ஜோக்கர் : திரை விமர்சனம்

ஒரு ஆப்பிள் பழத்துக்குள் இருக்கும் விதைகளை எண்ணி விட முடியும். ஆனால் ஒரு விதைக்குள் இருக்கும் ஆப்பிள் பழங்களை எண்ணி விட முடியாது !

ஜோக்கர் திரைப்படம் அப்படி ஒரு விதையாக தமிழ்த் திரையுலகிலும், தமிழ் சமூகத்திலும் விழுந்திருக்கிறது. அது எத்தனை கனிகளைக் கொடுக்கப் போகிறது என்பது அந்த விதை விழுந்த நிலங்களைப் பொறுத்தது.

மனநிலை சரியில்லாதவன் போன்ற ஒரு ஜோக்கரை அறிமுகப்படுத்தி, அவனது வாழ்க்கையையும், வலியையும், சமூக அக்கறையையும் காட்சிப்படுத்தி, கடைசியில் “ஜோக்கர் யாருப்பா ? அவனா ? நீயா ? ” என கொஞ்சமும் கவலைப்படாமல் விரலை பார்வையாளனை நோக்கி நீட்டுவதற்கு அசாத்தியத் துணிச்சல் வேண்டும்.

அதுவும் தனது இரண்டாவது படத்திலேயே அப்படி ஒரு வலுவான விஷயத்தை எடுத்து, அதை கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாமல் பதிவு செய்திருக்கும் இலக்கியவாதி ராஜு முருகன் பாராட்டுதலுக்கு உரியவர்.

தமிழகத்தின் ஏதோ ஒரு கோடியில் இருக்கும் ஒரு ஏழை இளைஞனுக்கும் அவனுடைய கனவுகளை விளைவிக்க முடியாத படி ஊழல் குறுக்கே நிற்கிறது. ஒரு கழிப்பறை கட்டுவது என்பதை வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு வாழும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வறுமையின் விலா எலும்புகளிலும் பணம் உறிஞ்சும் பெருச்சாளிகள் மனசாட்சியை காரில் போட்டு நசுக்கிச் செல்கின்றனர்.

மணல் கடத்தல் , ஆழ்குழாய் அபாயங்கள், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு என சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இரண்டறக் கலந்திருக்கும் ஊழலை சமூக அக்கறை கொண்டவர்கள் எதிர்க்கிறார்கள். அத்தகைய எதிர்ப்புகளை சுற்றியிருக்கும் சாமான்ய மக்களே பகடி செய்கின்றனர். யாருக்காகப் போராடுகிறானோ அந்த மக்களே அவர்களை எதிர்ப்பது வரலாற்றில் தொடர்ந்து நடந்து வரும் துரோகம். இதன் பின்னணியில் இயங்குவதும் முதலாளிகளின் வன்ம அரசியல் தான்.

இதெல்லாம் சகஜம், இப்படித் தான் வாழவேண்டியிருக்கிறது, இது தானே நடைமுறை, அரசியல்வாதின்னா இப்படித் தான் இருப்பான் எனும் சமரசங்களுக்குள் வாழப் பழகிவிட்ட மக்களிடையே ஒரு சிலர் இன்னும் சமூக மேம்பாட்டுக்காகக் குரல் கொடுக்கின்றனர். அந்தக் குரல் அழிந்து வரும் உயிரினம் போல அரிதாகிக் கொண்டே இருக்கிறது.

வேடிக்கை பார்க்கும் மனிதர்களுக்கு உரிமைக்காகக் குரல் கொடுப்பது கூட நகைச்சுவையாய் தெரிகிறது. அப்படிப்பட்டவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாய் தெரிகிறார்கள். இழப்பதைத் தெரிந்து கொள்ளாமல் இழந்து கொண்டே இருக்கும்படி பழக்கப்பட்டு விட்டார்கள் மக்கள். இத்தகைய மக்களை தனது வசனம் மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் ஒரு சுயபரிசோதனைக்கு அழைக்கிறார் இயக்குனர்.

ஒரு மென்மையான காதல், ஒரு நெகிழ்வான கருணைக்கொலை மனு, ஒரு பதட்டமான போராட்டக்களம் என திரைப்படம் தனது உள்ளிருப்பை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டே பயணிக்கிறது. கொஞ்சம் விலகினால் டாக்குமென்டரி ஆகலாம் எனும் அபாயச் சூழலில் அதை நேர்த்தியாகக் கையாண்டிருப்பதில் இயக்குனரின் துணிச்சலை மீறி திறமை வெளியே தெரிகிறது.

கதையின் நாயகனாக வரும் சோமசுந்தரம் அசத்துகிறார். இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களில் அவர் காட்டும் நடிப்பு வேறுபாடு மலைக்க வைக்கிறது. இரண்டு காதாபாத்திரங்களும் இரண்டு வேறுபட்ட நபர்களோ என அடிக்கடி சந்தேகப்பட வைக்கிறது அவரது நடிப்பு.

போராடுவதையே வாழ்க்கையாகக் கொண்ட மு.ராமசாமி, ஒரு டிராபிக் ராமசாமி போல, பல்வேறு நகைப்புகளுக்கு ஆளாகிறார். எனினும் தூற்றும் சமூகம் தூற்றட்டும், என் கடன் பணி செய்து கிடப்பதே என தூசு தட்டிப் புறப்படுகிறார். ஜெயகாந்தனை நேரில் பார்ப்பது போன்ற அவரது உடலமைப்பும், குரலும் வசீகரிக்கிறது. படத்தின் முதுகெலும்பு இந்த கதாபாத்திரம் தான்.

கூடவே பயணிக்கும் காயத்ரி கிருஷ்ணா வசீகரிக்கிறார். மிகவும் எளிமையான தோற்றம், வலுவான கதாபாத்திரம் என படம் முழுக்க அழுத்தம் காட்டுகிறார். “அநீதிகளை கண்டு ஆவேசம் கொள்வாயெனில் நீயும் என் தோழனே” எனும் சேகுவேரா வசனத்தின் பெண்பதிப்பு அவர். அவரும் ராமசாமியும், சோமசுந்தரமும் இணையும் காட்சியும். அவர்கள் இணைந்து பயணிக்கும் காட்சிகளும் அத்தனை இயல்பு.

கதாபாத்திரங்களின் பெயர்களை இசை, பொன்னூஞ்சல், மன்னர் மன்னன் என தமிழக வரலாற்றின் பக்கங்களிலிருந்து தேடி எடுத்திருப்பதில் இயக்குனரின் மனம் வெளிப்படுகிறது.

ஒரு வசனத்தில் ஜெயலலிதாவைக் கிண்டலடித்தால், அடுத்த வசனத்திலேயே கலைஞரைக் கிண்டலடித்து தன்னை ‘பொலிடிக்கலி கரெக்ட்’ மனிதனாகக் காட்டிக் கொள்வதும். ஒரு காட்சியில் கர்த்தரை நக்கலடித்து, அடுத்த காட்சியில் மாரியம்மாவின் மானத்தை வாங்கி தன்னை பொதுவானவன் என வெளிப்படுத்திக் கொள்வதும் இயக்குனர் சறுக்கிய இடங்கள். அல்லது வெகுஜன விமர்சனத்துக்கு அச்சப்பட்ட இடங்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நிச்சயம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு கதாபாத்திரம் பவா செல்லதுரை. நானெல்லாம் ஜனாதிபதி மாளிகைக்கு உள்ளே இருக்க வேண்டிய ஆளு, வெளியே நிக்க வெச்சுட்டாங்க. “கொடுக்கலைன்னா எடுத்துக்கனும்டா பையா”, “ஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்துல ஒன்னுமே கிடையாதுடா” என அவர் கம்பீரமான குரலில் பேசும்போது மனதில் பளிச் பளிச் என தைக்கின்றன சிந்தனைகள்.

இசையும், ஒளிப்பதிவும் படத்தின் தரத்தை வெகுவாக உயர்த்திப் பிடிக்கின்றன. படத்தோடு இணைந்து பயணிக்கும் பாடல்களில் சில மனதை வருடுகின்றன, சில தீயாய் சுட்டுச் செல்கின்றன. மென்மையான அழகில் வசீகரிக்கும் ரம்யா பாண்டியன் நடிப்பிலும் வசீகரிக்கிறார்.

படத்தின் கடைசி வசனத்தில் தியேட்டரில் ஒரு சில நக்கல் குரல்கள் கேட்டன. நாம் வாழும் சமூகம் அத்தனை சீக்கிரம் மாறப்போவதில்லை என்பதை அது பிரதிபலித்தது. அமைதியாய் இருந்த மற்ற குரல்கள், மாற்றத்துக்கான விதையை சுமந்து செல்லும் பறவைகளாய் தெரிந்தன.

சகாயம் பண்ணுங்கனு சொல்லலை.. சகாயம் மாதிரி பண்ணுங்க’னுதான் சொல்றோம் !

ஜோக்கர், சீரியஸானவன்.

7 thoughts on “ஜோக்கர் : திரை விமர்சனம்

 1. திலிப் says:

  படம் இன்னும் பார்க்கவில்லை நண்பா. இருந்தாலும் இந்த மாதிரி படங்களை பாராட்டியே ஆகவேண்டும். நம் நாட்டில் ஒரு மாற்றம் வரும் என்று நம்புகிறேன். வாழ்க நம் தேசம், வளர்க நம் மக்கள்.

  1. writerxavier writerxavier says:

   Super Bro. Yes, indeed.

 2. Vinoth Ragunathan says:

  Awesome review .. movie was clean and clear without any unwanted things.

  1. writerxavier writerxavier says:

   Thanks Vinoth. 🙂

 3. அருமையான அழுத்தமான, ஆழமான விமர்சனம். இயலும்இடங்களில், உங்கள் பெயரோடு, இந்த விமர்சனத் துளிகளை என் மேடைப் பேச்சில் பயன்படுத்த அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன். முதலிரண்டுவரிகள் கவிதை போல உள்ளிழுத்து படிக்கவைத்தன. அவை உங்கள் வரிகள் தானே? அருமை. நன்றி நண்பரே.

  1. writerxavier writerxavier says:

   Kandippaaha payanpaduthalaam sir. First two lines I heard in a preaching, not my own.

 4. சிலம்பு ராஜேந்தர் says:

  ஒரு முற்போக்கு சிந்தனைக்கான செயல் வடிவம் தான் இந்த ஜோக்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *