உலகின் மிகச் சிறிய போர்

 

Image result for Anglo-Zanzibar

உலக வரலாற்றிலேயே மிகச் சிறிய போர் 1896ல் நடந்த ஆங்கிலோ ஸான்ஸிபர் (Anglo-Zanzibar) போர் தான். யூ.கேவுக்கும் ஸான்சிலருக்கும் இடையே நடந்த இந்தப் போர் ஜஸ்ட் 38 நிமிடங்களில் கதம் கதம் !

இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு தான் இந்த ஸான்ஸிபர். ஒரு காலத்தில் ஓமன் நாட்டு சுல்தான்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் ஓமனிடமிருந்து ஓடி சுதந்திர நாடு என பிரகடனப்படுத்திக் கொண்டது. “ஆமா, ஆமா நீ தனி நாடு தான் ஜமாய் “ என பிரிட்டன் சைடு சப்போர்ட் வழங்கியது.

சப்போர்ட் பண்ணினவன் சும்மா இருப்பானா, ஸான்ஸிபரில் யார் சுல்தானாக வேண்டும் என்பதையெல்லாம் நிர்ணயிக்க ஆரம்பித்தான். ரொம்ப காலம் அது சிக்கல் இல்லாமல் தான் போய்க்கொண்டிருந்தது. 1896 ஆகஸ்ட் 25ம் தியதி அங்குள்ள சுல்தான் ஹமாது பின் துவாயினி திடீரென கொல்லப்பட்டார். அண்ணன் காலியாயிட்டான் இனி திண்ணை எனக்குத் தான் என சுல்தான் காலிட் பின் பார்காஷ் தனக்குத் தானே முடி சூட்டிக் கொண்டான். இவன் தான் துவாயினியைப் போட்டுத் தள்ளியது என்று நம்புபவர்களும் உண்டு.

பிரிட்டன் கடுப்பானது. தன்னிடம் கேட்காமல் இவன் எப்படி சுல்தானாகலாம் என படபடத்தது. காரணம் இவனை விட பெட்டர் சுல்தான் பொம்மை ஒன்று அவர்களுடைய கையில் இருந்தது. அதன் பெயர் சுல்தான் ஹமூத் பின் முஹமது. அந்தப் பாவையை தலைமையில் வைத்தால் தான் பொம்மலாட்டம் ஜெக ஜோதியாய் நடக்கும் என பிரிட்டன் தலையைச் சொறிந்தது. பார்காஷ் பணியவில்லை. உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ, என் நாட்டை யார் ஆள வேண்டும் என நாங்கள் தீர்மானிக்கிறோம் என்றார்.

பிரிட்டனுக்கு சுர் என கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “ஒழுங்காக கிளம்புகிறாயா இல்லை உன்னைக் கிளப்பவா” என கடைசி எச்சரிக்கை விட்டனர். “நீ படித்த வித்தையைப் பார் மகனே..” என இவரும் பதிலுக்குப் பதில் குரல் கொடுக்க விபரீதமாகிவிட்டது நிலமை.

ஆஜானுபாகுவான பிரிட்டன் இரண்டு ஏவுகணைக் கப்பல்கள், இரண்டு போர் கப்பல்கள், 150 கடல் படை என குவித்தது. கப்பல்கள் கடலில் நின்று கொண்டு அரண்மனையைக் குறிவைத்தன. சுல்தானும் தன் பங்குக்கு வீரர்களையும், அடிமைகளையும், பொதுமக்களையும் போருக்குத் தயாராக்கினார்.

ஆகஸ்ட் 27ம் தியதி காலை 9 மணிக்கு திடீரென குண்டு மழை பொழிய ஆரம்பித்தது பிரிட்டன். ஸான்ஸிபர் எதிர் தாக்குதல் நடத்திப் பார்த்தது. ஆனால் அது எலிபெண்ட் க்கு எதிராக எலி நடத்திய யுத்தம் போல ஆகிப் போனது. சட்டுபுட்டென 38 நிமிடங்களில் அரண்மனையைக் காலி செய்து விட்டு போரை முடித்து விட்டது பிரிட்டன்.  சுல்தான் பர்காஷ் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடியது மிச்ச கதை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *