டிஜிடல் வணக்கம்

Image result for in bed phone

அதிகாலையில் எழுந்ததும்
பைபிள் வாசிப்பது
என்
அப்பாவின் பழக்கம்

சூரிய நம்ஸ்காரம் செய்வதோ
நமாஸ் செய்வதோ
உங்கள்
அப்பாவின் வழக்கமாய்
இருந்திருக்கலாம்.

அம்மாக்களுக்கு
இருள் விலகாத
கொல்லைப்புற தாழ்ப்பாழ் விலக்கி
சத்தமிடாத பாத்திரங்களோடு
சகவாசம் செய்வது மட்டுமே
கற்காலப் பழக்கம்.

எனக்கும்
உனக்கும்
இதில் எதுவும் பழக்கமில்லை.

விடிந்தும் விடியாமலும்
போர்வை விலக்கா
அதிகாலைகளில்,
வாட்ஸப்பின் நெற்றி தேய்த்து
தூக்கம் கலைக்கிறோம்.

நள்ளிரவின்
திடீர் விழிப்புகளிலும்
வெளிச்சம் துப்பும்
மொபைலின் முகத்தை
அனிச்சைச் செயலாய்
பார்த்துக் கொள்கிறோம்.

காலத்தின்
பாசி படிந்து கிடக்கும்
புனித நூல்களில்
லைக் பட்டன் வைக்காத குறைக்காய்
தன்னையே
நொந்து கொள்கிறார் கடவுள்.

*

One thought on “டிஜிடல் வணக்கம்

  1. திலிப் says:

    Fact. I thought you will write this bro.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *