வான்கோ : ஒரு தூரிகையின் துயரம்

Image result for vangough

 

வான்கோ என்றால் யார் என்று ஓவிய உலகில் யாருமே கேட்க மாட்டார்கள். உலகத்தையே புரட்டிப் போட்ட வல்லமையுள்ள தூரிகை அவரிடம் இருந்தது. 1853 மார்ச் 30ம் தியதி பிறந்த இவர்தான் இன்றைக்கும் மாடர்ன் ஓவியங்களின் மன்னன். வாழ்ந்த காலத்தில் அப்படியொன்றும் பெரிய புகழைப் பெறவில்லை வான்கோ. ஆனால் மரணத்துக்குப் பிறகு அவருடைய ஓவியங்களெல்லாம் மில்லியன்களை வாங்கிக் குவித்தன. அவர் ஒரு மன நோயாளி என்பது தான் பலருக்கும் தெரியாத உண்மை.

குழப்பம், தனிமை, சைக்கோத்தனம் என அவருக்குள் ஓடிய உணர்ச்சிகள் எக்கச் சக்கம். அவர் தனது வாழ்நாளில் வரைந்து குவித்தது 1100 ஓவியங்கள் மற்றும் 900 பெயிண்டிங்ஸ். இவருடைய ஓவியங்களிலெல்லாம் அவரையும் அறியாமலேயே அவருடைய மனநோயும் பிரதிபலிக்குமாம். மைக்கேல் ஆஞ்சலோ தனது ஓவியங்களிலெல்லாம் ஒரு செய்தியை ரகசியக் குறியீடாய் எழுதி வைப்பாராம். அதுபோல வான்கோ பூடகமாய் வரையும் அவருடைய படங்களில் அவருடைய குணாதிசயங்கள் ஒளிந்திருக்கும் என்கின்றனர் ஓவிய ஆய்வாளர்கள்.

சிறு வயது முதலே அடிக்கடி தற்கொலை செய்ய வேண்டுமென ஆர்வம் குதிக்கும். தற்கொலைக்கு முயல்வார், ஆனால் அது தோல்வியில் முடியும். உடனே உட்கார்ந்து படம் வரைவார் !  ஒரு நல்ல பாதிரியாராக வேண்டுமென விரும்பினார், அதுவும் நடக்கவில்லை. வண்ணங்களோடும், சைக்கோ எண்ணங்களோடுமே வாழவேண்டியதாயிற்று.

அவரது மரணத்தை ஒட்டிய காலங்களில் மாபெரும் மன அழுத்தத்தி இருந்தார்.  அவரிடம் மிஞ்சியது தனிமையின் சோகமும், எரிச்சலும், மன உளைச்சலும் தான். இவரைப் பற்றி சர்வமும் அறிந்தவர் நண்பர் தியோ வான்கோ மட்டுமே. அவருக்கு எழுதும் கடிதங்களில் எதையும் மறைக்காமல் எழுதுவார் வான்கோ. அப்படிப் பகிர்ந்து கொண்ட கடிதங்கள் அவரது மன நோயை புட்டுப் புட்டு வைக்கின்றன. சின்ன வயதில் அமைதியாய், சதாகாலமும் சிந்தனையில் வான்கோ இருந்ததற்கு கற்பனையைத் தாண்டி மன நோயும் ஒரு முக்கியக் காரணம்.

வாழ்வின் கடைசி இரண்டு வருடங்களில் அவர் ரொம்பவே மாறிப்போனார். அவரால் அமைதியாய்ப் படம் வரையக் கூட முடியவில்லை. கிட்டத்தட்ட உள்ளுக்குள் ஒரு சைக்கோ நோயாளியாகவே ஆனார். 1888ம் ஆண்டு டிசம்பர் 24 ம் தேதி தன் நண்பரோடு சண்டை, கோபத்தில் இவர் பாட்டிலை எடுத்து வீச அவர் இவருடைய காதையே வெட்டி எடுத்தார். என்ன செய்கிறோம் என்பதே புரியாமல் குழம்பினார். தன்னால் படம் வரைய முடியவில்லையே எனும் கவலை அவரை அலைக்கழித்தது.

1890 ஜூலை 27. ஒரு துப்பாக்கியுடன் வயல் வெளியில் நடந்து கொண்டிருந்தார் வான்கோ. ஒரு இடத்தில் வந்ததும் நின்றார். தன் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் குறிபார்த்தார். எங்கே ? தனது நெஞ்சுக்கே ! சுட்டார். தற்கொலை செய்யவேண்டும் என பல முறை முயன்று தோற்றவர் இந்த முறை ஜெயித்தார். துப்பாக்கிக் குண்டு துளைத்த இரண்டு நாட்களுக்குப் பின் இறந்தார். இறக்கும் போது கூட அவருடைய உதடுகள் வலியையே உச்சரித்தன. உலகையே பிரமிக்க வைத்த அந்த ஓவியனின் கடைசி வார்த்தைகள் இவை தான்.

“சோகம் கடைசி வரை கூட வரும்”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *