கண்ணி வெடி வெச்சிருக்கேன்…

Image result for land mines

எதிரிகள் நுழைவார்கள் என சந்தேகிக்கும் இடங்களிலெல்லாம் கண்ணி வெடிகள் புதைத்து வைப்பது போர்கால வழக்கம். விஷயம் தெரியாமல் வருபவர்கள் வெடியில் மிதித்தால் நொடியில் மரணம். ஆனால் என்ன, போர்கள் முடிந்தபின் யார் எங்கே கண்ணி வெடி வைத்தது என்பதே தெரியாது. இதனால் சும்மா கிழங்கு பிடுங்க போகும் மக்களைக் கூட கண்ணி வெடி காலி செய்து விடும். வைத்த வெடிகளையெல்லாம் அப்படியே திரும்ப எடுப்பது என்பது சாத்தியமில்லாத சங்கதி. “கடைசியில் வேலில போறதை எடுத்து…” கணக்கா உள்ளுக்குள்ளே குடைச்சல் கொடுக்கும் விஷயமாகி விடும். அப்படி கண்ணி வெடியில் சிக்கித் தவிக்கும் நாடுகள் இவை.

எகிப்து !

கண்ணி வெடியில் ரொம்பவே கதிகலங்கிப் போயிருக்கும் நாடு எகிப்து. சுமார் 2 கோடியே முப்பது இலட்சம் கண்ணி வெடிகள் நாடு முழுக்க இருக்கிறதாம். 1956, 1967 மற்றும் 1973 களில் நடந்த எகிப்து இஸ்ரேல் போர்கள் தான் நாட்டை இப்படி ஒரு சிக்கலுக்குள் தள்ளி விட்டன. இவை எதிரி நாட்டு டாங்கிகள் முன்னேறி வந்தால் சின்னா பின்னமாக வேண்டும் என புதைக்கப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை இப்போது காலாவதியாகிவிட்டன. ஆனாலும் சில அவ்வப்போது வெடித்து மக்களைக் கொன்று கொண்டிருப்பது தான் வேதனை. கண்ணி வெடிகளை அப்புறப்படுத்த பதினைந்து வருடம் கடுமையாகப் போராடியது எகிப்து. கடைசியில் எகிப்தின் மேற்குப் பாலை நிலப் பகுதிகளிலிருந்து எழுபது இலட்சம் கண்ணி வெடிகளையும், சீனாய் பாலைவனப் பகுதியிலிருந்து முப்பது இலட்சம் கண்ணி வெடிகளையும் கண்டெடுத்தனர். எங்கெங்கு தொட்டாலும் கண்ணி வெடியாய் காட்சியளிப்பதால் இதைச் செல்லமாக(!) சாத்தானின் தோட்டம் என்கின்றனர்.

ஈரான்

தென்மேற்கு ஈரான் கண்ணி வெடிகளால் கடத்தப்பட்டிருக்கிறது. ஈரானுக்கும் ஈராக்கும் இடையே உள்ள ஜென்ம விரோதம் தான் இந்தக் கண்ணி வெடி விதைப்புக்குக் காரணம். அதிலும் 1980களில் ஈரான் அரசு புதைத்து வைத்த கண்ணி வெடிகளின் எண்ணிக்கை ஒருகோடியே அறுபது இலட்சம். ஈரான் ஈராக் எல்லையில் சுமார் 42 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் இவை புதைக்கப்பட்டுள்ள. இந்த கண்ணி வெடிகளினால் அந்த பிரதேசமே யூஸ் லெஸ் நிலமாகியிருக்கிறது. விவசாயம் செய்ய முடியாது, ஆலைகள் தொடங்க முடியாது, ஆய்வுகள் செய்ய முடியாது என மக்கள் திகைக்கின்றனர்.

அங்கோலா

அங்கோலாவில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகள் மிரட்டுகின்றன. ஒரு ஆளுக்கு இரண்டு கண்ணி வெடி எனும் விகிதத்தில் அங்கே கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்றனவாம். இதனால் ஆப்பிரிக்க நாடான அங்கோலா அல்லோல கல்லோலப் படுகிறது. விவசாயம் செய்ய நிலத்தைத் தோண்டினால் வெடிக்கிறது, சாலை வெட்டினால் வெடிக்கிறது, அவசரத்துக்கு ஓரமாய் ஒதுங்கினால் கூட வெடிக்கிறதாம். அங்கோலாவில் இப்படி வெடிக்கு மடிந்தவர்கள் சுமார் 70000 என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை. ஒரு கோடி முதல் இரண்டு கோடி வரை கண்ணி வெடிகள் நாட்டில் மறைந்து கிடக்கின்றன. இந்த சிக்கலில் இருந்து எப்போது மீள்வது என முழி பிதுங்க யோசித்துக் களைக்கிறது அரசு.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் சராசரியாக தினமும் பத்து முதல் பன்னிரண்டு பேர் கண்ணி வெடி வெடித்து மாண்டு போகிறார்கள். எக்கச் சக்க சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தானில் கடவுள் போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது கண்ணி வெடி. எண்ணிக்கையில் சுமார் ஒரு கோடி ! 1979க்கும் 1992க்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவை தான் பெரும்பாலானவை. ஆப்கானிஸ்தானில் ஏதேனும் மீட்புப் பணிகளோ, கட்டமைப்புப் பணிகளோ நடக்க வேண்டுமென்றால் திக் திக் என்று தான் நடக்க வேண்டிய சூழல்.

ஈராக்

ஈராக்கிலும் சுமார் ஒரு கோடி கண்ணி வெடிகள் இருக்கின்றன. ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் தான் பெரும்பாலானவை இருக்கின்றன. எதிரிக்காக வைத்த கண்ணி வெடியில் வைத்தவர்களே சிக்கிக் கொள்வது தான் இதில் சோகம். ஈரானில் சுமார் ஒன்றரை இலட்சம் குடும்பங்கள் இந்த கண்ணி வெடிகளினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றனர். நாட்டில் சுமார் 3500 இடங்கள் கண்ணி வெடிகளினால் நிரம்பியிருப்பதாக ஈராக் சொல்கிறது. இந்த இடங்களெல்லாம் மர்மப் பிரதேசமாய் திகில் காற்றுடன் உறைந்து கிடக்கிறது.

ம்ம்… இப்பல்லாம் வானத்தில வந்து தானே குண்டு போடறாங்க, பூமியில கண்ணி வெடி வெச்சு என்னப்பா பிரயோசனம் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *