போர்க்கைதிகளின் பரிதாப நிலை

Image result for war crimes

 

போரில் பிடிபடுபவர்களின் நிலமை அதோ கதி தான் என்கிறது வரலாறு. மாட்டும் முன் உயிர் போய்விட்டால் அது போன ஜென்மத்தில் செய்த புண்ணியம். இல்லாவிட்டால் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் குற்றுயிரும் குலை உயிருமாக துடி துடிக்க வேண்டியது தான்.  சில திடுக்கிடும் கதைகள் இங்கே…நமக்கெல்லாம் தெரிந்த ஒரு போர்க்குற்றத்தை நான் தவிர்த்திருக்கிறேன். நடுங்கும் விரல்களை நிறுத்த முடியவில்லை.

ஜெர்மன் நாசி

போர்க்கைதிகளின் மீது ஜெர்மன் நாசிகள் சகட்டு மேனிக்கு சோதனைகள் செய்தார்கள். இரண்டாம் உலகப் போர் காலத்தில் பிடிக்கப்பட்ட வீரர்களெல்லாம் இவர்கள் பார்வையில் சோதனைச் சாலை எலிகள். இந்த சோதனைகளின்  முதுகெலும்பாக இருந்தவர் டாக்டர் எட்வர்ட் விர்த்ஸ். ஆயிரத்து ஐநூறு இரட்டையர்களைப் பிடித்து அவர்களிடம் ஒரு சோதனை நடத்தினார்கள். எப்படி ? ஒருவருடைய கண்ணில் வேதியல் பொருட்களை ஊசியால் குத்தி இறக்கி மற்றவருக்கு ஏதேனும் நடக்கிறதா என்பதைப் பார்ப்பது. கல்நெஞ்சையும் கரைய வைக்கும் குற்றங்கள் அத்துடன் நிற்கவில்லை.

போர்க் காயம் போல செயற்கைக் காயத்தை இந்த கைதிகளுக்கு உருவாக்கி  எவ்வளவு நாள் தாக்குப் பிடிப்பார்கள் என்பதைப் பார்ப்பது ஒரு சோதனை. வேறு வேறு ஆயுதங்களால் காயங்கள் உண்டாக்கி அதற்கு புதிய புதிய மருந்துகள் கொடுத்து சோதிப்பது இன்னொன்று. இப்படி அவர்கள் பண்ணிய அட்டகாசங்கள் கணக்கில்லாதவை !

யூனிட் 731

இம்பீரியல் ஜப்பான் இராணுவம் வைத்திருந்த ஆராய்ச்சிக் கூடம் தான் யூனிட் 731. சோதனைக்கான ஆட்கள்  1937 முதல் 45 வரை நடந்த ஜப்பான் சினோ யுத்தத்தில் பிடிபட்ட வீரர்கள். இவர்கள் நடத்திய போர்க்குற்றங்களின் வகைகள் உலகையே திடுக்கிட வைத்தன.  கைதிகளின் கையை வெட்டி காலுடன் வைத்துத் தைப்பது. பின் அது என்ன ஆகிறது என்பதை கவனிப்பது. மக்களுக்கு பயங்கர உயிர் கொல்லி நோயைச் செலுத்தி சோதிப்பது. நோய்க்கான மருந்து ஏதேனும் கண்டுபிடித்து அதை செலுத்திப் பார்ப்பது, தீயில் கைதிகளைப் போட்டு எவ்வளவு நேரம் தாக்குப் பிடிப்பார்கள் என பார்ப்பது என பதறடிக்கின்றன சோதனைகள். இவை சோதனைகளா சித்திரவதைகளா ? இங்கு வந்தவர்களில் 95 சதவீதம் பேரும் இறந்து போனார்கள் என்பது துயர வரலாறு.

சோதனைக் கூடம் 1 & 20

சோவியத் வைத்திருந்த திகில் சமாச்சாரம் விஷ சோதனைச் சாலை. இங்கே கைதிகளுக்கு விஷங்கள் கொடுக்கப்படும். வித விதமான விஷங்கள். அவர்களை அறியாமலேயே உணவில் கலந்து விடுவார்கள். கைதிகள் விஷத்தைச் சாப்பிட்டு அப்படியே சோர்ந்து மயங்கி விழுந்து இறந்து விடுவார்கள். பின் அவர்களை போஸ்ட் மார்ட்டம் செய்து விஷத்தின் தன்மை உடலில் இருக்கிறதா என்பதைப் பார்ப்பார்கள். என்னதான் போஸ்ட்மார்ட்டம் செய்தாலும் கண்டு பிடிக்க முடியாத ஒரு விஷம் தயாரிப்பது தான் அவர்களுடைய எய்ம்!  அந்த விஷத்துக்கு நிறம், மணம் சுவை எதுவும் இருக்கக் கூடாது. அதற்காக அவர்கள் கொன்று குவித்த கைதிகளின் நிலையை நினைத்தால் உள்ளுக்குள் திகில் பரவுகிறது. கொல்வதில் எந்தப் பாகுபாடும் காட்டாமல் பல வயதினர், இருபாலினர் என கலந்து கட்டி கொன்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *