உடல் எடையும், புற்றுநோயும்

Image result for obesity

அளவுக்கு அதிகமான எடையுடன் இருப்பது எப்போதுமே ஆபத்தானதே. இப்படி அதிக எடையுடன் இருக்கும் பெண்களுக்கு கருக்குழாய்களில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

அதிலும் மாதவிலக்கு நின்று போன, நடுவயதைத் தாண்டிய பெண்கள் அதிக எடையுடன் இருந்தால் அவர்களுக்கு இந்த புற்று நோய் வரும் வாய்ப்பு 80 விழுக்காடு அதிகம் என எச்சரிக்கிறது இந்த ஆராய்ச்சி.

அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் கழகம் சுமார் ஒரு இலட்சம் பெண்களை கடந்த பல வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியதன் விளைவாக இந்த முடிவை எட்டியிருக்கிறது.

அதிக எடையுடன் இருக்கும் போது இடுப்பைச் சுற்றிய பகுதிகளில் அதிக கொழுப்பு சேர்ந்து இந்த புற்று நோயை உருவாக்கி விடுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

உடல் எடைக்கும் புற்று நோய்க்குமிடையே மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த உண்மை பலருக்கும் தெரிவதில்லை. எனவே தான் அவர்கள் தங்கள் உடலைக் குறித்த கவலையற்று இருக்கின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள்.

Image result for obesity

எடை அதிகரித்தபின் அதைக் குறைப்பது என்பது மிக மிக கடினம். எனவே அடுத்த தலைமுறையினரையேனும் சரியான எடையுடையவர்களாக வளர்த்த வேண்டியது அவசியம். அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

தேவையற்ற சிப்ஸ், கோக், பீட்ஸா, பர்கர் போன்ற உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருட்களை அறவே ஒதுக்குவதும், ஆரோக்கியமான இயற்கை சார்ந்த உணவுப் பழக்கத்துக்கு மாறுவதும், ஓரளவுக்கேனும் உடற்பயிற்சியைச் செய்வதும், மனதை உற்சாகமாய் வைத்திருப்பதுமே உடல் எடையை கட்டுக் கோப்பாய் வைத்திருக்க உதவும்.

உடல் எடை அதிகரிப்பு என்பது நகைப்புக்குரியதல்ல, அது கவலைக்குரியது என்பதை அறிந்து செயல்படுவதே ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *