டைம் மெஷின் சாத்தியமில்லை !

 

நீங்கள் ஹாலிவுட் பட பிரியரென்றால் டைம் டிராவல் பற்றி நல்ல பரிச்சயம் இருக்கும். கால வாகனத்தில் ஏறி பழைய காலத்துக்கோ புதிய காலத்துக்கோ பயணிக்கும் புனைக் கதைகள் தான் இந்த டைம் டிராவல் கதைகள். ஹாலிவுட்டில் படமான அறிவியல் புனைக் கதைகளில் கணிசமானவை இந்த வகைப் படங்களே. பேக் டு த ஃபியூச்சர் போன்ற உலகப் புகழ் படங்கள் பலவும் இதில் அடக்கம். இப்போது அந்த டிரென்ட் தமிழ்த்திரைப்படங்களிலும் புகுந்து கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருப்பதும் நாம் அறிந்ததே.

இந்த கால வாகனத்தை உருவாக்குவது நிஜத்தில் சாத்தியமா ? அப்படி சாத்தியமானால் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் போய் ஒரு அரசவையில் மன்னனோடு கைகுலுக்க முடியுமா ? என்பதெல்லாம் விஞ்ஞானிகளுடைய மிகப்பெரிய கேள்வியாய் இருந்தது. இதெல்லாம் சாத்தியமில்லை என பெரும்பாலானவர்கள் சொல்லி வந்த போதிலும் அறிவியல் ரீதியாக இதற்கு முன் நிரூபிக்கப் படவில்லை. இது சாத்தியமில்லை என இப்போது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

“எந்தப் பொருளுமே ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணிக்க முடியாது. அப்படியெனில் காலவாகனம் என்பது சாத்தியமே இல்லை” என்று அடித்துச் சொல்கிறது ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சி.

மின்காந்த விசைகளைக் கடத்துவது அடிப்படைத் துகளான ஃபோட்டான் ஆகும். இந்த ஃபோட்டோன் எனும் துகளின் அதிகபட்ச வேகம் ஒளியின் வேகமே என்பதை இப்போது நிரூபித்திருக்கிறார்கள். இதை முன்னின்று நடத்தியவர்  பேராசிரியர் ஷென்ங்வாங் டு என்பவர். ஃபோட்டோனின் வேகம் ஒளியின் வேகத்தை விட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்பதே பல விஞ்ஞானிகளின் முந்தைய கருத்தாக இருந்தது.

ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் எதுவும் செல்ல முடியாது என்பதை ஐன்ஸ்டீன் 1905ம் ஆண்டுகளிலேயே சொல்லி விட்டார். எனினும் எடையற்ற ஃபோட்டானின் பயணம் மட்டும் ஒரு சந்தேகக் குறியாகவே இருந்தது. இப்போது அதற்கும் விடை கிடைத்திருக்கிறது. “ஒரு செயல் அதன் துவக்கத்துக்கு முன்னால் நிகழமுடியாது” எனும் கோட்பாடும் இதன் மூலம் ஊர்ஜிதமாயிருக்கிறது.

அறிவியலைப் பொறுத்தவரை இந்த ஆராய்ச்சி முடிவு மிக முக்கியமானது. இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஹாலிவுட் ஜாம்பவான்கள் இன்னும் டைம் மிஷின் படங்களை எடுக்கத் தான் போகிறார்கள், அதை மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள் என்பது வேறு விஷயம்

2 thoughts on “டைம் மெஷின் சாத்தியமில்லை !

  1. திலிப் says:

    ஒன்றும் புரியவில்லை. Science weak. You also written stories on time machine and many people like that type of science fiction. But in dream we can think the past and imagine.

  2. writerxavier writerxavier says:

    அதுவும் சரி தான்… 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *