சுயமாய் சிந்திக்கும் ரோபோ ! சாத்தியமாகிறான் எந்திரன் ?

 

சொன்ன வேலையைச் சமர்த்தாகச் செய்து முடிக்கும் வேலையைத் தான் ரோபோக்கள் செய்து வருகின்றன. உள்ளே இருக்கும் மென்பொருளில் என்ன கட்டளை எழுதப்பட்டிருக்கிறதோ அதையே தான் அவை பின்பற்றுகின்றன. “டிவியைப் போடு” என்று சொன்னால் டிவியை எடுத்துக் கீழே போடும் எந்திரன் ரஜினியைப் போல !

கொடுக்கப்பட்ட சூழல் மாறிப்போனால் ரோபோக்கள் செய்வதறியாமல் குழம்பிப் போகும். அப்படிக் குழம்பிப் போகாமல் இருக்க வேண்டுமானால் ரோபோக்கள் கொஞ்சம் “சுய புத்தி” உடையவர்களாக இருக்க வேண்டும். அந்த தொழில் நுட்பத்துக்காகத் தான் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அதில் ஒரு முக்கிய முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள்.

டோக்கியோவில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய ரோபோ ஒன்று, தனது அனுபவங்களிலிருந்து பாடத்தைக் கற்றுக் கொள்கிறது. மாறிவரும் சூழலை கொஞ்சம் அலசுகிறது. பின் முடிவெடுக்கிறது. SOINN எனப்படும் செல்ஃப் ஆர்கனைஸிங் இன்ங்கிரிமெண்டல் நியூரல் நெட்வர்க் எனும் புதிய தொழில்நுட்பம் இந்த நவீன  எந்திரனுக்காய் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

தண்ணீர் கேட்டால் கப்பையும், டம்ளரையும் எடுத்து லாவகமாய் ஊற்றித் தருகிறது. அது ஏற்கனவே புகுத்தப்பட்ட கட்டளை. “கொஞ்சம் சில் பண்ணிக் குடு” என்று கேட்டால், கையிலிருக்கும் டம்ளரை வைத்து விட்டு, யோசிக்கிறது. பின் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து தண்ணீரில் போடுகிறது. இவையெல்லாம் சொல்லாத சங்கதிகள். தெரியாத விஷயங்களைத் தெரியாது என்கிறது சொல்லிக் கொடுத்தால் கற்றுக் கொள்கிறது. அப்படியே தனது இயந்திர மூளையில் அதை எழுதிக் கொள்கிறது.

மாறி வரும் யுகத்தில் இத்தகைய ரோபோக்களே ஆதிக்கம் செலுத்தும். இது ஒரு குழந்தை மாதிரி. தினமும் எதையேனும் கற்றுக் கொண்டே இருக்கிறது. தானாகவே அனுபவத்தையும், அறிவையும் அதிகரிக்கிறது. பின் தேவைப்படும் போது அந்த அனுபவங்களைப் பயன்படுத்தி வியக்க வைக்கும் என்கிறார் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் ஒசாமு கஸீக்வா.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வந்த டெர்மினேட்டர் எனும் திரைப்படத்தின் கற்பனை ரோபோவை இந்த புதிய ரோபோ நெருங்கி வருகிறது. அப்படியே கொஞ்சம் உணர்வுகளை ஊட்டி வளர்த்தால் நம்ம ஊர் எந்திரன் தயார்.

 

 

நீந்திக் கொண்டே படிக்கலாம் !

 

அடைமழை பொழியும் புல் வெளியில் ஹாயாக அமர்ந்து ஒரு புத்தகத்தைப் படிக்க விரும்புகிறீர்கள். நடக்குமா ? என்ன மடத்தனமான யோசனை என்று தானே நினைக்கிறீர்கள் ? ஆனால் தொழில்நுட்பமோ “முடியுமே” என்கிறது தனது புதிய அறிமுகத்தின் மூலம் !

நாவல்களையும், நூல்களையும் வாட்டர் புரூஃப் டைப்பில் உருவாக்கி சந்தைப்படுத்த இருக்கிறார்கள். இந்த நூலை நீங்கள் ஷவரில் குளித்துக் கொண்டோ, கடலில் நீச்சலடித்துக் கொண்டோ, நதியில் நனைந்து கொண்டோ படிக்கலாம். ஒன்றுமே ஆகாது !

ஒருபக்கத்தில் தொழில் நுட்பம் இ-ரீடர்களை இறக்குமதி செய்து நூல்களை மென்வடிவமாக்கி வினியோகித்துக் கொண்டிருக்கிறது. எனினும் கணிசமான மக்கள் இன்னும் புத்தகத்தைக் கையில் பிடித்துப் படிப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் நூல்களின் ஆயுளோ குறைந்து வருகிறது. இந்த புது வகை நூலோ 200 சதவீதம் அதிகம் உழைக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள். இது நனையாது, கிழியாது !

ஆலன் குக் எனும் எழுத்தாளருடைய “த கிரேட்டர் பேட்” எனும் நூல் தான் முதன் முதலாய் நனையாத எழுத்துகளோடு வலம் வரப் போகிறது. இது ஒரு பரபரப்பான ஆக்ஷன் திரில்லர் நாவல். இதனால் உலகெங்கும் புகழ் பெற்றிருக்கும் ஆலன் ரொம்பவே சிலிர்த்துப் போயிருக்கிறார்.

காகிதங்களின் மீது ஒரு வகையான மெழுகு மற்றும் பாலிமர் போர்வை போர்த்தும் டெக்னாலஜியே இது. இந்த தொழில் நுட்பம் ஆஸ்திரேலிய வங்கிகளில் முக்கியமான டாக்குமெண்ட்களைப் பாதுகாக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. முதன் முறையாக வணிக ரீதியான நூல்களுக்கு இந்தத் தொழில் நுட்பம் பயன்படுத்தப் படப் போகிறது.

கடற்கரை ஓரங்களிலும் ஹாயாகப் படுத்துக் கொண்டே புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு இந்தச் செய்தி  மகத்துவமானது.

இனிமேல் நீங்கள் புத்தகம் படித்துக் கொண்டிருக்கையில் சாரலடித்தாலோ, உங்கள் குழந்தை ஓடி வந்து காபியைக் கொட்டினாலோ  நீங்கள் எரிச்சலடையத் தேவையிருக்காது !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *