டாப் 5 ஹாலிவுட் சைக்கோ  மூவீஸ்

 

ஹாலிவுட்டில் சைக்கோப் படங்களுக்குப் பஞ்சமில்லை. காரணம் பெரும்பாலான சைக்கோக்கள் அமெரிக்காவில் தான் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மிரட்டிய ஹாலிவுட் திரைப்படங்களில் சில.

சைலன்ஸ் ஆஃப் த லேம்ப்ஸ் (Silence of the Lambs )

Image result for silence of the lambs

அந்தோணி ஹாப்கின்ஸ் சைக்கோ கொலையாளியாக பின்னிப் பெடலெடுத்த திரைப்படம் இது. மன நல மருத்துவராய் இருந்து சைக்கோ ஆனவர். மனிதர்களைக் கொன்று தின்னும் ஹானிபல் வகை வேறு ! அவருடைய பார்வையும் அசைவுகளும், முகபாவமும் நரம்புகளில் பயத்தை ஊற்றுவது சர்வ நிச்சயம். ஹாலிவுட்டின் சைக்கோப் படங்களை வரிசைப்படுத்தினால் இந்தப் படமும் நிச்சயம் அதில் இடம் பெறும். தாமஸ் ஹாரிஸ் என்பவரின் நாவலைத் தழுவி ஹாலிவுட் புகழ் ஜோனதன் டேம் இயக்கியிருந்தார். இந்தப் படம் எடுக்கச் செலவான தொகை 19 மில்லியன் டாலர்கள். அள்ளிக் குவித்ததோ 272 மில்லியன் டாலர்கள் !  தமிழில் இந்தப் படத்தின் காட்சிகளை ஆளாளுக்கு உருவி எடுத்துப் பயன்படுத்தினார்கள். ஐந்து ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இன்றும் மக்கள் தூக்கம் தொலைக்கின்றனர்.

சைக்கோ (Psycho )

Image result for Psycho

சைக்கோப் படங்களின் வரிசையில் சைக்கோ இல்லாமலா ! ஹாலிவுட்டை புரட்டிப் போட்ட திகில் பட இயக்குனர் ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் மாஸ்டர் பீஸ் இந்தப் படம் தான். இந்த படத்தில் வரும் குளியலறைக் கொலையை எப்படி ஹிட்ச்காக் எடுத்தார் என்பதை ஹாலிவுட் ஸ்டுடியோவில் ஒரு பெரிய நிகழ்ச்சியாகவே நடத்திக் காட்டுகிறார்கள். அமெரிக்கா போனால் தவற விடாமல் பாருங்கள் ! ரொம்பவே சுவாரஸ்யம் அது ! ராபர்ட் புளூத் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. நாவலை விட சூப்பராக படமாக்கிய மிகச் சில உதாரணங்களில் இதுவும் ஒன்று. 1960ம் ஆண்டு ஜஸ்ட் 806 ஆயிரம் டாலர்கள் செலவில் எடுத்த இந்த படம் 32 மில்லியன்களுக்கு மேல் சம்பாதித்துக் கொடுத்தது. அமெரிக்காவில் திரைப்படக் கல்லூரியில் இந்த படம் ஒரு பாடம் ! இந்தப் படத்தை பின்னர் ஆளாளுக்கு ரீ மேக், செகண்ட் பார்ட், டிவி சீரியல் என ஏதேதோ செய்து பார்த்தார்கள்.. ஊஹூம் எதுவும் தேறவில்லை. ஹிட்ச்காக் ஹிட்ச்காக் தான்பா என கடைசியில் விட்டு விட்டார்கள். சொல்ல மறந்துட்டேனே, தமிழில் “என் இனிய பொன் நிலாவே” என பாடல் பாடியது இதோட காப்பி தான்.

த குட் சன் ( The Good Son )

Image result for The Good Son

சைக்கோக் கொலையாளிகள் என்றாலே பெரியவர்கள் தான் எனும் கான்சப்டை உடைத்த படம். இதில் பன்னிரண்டு வயது சிறுவன் தான் சைக்கோ கொலையாளி. கபடமில்லாமல் சிரிக்கும் அவனுடைய புன்னகை படம் செல்லச் செல்ல திகிலூட்டும். அமைதியாக தனது குட்டிச் சகோதரனைக் கொன்று விடுகிறான். தனது சகோதரியைக் கொல்ல பல முறை முயல்கிறான். கடைசியில் தனது தாயையே மலையிலிருந்து தள்ளி விடுகிறான். அடேங்கப்பா.. என வியக்க வைக்கும் நடிப்பு சைக்கோ சிறுவனுக்கு.  கடைசியில் ஒரு மலை உச்சியில் அம்மா நிற்க அவருடைய இரண்டு கைகளிலும் இருவர் தொங்குகின்றனர். ஒரு கையில் தொங்குவது மகன். யாரையாவது ஒருவரைத் தான் காப்பாற்ற முடியும் எனும் சூழல். திருத்த முடியாத மகனை அங்கிருந்து கண்ணீரோடு கழற்றி விடுகிறாள் தாய். அட.. அந்தப் படத்துல  இப்படி ஒரு சீன் வந்துச்சே என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஜோசப் ரூபனின் இயக்கத்தில் வெளியாகி 60 மில்லியன்களை அள்ளிய படம் இது.

 

செவன் ( Seven )

Image result for Seven

ஒரு சைக்கோக் கொலையாளியின் படம் தான் இதுவும். ஆனால் இதில் கொலையாளி பாவிகளுக்குத் தண்டனை தருகிறாராம். உலகில் காமம், பொறாமை, பெருமை உட்பட ஏழு விதமான பாவங்கள் இருக்கின்றன. அவற்றை அழிப்பதே என் பிறவியின் நோக்கம் என்பதே சைக்கோவின் எண்ணம். அந்த ஏழு விதமான பாவங்களைச் செய்யும் ஏழுபேரை எப்படிக் கொல்கிறான் என்பது தான் கதை. சைக்கோ வில்லன் அலட்டிக்கொள்ளாமல்  சைலண்டாக திகில் ஏற்றுகிறார். மார்கன் பிரீமேன், பிராட்பிட், கெவின் ஸ்பேசி என பிரபலங்கள் பிரமாதப்படுத்திய படம் இது. டேவிட் பிஞ்சர் இயக்கிய இந்த படம் வசூலிலும் சூப்பர் டூப்பர் ஹிட். முப்பது மில்லியன் செலவு, 300 மில்லியன் வரவு என புரொடியூசர் மனதில் சைக்கோக்களுக்குக் கோயில் கட்டிக் கும்பிட வைத்த படம்.

அமெரிக்கன் சைக்கோ ( American Psycho )

Image result for American Psycho

பெயரைப் பார்த்தாலே தெரியுதுல்ல…இது ஒரு சைக்கோப் படம் தான். 2000ல் வெளியான இந்தப் படத்தைப் பார்த்தால் அந்த பாதிப்பு விலக கொஞ்ச நாள் ஆகும் ! இந்தப் படத்தின் காட்சிகள் பல வெல வெலக்க வைக்கின்றன. சைக்கோப் படத்தையே கொஞ்சம் நகைச்சுவை இழையோடவும் சொல்ல முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். பிரெட் ஈஸ்டென் எலிஸ் எழுதிய நாவலின் திரைப்பட வடிவம். இயக்கியிருப்பவர் மேரி ஹாரன். வெறும் ஏழு மில்லியன்கள் செலவு செய்து 34 மில்லியன் லாபம் பார்த்தார் தயாரிப்பாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *