார்வையில் ஒரு உன்னதமான நிலை தீர்க்கத் தரிசனம் உரைத்தல். இன்றைய பல தீர்க்கத்தரிசனங்கள் ஆழ்மனதின் சிந்தனை வெளிப்பாடுகளாகத் தான் இருக்கின்றன. மனதில் தோன்றுவதைப் பேசுவது தீர்த்தத் தரிசனம் என பலரும் நினைக்கிறார்கள். அதைச் சொல்லி காசும் பார்க்கிறார்கள்.

உண்மையான தீர்க்கத் தரிசனம் மனதில் தோன்றுவதல்ல, கடவுள் சொல்வது. அந்த வகையில் ஏசாயாவின் மனைவி ஆன்மீகத்தில் சிறந்து விளங்கியிருக்கிறார் என்பது நமக்குத் தெரியவருகிறது. ஏசுவின் பிறப்பை முன்மொழிந்த ஏசாயாவின் வாக்கு பொய்யாக வாய்ப்பு இல்லை.

குடும்ப வாழ்க்கையின் பார்வையில் ஏசாயாவின் மனைவி குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பெண்ணாகவே இருந்திருக்கிறாள். அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஷீர் ஜாஷப் மூத்தவன். ஏசாயா 7:3 ல் இவன் குறிப்பிடப்பட்டுள்ளான். இளைய மகனுடைய பெயரைச் சொல்வது கஷ்டம் மஹர் ஷலால் ஹாஸ் பாஸ் எனும் பெயர் ஏசாயா 8:3 ல்  வருகிறது.

இதன் அர்த்தம் கொஞ்சம் வியப்பூட்டுகிறது. ஒரு பெயர் மீட்பர் வருவார் என்கிறது. இன்னொரு பெயர் “விரைவிலேயே அழிவு வரும்” என்கிறது. இஸ்ரேயலர்களுக்கு அசிரியாவிலிருந்து வரும் அழிவை ஒரு பெயர் உணர்த்துகிறது. இயேசுவின் வருகையை இன்னொரு பெயர் முன்மொழிகிறது. ஏசாயா கிறிஸ்துவின் வருகையை முன்னுரைத்தார். அவருடைய மனைவியோ பிள்ளைகள் மூலமாக மீட்பின் செய்தியை உரைக்கும் தீர்க்கத் தரிசியாகிறாள்.

கிமு 765 தான் ஏசாயா வாழ்ந்த காலம் என வரலாறு கூறுகிறது. அந்தக் காலகட்டத்தில் தீர்க்கத் தரிசியாக ஒரு பெண் இருந்தார் என்பது இன்றைய காலத்தில் நமக்கு ஊக்கமூட்டும் செய்தியாகவே இருக்கிறது.

கடவுளோடு அதிக ஆழமான பிணைப்பு கொண்டிருக்கவும். தயக்கம் இல்லாமல் உண்மையைப் பேசக்கூடிய வல்லமை கொண்டிருக்கவும் ஏசாயாவின் மனைவி நம்மை ஊக்கமூட்டுகிறார். ஆவியிலும் உண்மையிலும் பேசக்கூடிய வல்லமை அவருக்கு இருந்தது. அவரை முன்னுதாரணமாகக் கொள்ளும் நமக்கும் அந்த துணிச்சல் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

ஏன் எசாயாவின் மனைவி சிறப்புக் கவனிப்புப் பெறுகிறார் ?  விவிலியம் எத்தனையோ ஆண் தீர்க்கத் தரிசிகளைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் அது ஒரே ஒரு தீர்க்கத் தரிசியின் மனைவியைப் பற்றி மட்டுமே பேசுகிறது ! அது ஏசாயாவின் மனைவி ! வியப்பான விஷயம் இல்லையா ? அவர் ஏன் பேசப்படுகிறார் ?

எல்லா தீர்க்கத் தரிசிகளும் கல்யாணம் செய்திருப்பார்கள். அல்லது பெரும்பாலானவர்கள் திருமணம் செய்திருப்பார்கள். ஆனால் ஒரே ஒரு பெண் மட்டுமே குறிப்பிடப்படுகிறாள். ஏன் ? ஏனென்றால் அவர், தானும் ஒரு தீர்க்கத்தரிசியாக விளங்குகிறார். உண்மையை பேசுகிறார். ஆவியிலும், உண்மையிலும் கனி தருகிறார். குடும்ப பொறுப்புகளிலும் தன்னை அர்ப்பணிக்கிறார்.

நாமும் குடும்பப் பொறுப்புகள் நமது தோளில் ஏறி அமர்ந்தாலும், இறைமகன் இயேசுவுக்குச் சான்று பகரும் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே எசாயாவின் மனைவியின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடமாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *