கொடுமைக்காரன் : போல் போட் (Pol Pot )

Image result for Pol Pot

 

ஹீரோக்களை மட்டுமல்ல வில்லன்களையும் வரலாறு மறக்காது என்பதன் உதாரணம் போல் போட். 1928 ஆண்டு மேய் மாதம் கம்போடியத் தலைநகர் ப்னம் பா வுக்கு 140 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிராமத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே, புத்தமதமும், மேலை நாட்டுக் கலாச்சாரங்களும், கம்யூனிசமும் அவருக்கு அறிமுகமானது.

1949ல் பாரீசிற்குப் படிக்கச் சென்றார். அங்கே அவர் கற்ற கம்யூனிசக் கொள்கைகள் அவரை அரசியலுக்குள் தீவிரமாய் இழுத்தது. 1953ல் கம்போடியா பிரஞ்ச் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டபோது கம்போடிய மன்னன் நோரோடோம் சிகானக் பதினாறு ஆண்டு கால ஆட்சித் திட்டத்தை வெளியிட்டார். ஆனால் அதற்குள் 1963ல் வியட்னாம் போர் வந்து விட்டது. கூடவே மன்னனுக்கு எதிரான கிளர்ச்சிகளும் நாட்டில் வெடித்துச் சிதறின.

போல் போட் 1953ல் கம்பூச்சியன் மக்கள் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அந்த இயக்கத்தை 1960ல் கம்பூசியா தொழிலாளர் இயக்கமாய் மாற்றினார். 1963ல் அதன் சர்வ வல்லமை பொருந்திய தலைவராகவும் ஆனார். அதுதான் பின்னர் கம்பூசியன் கம்யூனிச இயக்கமாக மாறியது.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா கம்போடியாவின் மீது மறைமுகத் தாக்குதல் நடத்தியது.  கம்போடியாவின் எதிரி நாடுகளுக்கு பல இலட்சம் டன் வெடி மருந்துகளையும், ஆயிரக்கணக்கான வீரர்களையும் வஞ்சகமாய் வழங்கி சுமார் ஆறு இலட்சம் கம்போடியர்களைக் கொன்று குவித்தது.  ஆனால் சீனா கை கொடுக்க சிறு கொரில்லாத் தாக்குதல் கும்பலாக இருந்த போல் போட் குழுவினர் சட்டென இலட்சம் வீரர்களுடன் வளர்ந்தனர். 1973ல் வெற்றி பெற ஆரம்பித்த கம்யூனிச உள்நாட்டுப் போர் 1975ல் கம்போடியாவை போல் போட்டின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

அப்போது ஆரம்பித்தது கம்போடியர்களின் கஷ்ட காலம். போல் போட் – “இயர் சீரோ” எனும் முழக்கத்தை ஆரம்பித்தார். இந்த ஒரு ஆண்டிலேயே கம்போடியாவைத் தூய்மைப்படுத்துவேன் என்பது தான் அந்த முழக்கம். தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பத்திரிகைத் துறைகள் என எல்லாம் இவருடைய கட்டுக்குள் வந்தன. சகட்டு மேனிக்கு மக்களைக் கொல்லும் படலம் ஆரம்பமானது. முந்தைய அரசு தொடர்பான பணியில் இருந்த அனைவருமே ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.

நாட்டிலுள்ள மொத்த மக்களும் வெளியேற்றப்பட்டனர். விவசாய நிலங்களுக்குச் செல்லுங்கள் என அறைகூவல் விடுக்கப்பட்டது. உண்மையில் அவை கொலைகார பூமியானது. சுமார் பதினைந்து இலட்சம் மக்கள் பசியினாலும், நோயினாலும் செத்துப் போனார்கள்.

அத்துடன் நிறுத்தவில்லை. எதிரிகளை அழிக்கிறேன் பேர்வழி என இவர் ஆரம்பித்த S- 21 எனும் சித்திரவதைக் கூடம் படு பயங்கரமானது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாகுபாடின்றி சுமார் 20000 பேரை சித்திரவதை செய்து கொலை செய்தது இந்த சித்திரவதைக் கூடம். இதற்கு நாடு முழுவதும் கிளைகள் வேறு !

எதிரிகளாய் இருந்தவர்கள் பெரும்பாலும் தன் இன கம்போடிய மக்கள் என்பது தான் இதில் திடுக்கிடும் உண்மை. அவர்களுடைய வாயில் மலம் திணித்து தின்ன வைப்பது, மின்சாரக் கம்பிகளை உடலில் சொருகுவது, எலக்டிக் ஷாக் கொடுப்பது, ஆணிகளைக் கொண்டு அறைவது, தலைகீழாகத் தொங்கவிடுவது,  நகக்கண்ணில் ஊசி ஏற்றுவது, நகங்களை பிடுங்குவது, தண்ணீரில் மூழ்கடிப்பது, கோழிகளைப் போல வரிசையாய் மக்களின் கழுத்தை அறுத்து தண்ணீரில் போடுவது. என்பதெல்லாம் இவரது சித்திரவதைக் கூடத்தின் கொடுமைக்கான சில சாம்பிள்கள்.

குழந்தைகளுக்கு எதிரான இவரது கொடுமைகள் அதிர வைக்கின்றன. இனிப்பு வழங்க வேண்டிய குழந்தைகள் தினத்தில், குழந்தைகளை வரிசையாய் நிற்கவைத்து சித்திரவதை செய்தார் போல் போட். துடிக்கத் துடிக்க, கதறக் கதற பெற்றோர் முன்னிலையிலேயே அவர்களைக் குவியல் குவியலாக கொன்று குவித்தான்.

இந்த சித்திரவதைக் கூடத்திலிருந்து தப்பிய வான் நாத் என்பவர் சமீபத்தில் தான் தப்பிய திகில் கதையை உலகிற்கு வெளியிட்டார். மனித பிணங்களையும், புழு பூச்சிகளையும் தின்று அவர் உயிர் தப்பிய கதை கல்நெஞ்சையும் உருக்குகிறது.

இப்படி கொடுமையின் உச்சமாய் இருந்த போல் போட் 1998ல் உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *