ஹிரோஷிமா : குண்டு விழுந்ததும்…. வெகுண்டு எழுந்ததும்… !

Image result for hiroshima peace park

 

அணுகுண்டு எனும் வார்த்தையைக் கேட்டாலே நினைவுக்குள் புரளும் இரண்டு வார்த்தைகள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி. உலகின் மாபெரும் துயரத் துளியாக அந்த நிகழ்வு வரலாற்றில் உறைகிறது. குண்டு போட்டால் கூட வெகுண்டு எழுவோம் என்பதற்கு அவற்றின் அதிரடி வளர்ச்சியே சான்றாய் இருக்கிறது.

ஹிரோஷிமா எதை வேண்டுமானாலும் மறக்கும் ஆனால் 1945, ஆகஸ்ட் 6ம் தியதியை மறக்கவே மறக்காது. உலகிலேயே முதல் முறையாக என்பது ரசிக்கவும் முடியவில்லை, சகிக்கவும் முடியவில்லை. முதல் அணுகுண்டு அந்த நாட்டின் தலையில் போடப்பட்டது.

சுமார் ஒன்றரை இலட்சம் மக்களைப் பலிவாங்கிய அந்த அணுகுண்டு அமெரிக்க வரலாற்றிலும் மாறாக் கறையாகவே படிந்திருக்கிறது. 69 விழுக்காடு நகரமும் அழிந்து விட்டது. நாட்டிலுள்ள பாலங்கள், சாலைகள் எல்லாம் காலி. மிச்சம் இருந்த மக்களுக்கும் பல்வேறு நோய்கள், ஊனம் இத்யாதி இத்யாதி. இனிமேல் ஹிரோஷிமா அவ்வளவு தான் என நினைத்தார்கள். நடந்தது வேறு.

“விழுந்த இடத்தில் காலொடிந்து கிடப்பதில்லை நதி. அருவியின் அடிவாரம் தான் அதன் ஆக்ரோஷத்தின் ஆரம்பம்” என்பது போல ஹிரோஷிமா எழுந்தது. விழுவது மனித இயல்பு, எழுவது தான் மனித மாண்பு என வெகுண்டது. இன்று அணுகுண்டு விழுந்ததற்கான எந்த ஒரு தடயமும் இல்லாமல் கம்பீரமாய் நிற்கிறது.

வரலாற்றின் குருதிப் பதிவை நினைவூட்ட ஹிரோஷிமாவில் அமைக்கப்பட்டுள்ளது “ஹிரோஷிமா அமைதிப் பூங்கா” . அணுகுண்டு விழுந்து காலியான நிலப்பரப்பில் இது கட்டப்பட்டுள்ளது. குறைந்தது பத்து இலட்சம் மக்கள் இந்த இடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் வருகிறார்கள். பூங் கொத்துகள் வைக்கிறார்கள், உலக அமைதி விரும்புகிறார்கள். பூங்காவில் பிரமிப்பூட்டும் நினைவகங்கள், அருங்காட்சியகங்கள், மேடைகள், விளக்கங்கள், அரங்குகள் என நிறைய சமாச்சாரங்கள்.

அணுகுண்டு விழுந்தபோது உடைந்து போன ஒரு கட்டிடத்தை அந்தப் பூங்காவில் அப்படியே பாதுகாக்கிறார்கள். இது இந்தப் பூங்காவின் சிறப்பு அம்சம்.

“ஹிரோஷிமாவின் துயரங்களை நினைவுகூர்வது மட்டுமல்ல, அணுகுண்டின் கொடுமையை உலகிற்கு உரைப்பதும், உலக சமாதான விதைகளைத் தூவுவதும் “ இந்தப் பூங்காவின் நோக்கம் என்கின்றனர்.

உண்மை !

இந்த இடம், உலகிற்குப் பாடம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *