ஏன் தூங்க வேண்டும் ?

Image result for sleeping

 

“நானெல்லாம் வெறும் மூணு அல்லது நாலு மணி நேரம் தான் தூங்குவேன். மற்றபடி முழுக்க முழுக்க வேலை தான்”

“இப்படி தூங்கி வழியும் நேரத்தில் எத்தனையோ உருப்படியான வேலை பார்க்கலாம்”

இப்படியெல்லாம் உங்களைச் சுற்றி, தூக்கத்தைப் பற்றி உளறிக் கொண்டிருப்பவர்களை அருகில் அழைத்து “ஏன் தூங்க வேண்டும் தெரியுமா?” என கேளுங்கள். அவர்களிடம் தூக்கத்தின் மகத்துவத்தை விளக்குங்கள்.

ஏழு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவதே சரியான அளவு எனத் தெரிவிக்கும் அமெரிக்காவின் மருத்துவர் சாரா பல்டாஃப், ஏன் சரியான தூக்கம் வேண்டும் என்பதற்கும் தெளிவான பத்து காரணங்கள் தருகிறார்.

  1. சரியா தூங்காவிட்டால் உடல் பருமனாகி, குண்டாகி விடும். பலருக்கும் இது தெரிவதில்லை. உண்மையில் சரியான தூக்கமில்லாவிடில் உடலிலுள்ள பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் இயல்பு நிலையை விட்டு விலகி விடுகின்றன. இது உடலை எடை அதிகரிக்கச் செய்து விடுகிறது.
  2. சரியான அளவு தூக்கம் இல்லாவிட்டால் நமது உணவுப் பழக்க வழக்கம் கூட மாறிவிடுகிறது. உடல் அதிக கொழுப்புச் சத்துள்ள பொருட்களை தேட ஆரம்பிக்கும்.அது உடலுக்கு பெரும் பாதகமாய் அமையும் என்பதைச் சொல்லத் தேவையில்லை
  3. சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது உடலில் சருக்கரை (நீரிழிவு) நோய் வரும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
  4. இதய நோய் !  சரியான அளவு தூக்கமில்லையேல் உங்களுக்கு இதய தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு 45 விழுக்காடு அதிகரிக்கிறது.
  5. குருதி அழுத்தம் அதிகரிக்கிறது. தூக்கமற்ற இரவு, உடலை பலவீனப்படுத்துவதுடன், மறு நாள் அதிகப்படியான உடல் மற்றும் மன அழுத்தத்தைத் தந்து கூடவே குருதி அழுத்தத்தையும் தந்து விடுகிறது.
  6. கவனச் சிதைவுக்கு தூக்கமின்மை காரணமாகி விடுகிறது. மூன்று மணி நேரம் தூங்கி வேலை செய்வதை விட சரியான அளவு தூங்கி வேலை செய்வதே தெளிவான வேலைக்கு உத்தரவாதம் தரும்.
  7. சரியான தூக்கமின்மை உடலை தடுமாற வைக்கும். குறிப்பாக  வயதானவர்கள் சரியான தூக்கம் பெறவில்லையேல் தடுமாறி விழுந்து உடலை காயப்படுத்திவிடக் கூடும்.
  8. மன அழுத்தத்துக்கு தூக்கமின்மை ஒரு காரணியாகிவிடுகிறது. மூளைக்குக் கிடைக்க வேண்டிய சரியான ஓய்வு கிடைக்காததே இதன் காரணம்.
  9. குழந்தைகளுக்கு பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். ஒழுக்கம் சார்ந்த சிக்கல்களும் குழந்தைகளுக்கு வர சரியான தூக்கமின்மை காரணமாகக் கூடும்.
  10. மரணம் விரைவில் வந்து கதவைத் தட்ட சரியான தூக்கமின்மை காரணமாகிவிடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே தூக்கம் என்பது நேரத்தை வீணடிக்கும் ஒரு செயலல்ல, நாளைய தினத்தை பயனுள்ளதாக்க உடல் கொள்ளும் ஓய்வு என்பதை உணர்ந்து செயல்படுதலே சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *