போதை தாதாக்கள்

போதை தாதாக்கள்

உலகுக்குப் போதை சப்ளை செய்வது மிகப் பெரிய தொழில். ஒரு பெரிய கார்ப்பரேட் போல இயங்கும். ஆனால் எங்கே நடக்கிறது எப்படி நடக்கிறது என்பது பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தால் தான் தெரியும். ஒவ்வொரு வினாடியும் நம்மைச் சுற்றி முகமற்ற நிழல் போல இந்த பிஸினஸ் நடக்கும். அதனால் தான் இதை நிழல் உலகம் என்கிறார்கள். இந்த போதை பிஸினஸில் உலகைக் கலக்கிய கில்லாடிகளில் சிலர்…

 

  1. பாப்லோ எமிலியோ எஸ்கோபர் கேவ்ரியா (Pablo Escobar)

தாதாக்களின் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் இவர். போதையால் உலகையே கிறுகிறுக்க வைத்தவர். கொலம்பியாவிலிருந்து இயங்கும் மெடிலின் கார்டெல் எனும் தாதா கோஷ்டியின் தலைவராய் இருந்தார். “இரக்கம் ன்னா என்ன சரக்கா” என கேட்குமளவுக்குக் கொடூரன். யாராச்சும் தனக்கு எதிராய் ஒரு வார்த்தை பேசினால் அவனுடைய தலையை வெட்டுவார். ஏதாவது நீதிபதி எதிரான தீர்ப்பு சொன்னால் அவர் கதி அதோ கதி தான். இதுவரை நீதி சொல்லி செத்துப் போன நீதிபதிகளின் எண்ணைக்கை 30. எதிராய் வந்ததால் கொல்லப்பட்ட போலீஸ்காரர்கள் மினிமம் 400. எப்படிப் பார்த்தாலும் இவருடைய அராஜகத்தால் அமரரானவர்கள் 3000 பேருக்கும் அதிகம் என்பது கணக்கு. உலகின் 80 சதவீத கோகைன் பிஸினஸையும் ஒரு காலத்தில் தனது போதைக் கைக்குள் வைத்திருந்தார். அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, பெரு, பொலிவியா, கொலம்பியா என உலகின் பல நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தினார். 1989ல் உலகின் ஏழாவது பணக்காரர் இவர் தான். சொத்து மதிப்பு இருபத்து ஐந்து பில்லியன்கள். 1993 டிசம்பர் 2ம் தியதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சினிமா, டாக்குமெண்டரி, வரலாறு, வீடியோ கேம் என இவர் சாவுக்குப் பின் சம்பாதித்தவர்கள் எக்கச் சக்கம்.

 

  1. அமாடோ காரிலோ பியாண்டஸ் (Amado Carrillo Fuentes )

மெக்ஸிகோவை அலற வைத்த தாதா. அமெரிக்காவின் கண்களில் கால் விரலைக் கூட இட்டு ஆட்டியவர். அமெரிக்காவிற்குள் கோகைன் எனும் போதைப் பொருளை வேறெந்த தாதாவும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு போட்டுத் தாக்கியவர். 25 பில்லியன் டாலர்கள் இவனது சொத்து மதிப்பாக இருந்தது. “லார்ட் ஆஃப் த ஸ்கைஸ்” என்பது இவருடைய காரணப் பெயர். காரணம் ஸ்கையைப் பொறுத்தவரை ஐயாவுடைய கை தான் ஓங்கியிருந்தது. கடத்தலுக்காக ஸ்பெஷலாக 22 தனியார் ஜெட் விமானங்கள் வைத்திருந்தார். இந்த விமானங்கள் போதைகளை வானத்தின் பாதைகள் வழியாகக் கடத்தின. இவனைப் போல கில்லாடி இருந்ததில்லை என இவன் இறந்தபிறகு அமெரிக்கா நடுங்கிக் கொண்டே ஒப்புக் கொண்டது. மெக்ஸிகோ, அமெரிக்கா என இரண்டு நாடுகளும் ஒன்றாய் சேர்ந்து தேடியும் கண்ணாமூச்சி விளையாடினார். கடைசியில் உருவத்தை மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்தான். என்ன செய்ய, அந்த சர்ஜரியே அவனுக்கு எமனாய் மாற, 1997 ஜூலை 3ல் இறந்தார்.

 

  1. ஜாக்குவம் கஸ்மேன் லோரா (Joaquín Guzmán Loera )

இவரும் மெக்ஸிகோவின் தாதா தான். இவருக்கு முன்னால் தாதாவாக இருந்தவர் ஓசீல் கார்டெனாஸ் குல்லன். அவருக்குப் பின் தாதா கிரீடத்தை வாங்கிக் கொண்டவர் இவர். இவருக்கு “எல் சாப்போ” என்றொரு செல்லப் பெயர் இவருக்கு உண்டு. எல் சாப்போ என்றால் ஸ்பேனிஷில் குள்ளன் என்று அர்த்தம் ! குள்ளனாக இருந்தாலும் சுள்ளான் இவர். 1990 களின் துவக்கத்தில் கோகைன் கடத்தலில் கலக்கினார். பெப்பர் டப்பாக்களில் கோகைனை அமெரிக்காவுக்குக் கடத்தி அமெரிக்காவிற்குக் கடுமையான குடைச்சல் கொடுத்து வந்தார். 1993ல் அமெரிக்காவுக்கு 7.3 டன்   கோகைன் அனுப்பிய போது மாட்டிக் கொண்டார். “அப்பாடா அகப்பட்டான்” என்று நிம்மதியுடன் அவரை ஜெயிலில் போட்டார்கள். நம்ம ஊர் சினிமாவில் வருவது போல 2001ம் ஆண்டு ஹாயாக ஒரு லாண்டரி வேனில் ஏறி எஸ்கேப் ஆகிவிட்டான். கடுப்பில் தேடிக்கொண்டிருக்கிறது போலீஸ். யாராவது தகவல் சொன்னால் 5 மில்லியன் டாலர் பரிசு கிடைக்கும் !

  1. குன் ஷா, த ஹெராயின் கிங்

குன் ஷாவின் செல்லப் பெயர் ஹெராயின் கிங். பேரக் கேட்டாலே மேட்டர் புரியுதுல்ல.  1960களில் தன்னுடன் 800 பேர் கொண்ட ஒரு படையை உருவாக்கினார். அந்தப் படை பர்மாவின் ஷான் காட்டுக்குள் புகுந்து காட்டை அபகரித்து அதில் ஹெராயின் பயிரிட்டது. உலகிலேயே மாபெரும் ஹெராயின் சப்ளையர் ஆனார் கான். சீனாவில் பிறந்த இவர் தனது திரை மறைவு வேலைகளுக்காக தேர்ந்தெடுத்த இடம் பர்மா. அங்கிருந்து ஹெராயினை கொஞ்சமும் தங்கு தடையில்லாமல் அவர் கொண்டு சேர்ந்த இடம் அமெரிக்கா. அமெரிக்கா எவ்வளவோ போராடியும் கானைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரலாம், ஷாவைக் காலி பண்ணுங்கள். இரண்டு மில்லியன் தரேன் ஆளைக் கொடுக்கிறீங்களா என்றெல்லாம் பர்மாவிடம் அமெரிக்கா கெஞ்சியது. பர்மா பிடிகொடுக்கவில்லை. 1989ல் ஆயிரம் டன் ஹெராயினை நியூயார்க்கிற்குக் கடத்தியபோது கண்டுபிடித்து விட்டனர். அப்போதும் இவர் அசரவில்லை. ஒழுங்காக என்னுடைய எல்லா ஹெராயினையும் வாங்கிக் கொள் அல்லது எல்லாவற்றையும் கடத்தல் காரர்களுக்கு விற்று அமெரிக்கா முழுக்க வினியோகிப்பேன் என மிரட்டினார்.

1996ல் தாமாகவே முன் வந்து பர்மா அரசிடம் சரணடைந்தார். பர்மா அரசு அவரை ராஜ மரியாதையோடு விடுவித்தது. கடைசி காலத்தில் பரிசுத்தவானாக அவதாரம் எடுத்து ஊருக்கு நல்லது செய்து சொகுசு மாளிகையில் ஹாயாய் வாழ்ந்தார். 73வது வயதில் மரணமடைந்தார்.

  1. கிரிசெல்டா பிளாங்கோ (Griselda Blanco )

1943ல் பிறந்த பிளாங்கோ தனது மூன்று கணவர்களையும் தன் கையாலேயே போட்டுத் தள்ளிய கில்லாடி. மேடத்துக்குப் பிடித்த படம் காட் பாதர்! தன் பையனுக்கே அந்த படத்தின் கேரக்டர் பெயரைப் போடுமளவுக்கு கடத்தல் பிரியை. ஆனால் இவர் கடத்தல் தொழிலுக்கு வந்ததன் பின்னணியோ துயரமானது. உதாசீனப்படுத்திவிட்டு ஓடிப் போன அப்பா. தண்ணியில் தத்தளித்த கொடுமைக்கார அம்மா. வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு இவர் ஓடியபோது பதின் வயது துவக்கம். பன்னிரண்டு வயதில் பசி எடுத்தபோது உடலைத் தவிர விற்க ஏதும் இருக்கவில்லை. குழந்தையிலேயே வலியுடன் வாழ்ந்த அவள் பின்னர் அமெரிக்கா போய் செட்டிலானார். அங்கிருந்து தான் ஆரம்பமானது கடத்தலின்  பால பாடம். அமெரிக்காவின் மயாமியில் இவருடைய கொடி கொஞ்சம் கொஞ்சமாய் பறக்க ஆரம்பித்தது. அதிரடி, வன்முறை, கொடூரம் என பிளாங்கோ கடத்தல் சிம்பல் ஆனாள். 1970களின் பிற்பகுதியிலும், 80 களில் முற்பகுதியிலும் பிளாங்கோ எனும் பெயரைக் கேட்டாலே மயாமி நடுங்கும். இவர் கொடி உச்சத்தில் பறந்தபோது இவருடைய பிஸினஸ் ஒரு நாளைக்கு 100 மில்லியன் வரை கூட இருந்தது !!! இவருடைய பட்டப் பெயர் “மயாமியின் கோகைன் மஹாராணி” ! 1985ல் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்து உள்ளே தள்ளினர். பின் 20 ஆண்டுகள் ஜெயில் சாப்பாடு தான். வெளிவந்தபின் கொலம்பியாவுக்குப் பறந்தார். இப்போது எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதெல்லாம் மர்மம் !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *